UPDATED : செப் 19, 2024 04:12 PM | ADDED : செப் 19, 2024 04:07 PM
ஒரு வாரம் ஆகிறது ஆனாலும் யானை சுப்புலட்சுமியின் இறப்பு தந்த சோகம் குறையவில்லைகாரணம் எந்த கோயில் யானைக்கும் ஏற்படக்கூடாத கொடிய மரணம் இந்த யானைக்கு ஏற்பட்டதுதான்.சிவகெங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலுக்கு கடந்த 71 ஆம் குண்டு ஆத்தங்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உபயமாக இந்த யானையைக் கொடுத்தார்.சுப்புலட்சுமி என்ற பெயரிட்டு அந்த பெண் யானையை வளர்த்தனர்,சுப்புலட்சுமி கோயிலுக்கு ஒரு பெரிய செல்வம் என்றால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலருக்கு ரொம்பவே செல்லம்.
ஆனால் அந்த செல்லத்தை கோயில் நிர்வாகம் செல்லமாக வளர்த்தாக தெரியவில்லை.ஒவ்வொரு கோயிலிலும் தங்கள் யானைக்கு நீச்சல் குளம்,ஷவர் குளியல், சொகுசு கட்டிடம் என்று கட்டிக் கொடுத்து பராமரிக்கும் நிலையில் சுப்புலட்சுமி கோவில் வாசலில் ஒரு தகர கொட்டகையில்தான் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.சாதாரண கட்டடமே இந்த வெயிலுக்கு சூடாக இருக்கும் நிலையில் கந்தக பூமியான குன்றக்குடியில் ஒரு தகர கொட்டகையின் கீழ் இருப்பது என்பது எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும், வாய் இல்லாத ஜீவன் யாரிடம் போய் முறையிடும்.பெரிய மனது பண்ணி 53 வயதான சுப்புலட்சமிக்கு தகர கொட்டகையின் சூட்டை குறைப்பதற்காக சமீபத்தில்தான் ஒலைத் தட்டியை வேய்ந்துள்ளனர், ஆனால் ஓலைத்தட்டியை வேய்ந்த அறிவுஜீவிகள் தட்டியை தகர கொட்டகைக்குள் மேல் போடாமல் தகர கொட்டகைக்குள்ளாக வேய்ந்துள்ளனர்.இதுதான் யானையின் சாவுக்கு அடித்தளமிட்டுள்ளது.செப் 11 ஆம் தேதி இரவு யானையை தனியாக விட்டுவிட்டு பாகனும் உதவியாளரும் வெளியே சென்றுவிட்டனர்.தகர கொட்டகைக்குள் இருந்த தட்டியில் எப்படியோ பிடித்த தீ யானையின் மீது பரவியது.சங்கிலியால் கட்டி போடப்பட்டிருந்த யானை போராடி சங்கிலியை அறுத்துக் கொண்டு கொட்டகையைவிட்டு வெளியே வந்தது,ஆனால் அதற்குள் யானையின் பெரும்பாலான உடல்பகுதி வெந்துபோயிருந்தது.வேதனையையும் வெப்பத்தையும் தாங்கமுடியாமல் அபயம் தேடி ஒடிய யானையை அதன்பிறகு சமாதானப்படுத்தி கோயில் வளாகத்திற்கு மீண்டும் கொண்டுவந்தனர்.யானையை பரிசோதித்த டாக்டர்கள் 24 மணி நேர அவகாசத்திற்கு பிறகே எதுவும் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர் ஆனால் அவ்வளவு அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே தனது துதிக்கையை துாக்கி ஆசீர்வாதிப்பது போல காட்டிவிட்டு கிழே விழுந்து இறந்தது.விடிந்ததும் ஊரே கூடி அழுதது மலர் மாலைகளால் யானைக்கு அஞ்சலி செலுத்தியதுயானை வயதாகி இறக்கலாம் நோயுற்று இறக்கலாம் ஆனால் இப்படி ஒரு விபத்தில் இறக்கலாமா?இதற்கு நாமே காரணமாக இருக்காலமா?நமது பட்ஜெட்டில் யானை வளர்க்கமுடியுமா? அதை நல்லபடியாக பராமரிக் முடியுமா? என்று யோசிக்கவேண்டும் முடியாது என்றால் முதலிலேயே சொல்லிவிடலாம் யானை அதுபாட்டுக்கு தன் குடும்பம் குழந்தைகளுடன் தனக்கான இருப்பிடத்தில் சுதந்திரமாக சங்கிலி தொல்லைகள் இல்லாமல் இருக்கும்.இது போன்ற சம்பவம் நிகழ்வது இந்த சுப்புலட்சுமி யானையோடு நிற்கட்டும் என்பதுதான் பக்தர்களின் ஆதங்கம்.-எல்.முருகராஜ்