பழைய நூல்களின் சங்கமம்!
இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தைவிட்டு இறங்கினாலே, உங்களை அமைதி ஆட்கொள்ளும். சாலையைக் கடந்து, சி.பி.டி. வளாகத்துக்குள் நுழைந்தால், இடதுபுறம் அந்த எளிமையான கட்டடம் வரவேற்கும். ஒரு தனி மனிதரின் முயற்சியால உருவான மகத்தான நூற் களஞ்சியம் அது. அதற்குப் பெயர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.பெயரைப் பதிவு செய்துவிட்டு உள்ளே நுழைந்தால், நீண்ட ஹால். மாணவர்களும் இளைஞர்களும் ஆங்காங்கே. எல்லோரும் ஏதேனும் ஓர் புத்தகத்தில் மூழ்கியிருப்பார்கள் அல்லது குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் இந்த நூலகத்தின் தனிச்சிறப்பு.நீங்கள் கேள்விப்பட்ட புத்தகங்கள் அல்லது கேள்வியே படாத புத்தகங்கள்கூட இங்கே கிடைக்கும். ராஜாஜி நடத்திய 'விமோசனம்' இதழ் வேண்டுமா? முதற்பதிப்பு நூல்கள் வேண்டுமா? எதைவேண்டுமானாலும் எடுத்துத் தருவார்கள். ஆமாம். நீங்கள் அங்கே இருக்கும் கணினியில் புத்தகத்தின் பெயரை உள்ளிட வேண்டும். உடனே, அந்தக் கணினி, அந்தக் குறிப்பிட்ட இதழ் அல்லது புத்தகத்துக்கான வரிசை எண்ணைத் தெரிவிக்கும். அங்கேயுள்ள பணியாளர்களிடம் எண்ணைக் குறித்துக் கொடுத்தால், அடுத்த சில நிமிடங்களில் அந்தப் புத்தகமோ, இதழோ உங்கள் கைக்கு வந்துவிடும்.அங்கேயே உட்கார்ந்துகொண்டு, படிக்கலாம். எழுதிக் கொள்ளலாம். புகைப்படம் மட்டும் எடுக்கக் கூடாது. பிரதி வேண்டுமென்றால், அதற்கான உரிய கட்டணத்தைச் செலுத்தினால், பிரதி எடுத்துத் தரப்படும். ஒருசில புத்தகங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கூட இல்லை. ஆம், அவ்வளவு நைந்து போயிருக்கும்.இந்தப் புத்தகங்களையும் இதழ்களையும் சேகரித்த மாமனிதர் கோட்டையூரைச் சேர்ந்த 'ரோஜா' முத்தையா. 'நடமாடும் நூலகம்' என்றே அவர் புகழப்பட்டார்.புத்தகங்கள், நாளிதழ்கள், பிற இதழ்கள், ஆய்வறிக்கைகள், பல அரிய ஓலைச்சுவடிகள் என, சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவை இந்த நூலகத்தின் சேகரிப்பில் இடம்பெற்றுள்ளன. விடுமுறையில் மறக்காமல் போய் வாருங்கள்.ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113.நூலகம் இயங்கும் நேரம்: காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை (பகல் 1-1.30 உணவு இடைவேளை)விடுமுறை தினங்கள்: ஞாயிறு, மாதத்தின் 2வது சனிக்கிழமை, சில அரசு விடுமுறை தினங்கள்இணைய தளம்: http://rmrl.in/தொடர்பு எண்கள்: (044) 2254-2551 & 2254-2552மின்னஞ்சல்: rmrl@dataone.in- ஹாலாஸ்யன்