கட்டடமா, கட்டிடமா?
கட்டடம், கட்டிடம் - எது சரி?இக்குழப்பம் எல்லாருக்கும் ஏற்படுவதுதான். சிலர் கட்டிடம் என்று எழுதுகிறார்கள். சிலர் கட்டடம் என்று எழுதுகிறார்கள். இரண்டும் ஒன்றுதானா? இரண்டுக்கும் பொருள் வேற்றுமை ஏதேனும் இருக்கிறதா? இரண்டும் ஒன்றே என்றால், இவ்வாறு இருவகையாகவும் எழுதுதல் எவ்வாறு சரியாகும்? இதில் ஏதேனும் ஒன்று தவறாக இருக்க வேண்டும்தானே? எது சரி என்பதை உணர, இச்சொற்கட்டுமானத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டும். இருவகையாகவும் பயன்பாட்டில் இருக்கும் சொற்களைப் பிரித்துப் பார்ப்பதன் வழியாகத்தான், எது சரி என்ற முடிவுக்கு வர முடியும். முதலில் கட்டிடம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். அச்சொல்லைப் பிரித்து, என்ன பொருள் சுட்டுகிறது என்பதைப் பார்ப்போம். கட்டு + இடம் = கட்டிடம்.கட்டு இடம் என்பது என்ன? கட்டு என்று கட்டளைப் பொருள் தருவதால், இது வினைத்தொகையாய்ப் பொருள் தரக்கூடும் என்று தெரிகிறது. கட்டுவதற்குரிய இடத்தைச் சுட்டுகிறது. கட்டு இடம் என்பது கட்டிய இடம், கட்டுகின்ற இடம், கட்டும் இடம் என்று முக்காலத்திற்குமான பொருள் விரிந்து, வினைத்தொகையாய் நிற்கிறது. கட்டிய இடம் என்பதன் மூலம், இது 'கட்டுமானம் எழுப்பப்படுவதற்குக் காரணமான இடம்' என்ற பொருளைத்தான் கொள்ள முடியும். ஒரு கட்டுமானம் தோன்றுவதற்குரிய இடத்தையோ மனையையோதான் கட்டு இடம் = கட்டிடம் என்ற சொல் குறிக்கிறது. ஆக, இது கட்டிய இடத்தில் எழுந்து நிற்கும் கட்டுமான அமைப்பைக் குறிக்கவில்லை என்று விளங்கிக் கொள்கிறோம். அடுத்துள்ள சொல்லை எடுத்துக்கொள்வோம். அதன் சொற்கட்டுமானத் தன்மையின்படி, என்ன பொருள் வழங்குகிறது என்று பார்ப்போம். கட்டு + அடம் = கட்டடம்.இங்கே அடம் என்பது தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்று என்று, இலக்கணம் கூறுகிறது. கட்டளைப்பொருள் தரும் வினை வேர்ச்சொல்லுடன் ஈற்றில் ஒரு விகுதி சேர்ந்து தொழிற்பெயர் உருவாகிறது. இவற்றை விகுதி பெற்ற தொழிற்பெயர் என்கிறார்கள். அடம் என்பது அத்தகைய தொழிற்பெயர் விகுதி. கட்டடம் என்றால், கட்டும் செயலால் விளையும் பொருளைக் குறிப்பது. ஆக, கட்டடம் என்பதே கட்டுமானத்திற்குப் பொருத்தமான சொல் என்பது தெளிவு. ஒற்றடம் என்பதும் அடம் என்னும் விகுதி சேர்ந்து உருவாகும் தொழிற்பெயர்தான் (ஒற்று + அடம்). ஒற்றியெடுத்தல் என்னும் செயலால் விளைவது ஒற்றடம்.ஆகவே, கட்டடம் என்பதே கட்டுமானத்தைக் குறிப்பது. கட்டிடம் என்பது கட்டுமானத்திற்கான இடத்தையோ மனையையோ குறிப்பது என்ற முடிவுக்கு வரலாம். கட்டுமான பில்டிங்குகளைக் குறிக்க, கட்டடம் என்ற சொல்லையே பயன்படுத்துவோம். - மகுடேசுவரன்