உள்ளூர் செய்திகள்

மருத்துவத் தொழிலுக்கு ஏற்றவர் யார்?

மருத்துவம் பார்த்தல், ஒரு பரம்பரை தொழிலாக பண்டைய காலத்தில் இருந்து வந்தது. பரம்பரையாகவும், குரு, சீடன் முறைப்படியும் மருத்துவம் பின்பற்றப்பட்டு வந்தது. பின் நாகரிக வளர்ச்சியின் காரணமாகவும் மருத்துவத் தொழிலின் மேல் உள்ள ஆர்வம் காரணமாகவும் இது ஒரு கல்வித்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.ஆனால், தேரையர் யமக வெண்பா மற்றும் தேரையர் கரிசல் நூலில் மருத்துவ தொழிலுக்கு தகுதியற்றவர்களாக லரை தேரையர் சித்தர் குறிப்பிட்டுள்ளார். எப்பொழுதும் கவலையுடன் இருப்பவன், உளி கொண்டு கல்லை செதுக்குபவன், காட்டில் வாழ்பவன், வியாபாரம் செய்பவன், சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவன், எடுபிடி வேலை செய்பவன், எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருப்பவன், ராஜவாழ்க்கை வாழ்பவன், சன்னியாசி போன்றவர்கள் மருத்துவ தொழிலுக்கு ஏற்றவர்கள் அல்ல. ஏனெனில் இவர்கள் தங்கள் தொழிலுக்கேற்ப புத்தி நுட்பமின்றி, பேராசையுடன், தேர்ச்சியில்லாமல், நோயாளிகளின்மேல் இரக்கப்படாமல், புத்தி நுட்பத்துடன் செயல்படாமல், மனம் போன போக்கில் செயல்பட்டு, நோயை சரியாக கணிக்காமல், நோயை அதிகரித்துவிடுவர்.அதைப்போல் உடற்கூறு தெரிந்தவர்கள், பேராசையற்றவர்கள், காமம், சூது, மது, பொய், களவு, கொலை போன்ற பாதகத்தை நீக்கியவர்கள், சுறுசுறுப்புடையவர்கள், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள், மருத்துவத் தொழிலுக்கு ஏற்றவர்களாவர் என்றும் தேரையர் சித்தர் குறிப்பிட்டுள்ளார்.- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !