உள்ளூர் செய்திகள்

பைபாஸ் சர்ஜரிக்கு பின் விமான பயணம் எப்போது?

* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொழுப்பு, பிரஷர், சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? ச.கண்ணன், வத்தலக்குண்டு.சர்க்கரை நோய், உடலின் உள்உறுப்புகளை பாதிக்கும் கொடூர நோய். மூளை, கண், சிறுநீரகம், இருதயம், நரம்பு, ரத்தநாளங்களை பாதிக்கும். சர்க்கரை நோய் வந்தவுடனேயே, உணவு கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சியை கடைபிடிக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு, வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின், 140 மி.கி.,க்கு கீழும் இருக்க வேண்டும். HBA1C என்பதன் அளவு 6.5 கீழ் இருப்பது சிறந்தது. ரத்தஅழுத்தத்தை பொறுத்தவரை, சர்க்கரை நோயாளி களுக்கு 130/85 கீழ் 120/80 என்ற அளவில் இருப்பது சிறந்தது. ரத்தத்தில் LDL எனும் கெட்ட கொழுப்பின் அளவு அவசியம் 100 மி.கி.,க்கு கீழ் இருந்தாக வேண்டும். இவை அனைத்தையும் சரிவர கடை பிடித்தால், உள்உறுப்புகளின் பாதிப்பை பெருமளவு தடுக்க முடியும். * எனக்கு வயது 77. 2004ல், இதயவலி வந்தது. அன்று முதல் 8 ஆண்டுகளாக, AMLODIPINE மற்றும் LOSARTAN மற்றும் ATORVASTATIN என்ற மருந்துகளை எடுத்து வருகிறேன். எந்த பிரச்னையும் இல்லை. இதை தொடர்ந்து எடுக்கலாமா? எஸ்.சாத்தையா, சிவகங்கை.இந்த மூன்று மருந்துகளுமே சிறந்தது. இவை, ரத்தஅழுத்தத்தை குறைத்து, ரத்தத்தில் கொழுப்பை குறைத்து, மறுபடியும் மாரடைப்பு வராமல் பார்த்துக் கொள்ளும். நீங்களாக இம்மருந்துகளை குறைக்கவோ, நிறுத்தவோ கூடாது. பக்கவிளைவு மிகவும் குறைவு. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, இருதய டாக்டரிடம் ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்வது நல்லது. இம்மருந்துகளை தாராளமாக தொடர்ந்து எடுக்கலாம். எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 2 மாதங்களாகிறது. நான் விமான பயணம் மேற்கொள்ளலாமா? பி. கல்யாணசுந்தரம், சிவகாசி.பைபாஸ் சர்ஜரி என்பது, இருதய ரத்தநாளங்களில் உள்ள அடைப்பை நெஞ்சி லிருந்தோ, காலில் இருந்தோ, கையில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து, இருதயத்தில் பொறுத்துவதாகும். பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், முதல் 2 மாதங்களுக்கு விமான பயணத்தை தவிர்க்க வேண்டும். அதன் பிறகு, தாராளமாக விமான பயணத்தை மேற்கொள்ளலாம். எனக்கு 2 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. ஒரு மாதமாக, கழுத்திலும், தாடையிலும் வலி ஏற்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு நன்கு கட்டுப்பாட்டில் உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்? எம். அபுபக்கர், கீழக்கரை.சர்க்கரை நோயாளிகள் நடக்கும்போது, நடுநெஞ்சு, இடது நெஞ்சு, வலது நெஞ்சு, தோள்பட்டை, கை, முதுகு, வயிற்றின் மேல்பகுதி, கழுத்து, தாடையில் வலி ஏற்பட்டால், அது இருதய நோய்க்கான அறிகுறிதான். நீங்கள் உடனடியாக இருதய நோய் நிபுணரை சந்தித்து, ECHO மற்றும் TREADMILL டெஸ்ட் செய்வது அவசியம். இதுதவிர, ஆஞ்சியோகிராம் செய்து பார்ப்பதும் நல்லது. இம்முடிவுகளுக்கு ஏற்ப, மருந்து மாத்திரை சிகிச்சையோ, பலூன் சிகிச்சையோ அல்லது பைபாஸ் சர்ஜரியோ தேவைப்படலாம். - டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்