UPDATED : டிச 23, 2025 05:14 PM | ADDED : டிச 23, 2025 05:12 PM
டிசம்பர் மாதத்துக் கடும் குளிர்காற்று காசா கடற்கரையை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அங்கே காணப்படும் கிழிந்த கூடாரங்களுக்கு இடையே, ஒரு சிறுமி கையில் ஒரு துண்டு ரொட்டியுடன் கனத்த பார்வையுடன் காணப்படுகிறாள் அவள் கையில் இருக்கும் அந்த துண்டு ரொட்டி, வெறும் உணவல்ல; உயிர்வாழத் துடிக்கும் ஒரு இனத்தின் மவுன சாட்சி.இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் நில உரிமைப் போராட்டமே இந்தப் போரின் அடிப்படை. 2023 அக்டோபரில் தொடங்கிய இந்தத் தீவிர மோதல், காசாவை ஒரு மிகப்பெரிய இடுகாடாக மாற்றியுள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து வீதியில் நிற்கின்றனர். இஸ்ரேலின் முற்றுகையினால் உணவு, மருந்து மற்றும் அடிப்படை வசதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், காசா இன்று உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. இந்த அரசியல் மற்றும் ராணுவ மோதல்களுக்கு இடையில், எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.காசாவில் இன்று ஒருவேளை உணவு என்பது மிகப்பெரிய ஆடம்பரமாகிவிட்டது. போரினால் உணவு விநியோகம் முடங்கியுள்ள நிலையில், அந்தச் சிறுமி கையில் வைத்திருக்கும் அந்த எளிய ரொட்டித் துண்டு, ஒருவேளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கிய மிகக்குறைந்த ரேஷன் உணவாக இருக்கலாம். சத்துணவு குறைபாட்டினால் உடல் நலிவுற்றிருந்தாலும், பசி அவளை அந்த மணல் நிறைந்த சூழலிலும் அந்த ரொட்டியை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளச் செய்திருக்கிறது.சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, பல மைல் தூரம் அலைந்து திரிந்து, இறுதியில் இந்தக் கடற்கரை மணலில் தஞ்சமடைந்துள்ளாள் அந்தச் சிறுமி. அவளைச் சுற்றி இருக்கும் கூடாரங்களில் தூய்மையான குடிநீரோ, முறையான சுகாதார வசதியோ இல்லை. எந்நேரமும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் சூழலில், விளையாட வேண்டிய வயதில் பசிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள் . அந்தச் சிறுமியின் கண்களில் தெரியும் அந்த வெறித்த பார்வை, அவள் தன் பிஞ்சு வயதிலேயே சுமக்க முடியாத துயரங்களைச் சுமந்துவிட்டதைக் காட்டுகிறது.காசாவின் பல குடும்பங்களில், கிடைக்கும் மிகக் குறைந்த உணவைத் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, பெற்றோர்கள் பல நாட்கள் பட்டினியாகவே காலத்தைக் கடத்துகின்றனர். அந்தச் சிறுமியின் கையில் இருக்கும் அந்த ரொட்டித் துண்டு கூட ஒருவேளை அவளது தாய் அல்லது தந்தை தனக்குப் பசித்தும் உண்ணாமல் அவளுக்காகக் கொடுத்த அன்பின் பங்காக இருக்கலாம்.பள்ளிக்கூடம் சென்று கையில் புத்தகம் வைத்திருக்க வேண்டிய வயதில், உணவிற்காக லாரிகள் வரும் திசையையும், வானத்தில் இருந்து விழும் உணவுப் பொட்டலங்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்தச் சிறுமியின் நிலை உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்க வேண்டும்.இந்த உலகளாவிய அதிகாரப் போட்டிக்கு இடையில், அந்தச் சிறுமியின் மௌனமான பார்வை கேட்கும் ஒரே கேள்வி இதுதான்: 'நாளை எனக்கு ஒரு துண்டு ரொட்டி கிடைக்குமா? அல்லது என் எதிர்காலம் இந்த மண்ணோடு மண்ணாக புதைந்துவிடுமா?'- எல். முருகராஜ்