முப்பரிமாண அச்சு!
3D அச்சுமுறையில் வீடுகளைக் கட்ட சிங்கப்பூர் அரசு திட்டம்: செய்திஅதென்ன 3D அச்சு?உங்களுக்கு 2D எனப்படும் இருபரிமாண அச்சு நன்றாகத் தெரியும். இப்போது உங்கள் கையில் உள்ள காகிதம் அப்படி அச்சிடப்பட்டதுதான்.இந்தக் காகிதத்தில் உள்ள எழுத்துகளுக்கு நீளம், அகலம் என்ற இரண்டு பண்புகள் (பரிமாணங்கள்) உண்டு. ஒவ்வோர் எழுத்தும் வெவ்வேறு நீளம், வெவ்வேறு அகலம்.மூன்றாவதாக, 'உயரம்' என்ற இன்னொரு பரிமாணமும் சேர்ந்துவிட்டதாகக் கற்பனை செய்துபாருங்கள், அதுதான் முப்பரிமாண அச்சு.சில பொருள்களை முப்பரிமாணமாக அச்சிட்டால், அவற்றைத் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, கணினியில் ஒரு பந்து படத்தைத் தேர்ந்தெடுத்து, 'அச்சிடு' என்று சொன்னால் போதும், பக்கத்தில் இருக்கும் முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் அந்தப் பந்து அச்சிடப்படும். அதை வைத்து விளையாடலாம்.கேட்பதற்கு ஏதோ சைன்ஸ் ஃபிக் ஷன் (Science fiction) போல் இருந்தாலும், இதற்கான தொழில்நுட்பம் ஏற்கெனவே வந்துவிட்டது. உலகெங்கும் பல பொருட்கள் முப்பரிமாண அச்சு முறையில் உருவாக்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான், வீடுகளை முப்பரிமாண முறையில் அச்சிடுவோம் என்னும் முயற்சி. முப்பரிமாண அச்சு எப்படி சாத்தியமாகிறது?ஓர் உதாரணம்: சாலட் செய்ய வெள்ளரிக்காய் வெட்டுவீர்கள். அந்தத் துண்டுகள் ஒவ்வொன்றும் வட்டமாகக் காணப்படும். இப்போது அந்த வட்டங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிப் பாருங்கள், முழு வெள்ளரிக்காய் தெரியும்!3D அச்சும் இப்படிதான் வேலை செய்கிறது. அச்சிடவேண்டிய பொருளை 'ஸ்கேன்' செய்து புரிந்துகொண்டு, அதைப் பல துண்டுகளாக நறுக்கிப் பார்க்கிறது (கற்பனையில்தான்). பிறகு, அந்தத் துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அச்சிடுகிறது. அதன் மூலம்தான் ஸ்கேன் செய்த பொருளின் முப்பரிமாண உருவத்தை அச்சு அசல் அதே மாதிரி உருவாக்குகிறது. அந்தப் பொருளை நாம் தொடலாம், எடுக்கலாம், பயன்படுத்தலாம்.அந்த விதத்தில் பார்த்தால், இது அச்சு அல்ல, ஜெராக்ஸ்தான். ஆனால், முப்பரிமாண ஜெராக்ஸ்!கேட்பதற்குச் சுலபமாக இருந்தாலும், இதைச் சாதிப்பது சிரமம். ஒரு பொருளைக் கச்சிதமான துண்டுகளாகக் கற்பனை செய்து புரிந்துகொள்ள வேண்டும், அதைப் படிப்படியாக அச்சிடவேண்டும். ஓர் அடுக்குக்கு மேல் இன்னோர் அடுக்கை நன்கு பொருந்தச் செய்ய வேண்டும். அச்சிடப்பட்ட பொருள், பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும், வலுவாகவும் இருக்க வேண்டும்.இந்தச் சவால்களையெல்லாம் தொழில்நுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது. முப்பரிமாண அச்சில் பல்வேறு பொருள்கள் இப்போது உருவாக்கப்படுகின்றன. அவற்றின் விலை கொஞ்சம் அதிகம். வருங்காலத்தில் அதுவும் மாறும். முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் நம் வீட்டுக்கும் வரும்!அதன்பிறகு, நாம் கடைகளுக்கே போக வேண்டியிருக்காது. வேண்டியதை இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து அச்சிட்டுக் கொள்ளலாம்!வழக்கமான தொழிற்சாலை இயந்திரத்துக்கும் 3D அச்சுக்கும் என்ன வித்தியாசம்?தொழிற்சாலை இயந்திரம் ஒரே ஒரு பொருளை, ஒரே மாதிரி தயாரிக்கும். பந்து தயாரிக்க ஓர் இயந்திரம், மட்டை தயாரிக்க இன்னோர் இயந்திரம்... இப்படி!ஆனால் 3D அச்சில் ஒரே இயந்திரம் பந்தையும் அச்சிடும். மட்டையையும் அச்சிடும். கூட விளையாட ஒரு ரோபோ நண்பன் தேவை என்றால் அதையும் அச்சிடும்!இதில் இன்னொரு வசதி, அச்சிடப்படும் பொருளை நமக்கு வேண்டியபடி மாற்றிக்கொள்ளலாம். ஒரு பந்தை 3D இயந்திரத்தில் அச்சிட்டால், பந்தின் மீது உங்கள் பெயரைச் சேர்த்து அச்சிடலாம். வட்டப் பந்து வேண்டாம், சதுரப்பந்து(?)தான் வேண்டும் என்று கேட்கலாம்... விரும்பிய எதையும் வடிவமைத்துக் கண்முன்னே உருவாக்கலாம். கிட்டத்தட்ட மாயாஜாலம்தான். ஆனால், தொழில்நுட்பத்தால் இது சாத்தியம்!