முள் இல்லாத மீன்!
காகிதம் என்றாலே கப்பல்தான் செய்ய வேண்டுமா? கப்பலுக்குக் கீழே நீந்தும் மீனை ஏன் செய்து பார்க்ககூடாது? செய்து பார்க்கலாம் வாங்க!தேவையான பொருட்கள்: வண்ணக் காகிதங்கள், ஊசி, பசை, காந்தம்'மீன் உடலில் செதில் இருக்கும், சுருள் எப்படி வரும்?' என்று யோசிக்காமல், ஊசியை வைத்துக் காகிதங்களைச் சுருளாகச் சுற்றவும். வட்ட வடிவமாகச் சுற்றி, இறுதி முனையைப் பசையால் ஒட்டவும். பெரியதாகவும் சிறியதாகவும் இரண்டு சுருள்கள் செய்துகொள்ள வேண்டும். நாம செய்கிற மீன், நீமோ, டோரா மாதிரி கலர் கலரா இருக்கணுமே. வேறு நிறக் காகிதத்தில் செவுள், வால் பகுதியை படத்தில் இருப்பதுபோல் செய்துகொள்ளவும்.முதலில் உருவாக்கிய வட்ட வடிவச் சுருளின் மையத்தைப் பென்சிலால் அழுத்தினால் கூடுபோல கிடைக்கும். இதுதான் மீனின் உடல் பகுதி. இரண்டு சுருள்களையும் ஒட்டிச் சேர்த்தால் பாதி மீன் கிடைக்கும். மீன் என்றால் நீந்த வேண்டுமே! செவுள், வால் இல்லாமல் எப்படி? அதையும் ஒட்டிவிட்டுப் பாருங்கள் மீன் வந்துவிடும். ஃப்ரிஜ்ல ஒட்ட, காந்தம் ஒன்றை பின்பக்கத்தில் ஒட்டிக்கொள்ளவும். 'இந்த மீன் தண்ணீரில் நீந்துமா?' என்று யாராவது கேட்டால் சொல்லுங்கள், 'இந்த மீனில்தான் முள் இல்லையே?!'-ரேவதி கணேஷ்