உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / நித்தமும் செத்துப் பிழைக்கிறேன்...

நித்தமும் செத்துப் பிழைக்கிறேன்...

கள்ளச் சாராயம் ஒரு குடும்பத்தை எவ்வளவு சீரழிக்கும் என்பதற்கான உதாரணம்தான் பிச்சையம்மாள்..கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய சம்பவம் நடைபெற்ற கருணாபுரம் பகுதியை சுற்றி வந்த போது தெருவில் ஒரு பெண் நாவல்பழம் விற்றுக்கொண்டு சென்றார்.எங்களைப் பார்த்ததும்,' தம்பிகளா நீங்களாவது கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கிங்களேன்? காலையில இருந்து வியாபாரமே இல்லை! சாயந்திரத்திற்குள்ளே அந்த குடிகாரனுக்கு! கொடுக்கவாவது பணம் வேணும்'..என்றார்.'நீங்க கொடுக்கிற காசுலதான் கஞ்சி காய்ச்சணும்னு கூட சொல்லு தாயி ஏத்துக்கிறோம், ஆனா குடிகாரனுக்கு கொடுக்கணும்றீயே அதுதான் புரியல' என்றதும்..முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை தனது அழுக்கு முந்தானையால் துடைத்துக் கொண்டு,தனது கதையை சொல்ல ஆரம்பித்தார்.கல்யாணம் கட்டிக்கிட்ட நாள் முதலா குடிதான் அவனுக்கு முதல் பொண்டாட்டி, அவன்னா அது என் புருஷன்தான்.ஆனா புருஷனுக்குண்டான எந்த தகுதியும் இல்ல, ஒரு தம்பிடித்துட்டு சம்பாதிக்க வழியில்ல, ஆனா வாயும் கையும் மட்டும் ஏகத்துக்கு நீளும்.நான் விடிகால சந்தைக்கு போய் அன்னைக்கு என்ன பழம் குறைஞ்ச விலைக்கு கிடைக்குதோ? அதை வாங்கி தெருத்தெருவாய் பொழுது சாயற வரைக்கு அலைந்து திரிந்து விற்றால்தான் ஒரு நாளைக்கு இருநுாறு ரூபாயாவது கிடைக்கும்.இதுல முதல்ல ஒரு நுாறு ரூபாயை அவனுக்கு எடுத்து வச்சுரணும், நான் வர்ர வாசலைப் பார்த்துக்கிட்டே கழுகு மாதிரி காத்திட்டு இருப்பான், வந்ததும் பிடுங்காத குறையா நுாறு ரூபாயை துாக்கிட்டு சாராயம் குடிக்க போயிடுவான்.அதுவரைக்கும் கூட பராவாயில்லை, அதுக்கப்புறம் சாராயம் குடிச்சுட்டு வந்து என்னை பேசக்கூடாத வார்த்தையில பேசி அடிப்பான் பாரு.. அததான் தாங்கமுடியாது.அவனோட இயலாமை, அதை எங்கிட்ட காட்டுறான்.. சொந்தம்னு கட்டி வச்சாங்க ஒரு சொகம் கிடையாது, விட்டுட்டு போகவும் முடியல பிறந்த வீட்டுக்கும் போக வழியில்ல, எதிர்க்கவும் திராணியில்ல நித்தம் நித்தம் செத்து பிழைக்கிறேன்.எங்க இருந்துதான் இவனுகளுக்கு சாராயம் கிடைக்குதோ தெரியல, இவ்வளவு கெடுபிடியிலும் கூட குடிச்சுட்டு வந்துருவான்.எனக்கு கட்டிக்க ஒரு நல்ல சேலை இல்ல,செருப்பு தேய்ந்து ஒட்டையே விழுந்துருச்சு, ஓரு செருப்பு மாத்தணும் அதுக்கு காசு சேரமாட்டேங்குது அவனுக்கு போக மிச்ச காசுல எதையே வேகவச்சு எப்படியோ சாப்பிட்டு நாளைக் கடத்திட்டுருக்கேன்.நாள் கிழமை விடுமுறை எல்லாம் கிடையாது, என்னைக்காவது முடியாம படுத்திருந்தா அன்னைக்கு குடிக்க காசு கிடைக்காதுன்னு தெரிஞ்சுகிட்டு இன்னும் அதிகமா அடிப்பான் அதுக்கு பயந்துட்டு இருமிகிட்டவாது ஒரு நுாறு ரூபாய் காச சம்பாதிக்க தெருவுக்கு வந்துருவேன்.இந்த கள்ளச் சாராயத்தை அடியோடு ஒழிப்பாங்காளா?, என் புருஷன் மாதிரி ஆட்கள் திருந்துவானுங்களா? ..சம்பாதிக்காட்டியும் பராவாயில்லை அடிக்கமா இருந்த போதும் தம்பி..இதெல்லாம் நடக்குமா? என்று மீண்டும் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாமல் கேட்கிறார்.கள்ளச் சாராயம் இப்படி இன்னும் எத்தனை பிச்சையம்மாக்களை உருவாக்கி வைத்துள்ளதோ?கனத்த இயத்தோடு கனிசமாக உதவமுடிந்ததே தவிர, அவரது கேள்விகளுக்கு பதில் தர இயலவில்லை...-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venkatesan Ramasamay
ஆக 04, 2024 19:47

பாழாய்ப்போன கள்ளச்சாராயம் மக்களை பாடாய் பாடுத்துகிறது


shyamnats
ஜூலை 08, 2024 11:52

சாராயம் பல குடும்பங்களை கெடுக்கிறது என்று சொல்ல முடியாது, இங்கு சில குடும்பங்களை மெகா கோடீஸ்வரர்களாக்கியது, ஆக்குகிறது , இன்னும் பொது மக்கள் நலன் கருதாத ஆட்சியாளர்கள் இருக்கும் வரை கோடீஸ்வரர்கள் ஆவது தொடரும். இன்னும் அதிகமான வழிகளில் மதுவை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப்பார்கள். .ஒரு சினிமா பாடலில் வருவது போல ... மக்களாக பார்த்து திருந்தா விட்டால் மதுவை ஒழிக்க முடியாது.


Siva Panchalingam
ஜூலை 07, 2024 06:59

இப்படியான குடிகார புருஷன்மாரை ஈழ மண்ணில் விடுதலை புலிகளின் ஆட்சி காலங்களில் அவர்களுடைய தமிழ் ஈழ காவல் துறையும், நீதி துறையும் அன்பாக நெறிப்படுத்துவார்கள். அது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. அவர்களை அன்பாக அழைத்து போய் பாதுகாப்பு பங்கருக்குள் வழமை போல் உணவுகள் எல்லாம் வழங்கி சிறு சிறைச்சாலை வாழ்வியலுக்குள் வைத்திருப்பதுபோல் வைத்துருப்பார்கள். முடிவில் அவர்களாகவே திருந்திக்கொள்வார்கள்.


S.kausalya
ஜூலை 06, 2024 17:20

இவர்களின் இப்படிபட்ட துயரத்தில் தான் சாராய ஆலை அதிபர்கள் மஞ்சள் குளி க்கி றார்கள் . மனசாட்சியே இல்லாமல் இவர்களின் கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தில் சொத்து சுகம் என அனுபவிக்கும் சாராய ஆலை அதிபர்கள் வம்சமே அழிய வேண்டும்.


angbu ganesh
ஜூலை 05, 2024 11:39

என்னங்க நாட்டு மக்கள் ரொம்ப சந்தோசமா இருக்காங்கன்னு முதல்வர் அய்யா பேட்டி எல்லாம் கொடுக்கறார், சும்மா பொய் சொல்லாதீங்க


rama adhavan
ஜூலை 04, 2024 07:33

சமூக நல துறை, வருவாய் துறை, காவல் துறை, என்ன தான் செய்கிறது?சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் ஏன் உதவிக்கு வரவில்லை? இது போல் எத்தனை பேரோ? நாடு குடியால் நாறுகிறது.


Sridhar
ஜூலை 03, 2024 12:53

நாடே சீர்கெட்டாலும் தலைமுறையே நாசமானாலும் கேடுகெட்ட திருட்டு கும்பலுக்கு காசுகொடுத்தால் வோட்டு போடுவேன்னு அலையும் கும்பல் நித்தம் நித்தம் செத்து தான் பிழைக்க வேண்டும் தீர்வு மக்கள் கையில் தான் இருக்குது. அடுத்த முறையாவது நல்ல சிந்தனையோடு மனுசத்தனத்தோடு இந்த திருட்டு கும்பலுக்கு எதிரா வோட்டளியுங்க. உண்மையான விடிவு வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை