உள்ளூர் செய்திகள்

பேசாத குரு பேச வைத்த சீடர்!

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் ஜூலை 412.01.1863 - 04.07.1902தன் குருவைப் பார்க்க தட்சிணேசுவரத்துக்கு வந்தார் அந்தச் சீடர். வணக்கம் செலுத்தினார். குருவின் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். குருவோ இவரைக் கண்டுகொள்ளவே இல்லை. ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்த பிறகு, 'குரு ஏதோ சிந்தித்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் நம்மைக் கவனிக்கவில்லை' என்று சீடர் வெளியே சென்றுவிட்டார். அப்போது, உள்ளே குரு தன் சீடர்களிடம் உரையாடுவது காதில் விழுந்தது. உடனே அந்தச் சீடர் ஆர்வத்துடன் மறுபடி உள்ளே போய் குருவின் முன் நின்றார்.இந்த முறையும் குரு அந்தச் சீடரிடம் பேசவில்லை. போதாததற்கு சீடருக்கு எதிர்புறமாகத் திரும்பிக்கொண்டார்.சீடருக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர் வீட்டிற்குக் கிளம்பினார். அப்போதும் குரு கூப்பிட்டு பேசவில்லை.ஒரு வாரம் சென்றது. மீண்டும் அந்தச் சீடர் தட்சிணேசுவரத்துக்கு வந்தார். குருவைப் பார்த்தார். குரு அந்தச் சீடரை கவனிக்கவில்லை. அந்தச் சீடர் நாள் முழுக்க குரு இருக்கும் அதே இடத்தில் மற்ற சீடர்களுடன் பொழுதைக் கழித்துவிட்டு மாலையானதும் வீட்டிற்குத் திரும்பினார். குருவிடமிருந்து சீடரின் வருகையைப் பற்றி ஒரு கருத்தும் வெளிப்படவில்லை.மூன்றாம் முறையாக வந்தார் சீடர். அப்போதும் குரு பாராமுகம் காட்டினார். நான்காம் முறை வந்தார். ம்ஹூம்... குருவின் அலட்சியம் மாறவே இல்லை. கல் போல் அமர்ந்திருந்தார். இப்படியே ஒரு மாதம் சென்றது. அந்த குரு அப்படியேதான் பேசாமல் இருந்தார். சீடரும் சோர்வடையாது வருவதும் போவதுமாக இருந்தார். குருநாதர் தன்னை புறக்கணிப்பது, அலட்சியப்படுத்துவது பற்றி அவர் யாரிடமும் எந்தக் குறையும் கூறவில்லை.அதற்கு மேல் குருவால் பொறுக்க முடியவில்லை. அவர் அந்தச் சீடரை அருகே அழைத்து, ''நரேன்! உன்னோடு நான் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. நீயோ அது பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து என்னைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறாய்?'' என்றார்.அதற்கு அந்தச் சீடர் '' குருவான நீங்கள் என்னிடம் பேசுவீர்கள் என்ற எண்ணத்தில் நான் இங்கு வரவில்லை. உங்களிடம் எனக்கு அன்பு இருக்கிறது. அந்த அன்பினால் நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன். அதன் காரணமாகவே உங்களை ஒவ்வொரு முறையும் காணவருகிறேன்'' என்றார்.அந்தச் சீடர் சுவாமி விவேகானந்தர். அவரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர்.'எதையும் எதிர்பாராது எவரிடத்தும் அன்பு செலுத்துபவர்களாக நாம் இருக்க வேண்டும்' என்று சொன்ன விவேகானந்தர், அதைத் தன் வாழ்க்கையிலும் பின்பற்றுபவராக இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !