உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / மரணக் குன்றாக மாறிய திஸ்கான் மலை

மரணக் குன்றாக மாறிய திஸ்கான் மலை

ஒரு கைபேசிக்காக ஊரே பார்த்திருக்க, தாய், தந்தை, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஆயிரம் அடி உயர மலையிலிருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், மகாராஷ்டிராவையே உலுக்கியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரைச் சேர்ந்தவர் முரளி (48). இவரது மனைவி சங்கீதா (42). இவர்களின் ஒரே மகன் குணால் (19). கல்லூரியில் படித்து வந்த குணால், குடும்பச் சூழலையும் மீறித் தன் ஆசைக்காக விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் ஒன்றை 'மாதத் தவணை' முறையில் வாங்கியுள்ளார். 'நமது வசதிக்கு இது தேவையா?' என்று பெற்றோர் கண்டித்ததோடு, தவணைத் தொகையைத் தர மறுத்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த குணால், 'நான் எதற்கு உயிர் வாழ வேண்டும்?' எனக் கூறிவிட்டு, வீட்டின் அருகே இருந்த ஆயிரம் அடி உயர 'திஸ்கான்' மலைக்குன்றின் உச்சியை நோக்கி வெறிபிடித்தவர் போல் ஓடியுள்ளார். பேரதிர்ச்சியடைந்த பெற்றோரும், பதறியடித்துக் கொண்டு அவர் பின்னாலேயே ஓடினர்.மலை உச்சிக்குச் சென்ற குணால், 'யாராவது அருகில் வந்தால் கீழே குதித்து விடுவேன்' என விளிம்பில் நின்று மிரட்டியுள்ளார். பதறிய பெற்றோர், 'நீ கேட்டபடியே நடந்துக்கிறோம்டா... தயவுசெஞ்சு கீழே இறங்கி வா!' எனக் கதறியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், பஞ்சாயத்து தலைவரும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், குணால் தவறி விழுந்தால் அவரைப் பிடிப்பதற்காக உடனடியாக பாதுகாப்பு வலைகளை (Safety Nets) விரிக்க முயன்றனர். ஆனால், அது கரடுமுரடான பாறைகள் நிறைந்த பள்ளம் என்பதால் வலையைச் சரியாக விரிக்க முடியவில்லை. மேலும், குணால் மலையின் கூர்மையான விளிம்பிலேயே அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்ததால், அவர் எந்த இடத்தில் விழுவார் என்பதைக் கணிக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் கையறு நிலையில் தவித்தனர்.சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மகனை எவ்வாறாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்பில், தந்தை முரளி மெல்ல மெல்ல நகர்ந்து மகனை நெருங்கினார். 'உங்க அம்மாவைப் பார்ரா... நீ இல்லாம அவ வாழமாட்டாடா!' என்று அழுதுகொண்டே மகனைச் சட்டெனத் தாவிப் பிடிக்க முயன்றார்.ஆனால், குணால் அவரை விலக்கித் தள்ள முயல... இருவருக்கும் இடையே நடந்த நெஞ்சைப் பிளக்கும் போராட்டத்தின் இறுதியில், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அப்பாவும் மகனும் ஆயிரம் அடி பள்ளத்தில் இருந்து கிழே விழுந்து உடல் சிதறி இறந்தனர்.கண் முன்னே கணவனும், உயிராக வளர்த்த மகனும் பாறைகளில் மோதி உடல் சிதறிப் பலியானதைக் கண்ட தாய் சங்கீதா, கதறித் துடித்தபடி 'குணால்... நானும் வர்றேன்டா!' எனக் கூச்சலிட்டவாறே அதே கணத்தில் அந்த மலையிலிருந்து கீழே குதித்து இறந்து போனார்.ஒரே நொடியில், மூவரின் உடல்களும் இரத்த வெள்ளத்தில் சிதைந்து கிடந்ததைக் கண்டு, காப்பாற்றத் துடித்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.ஒரு கைபேசி மோகத்தால், சில நிமிடங்களில் ஒரு குடும்பமே தடம் தெரியாமல் அழிந்துபோன இந்தச் சோகம், அப் பகுதி மக்களின் நெஞ்சை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2026 05:54

இங்கே கைபேசி மோகமா இல்லை அரசின் அஜாக்கிரதையா ? nimhans எனப்படும் மறுத்தவமனையில் வாலன்டியராக வாராவாரம் செல்லும் விவசாய நண்பர் சஞ்சீவய்யா கூறியதை இங்கே எழுத முனைகிறேன் , அடலொஸ்ண்ட் எனப்படும் பிரிவில் இருக்கும் இளவயது பால்யத்தினரை கண்டுகொள்ளாமல் விட்டுவருகிறோம் , இலவசப்பேருந்து , இலவச டிவி என்று அலையும் நாம் ஒரு கொரோனாவை விட மிகக்கொடிய lazyness வீறுகொண்டு வரும் இந்த வயது பருவத்தினரை Adolescent Psychiatry Centre APC councelling செய்யும் வாலன்டியர் எனது நண்பர் , இந்த apc யில் இருக்கும் patients 90 சதவீதம் மொபைலுக்கு அடிக்ட் ஆனவர்கள் , ஆனால் அரசு இதனை மெத்தனமாக கையாண்டு வருவதை வேதனையோடு தெரிவித்தார் , எனக்கு எல்லாம் தெரியும் என்று அலையும் மருத்துவர்கள் ஒருபுறம், patients ஒருபுறம்