உள்ளூர் செய்திகள்

இரவில் ஒளிரும் வனம்

'சுந்தர்பன்' என்று பொதுவாக அழைக்கப்படும் காடுகள், உவர்ப்பு, சதுப்புநில, அலையாத்திக் காடுகள். உலகிலேயே மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் இவைதான். 10,000 கி.மீ. பரப்பளவில் இருக்கின்றன. அதில் 60 சதவிகிதம் வங்கதேசத்தில் உள்ளது; 40 சதவிகிதம் இந்தியாவின் மேற்குவங்காள மாநிலத்தில் உள்ளது. நாங்கள் இந்தியப் பகுதிக்கு, விமானம் மூலம் கொல்கத்தா சென்று அங்கிருந்து பயணமானோம்.கோத்கலி வரை சாலைவழி பயணம் செய்து பின்னர் படகு மூலம் சட்ஜெலியா என்ற தீவை அடைந்தோம். அங்கு இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் சுந்தர்பன் காடுகளைச் சுற்றிப்பார்த்தோம்.சுந்தர்பன் மக்கள்சுந்தர்பன் காடுகளின் இன்னொரு பகுதியில் குட்டிக் குட்டியாக நிறைய தீவுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்களுக்கு முக்கிய தொழில் காடுகளில் தேன் சேகரிப்பதும், மீன் பிடிப்பதும்.அங்குள்ள ஒரு தீவின் பெயர் விதவாப்பள்ளி (விதவைகள் கிராமம்). காட்டுக்குத் தேன் சேகரிக்கச் செல்லும் பெரும்பாலான ஆண்கள் புலிகள் தாக்கி இறந்துபோவது இன்றும் தொடர்கிறது. அதனால் அந்தப் பெயர். உவர் நீரைக் குடிப்பதாலும் புயல் போன்ற பேரழிவுகளில் இறந்து ஒதுங்கும் மனித உடல்களை உண்டு பழகியதாலும் இந்தப் புலிகள் மனிதர்களைத் தாக்கிக் கொல்வதாக எங்களுடன் வந்த வழிகாட்டி தெரிவித்தார்.தீவுகளில் வசிக்கும் மக்கள் நெல், வாழை பயிர் செய்கின்றனர். புயல், மழை அடிக்கடி தாக்குவதால் கூரை வேய்ந்த சின்ன மண் வீடுகளில் வசிக்கின்றனர். மின்சார வசதி இல்லாமல் சூரிய ஒளித் தகடுகள் மூலம் சூரிய ஒளியைச் சேமித்துப் பயன்படுத்துகின்றனர். சுற்றிலும் உப்புநீர் மட்டுமே இருப்பதால் தங்கள் தேவைக்கு வீடுகளின் அருகில் குளம் வெட்டி மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துகின்றனர். குளங்களில் வீட்டுத்தேவைக்கும் விற்பனைக்கும் இறால் போன்ற மீன் வகைகளையும் வளர்க்கிறார்கள். தீவிலுள்ள பெண்களுக்குச் சின்ன வயதிலேயே திருமணம் நடக்கிறது. அவர்கள் உணவில் அரிசி, மீன், கத்திரிக்காய் முக்கிய இடம் வகிக்கிறது. அங்குள்ள சில பெண்கள், தமிழ்நாட்டுப் பெண்களைப் போலவே பின்கொசுவம் வைத்து சேலை கட்டி, சேலைத் தலைப்பால் முக்காடு போட்டு இருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.அலையாத்தி காடுகள்சுந்தர்பன் காடுகளில் சிறிதும் பெரிதுமாக ஐநூறுக்கும் மேற்பட்ட அலையாத்தித் தாவர வகைகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு வகையான மரங்கள், செடிகள் உள்ளன. சில இடங்களில் கலந்தும் காணப்படுகின்றன. சதுப்புநிலம் முழுவதும் மரங்களின் கீழ்ப்பகுதியில் கூர்மையான குச்சிகள் தரைப்பகுதியில் இருந்து மேல்நோக்கி இருந்தன. மழைக்காலங்களில் காடுகள் நீரால் சூழப்படும்போது மரங்கள் இந்தக் குச்சிகளால் சுவாசிப்பதாக வழிகாட்டி தெரிவித்தார்.ஒரு நாள் முழுதும் பெரிய படகில் பயணித்து சுந்தர்பன் காடுகளைச் சுற்றிப் பார்த்தோம். போகும் வழியில் எதிரே வந்த படகுகளில் இந்தியா, வங்கதேச நாட்டுக் கொடிகள் பறந்தன. இருநாடுகளும் சரக்குப் போக்குவரத்துக்கு இந்த நீர்வழிப் பாதையையே பயன்படுத்துகின்றன. இருநாட்டு இராணுவமும் படகுகள் வழி எல்லைப் பகுதியைக் கண்காணிக்கின்றன. எங்களுக்கான உணவுகள் நாங்கள் பயணித்த படகிலேயே தயார்செய்யப்பட்டுப் பரிமாறப்பட்டது.விலங்குகள்சுந்தர்பன் காடுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. வங்காளப் புலிகள், சிறுத்தைகள், பன்றிகள், பாம்புகள், உவர்நீர் முதலைகள், பல்வேறு வகையான பறவை இனங்கள் உள்ளன. நாங்கள் கடற்பறவையான சீகல், காட்டுப்பூனை, புள்ளிமான்கள், சின்ன வகை மரங்கொத்தி, குதிரைக் குளம்பு நண்டு என்ற சாம்பல்நிற நண்டு, உண்ணக்கூடாத விஷ வகையான சிகப்புநிற நண்டு, இறால், சிலவகை உவர்நீர் மீன்கள், சாம்பல்நிற கீரிப்பிள்ளை, வெள்ளைநிறக் கடல் கழுகு, முதலைகள், மிகப்பெரிய கருப்பு, கருப்பு -வெள்ளை நாரைகளைப் பார்த்தோம்.படகுப்பயணத்தின் வழியில் சாஜ்னேகாலி, சுதனகாலி, டோபங்கி போன்ற இடங்களில் இறங்கி காட்டின் நடுவே அமைக்கப்பட்டிருந்த கோபுரங்கள் மூலம் உள்காடுகளையும் மிருகங்களையும் கண்டோம். வனத்துறையினர் காட்டு விலங்குகளுக்காகச் செயற்கையான குளங்களை உருவாக்கி மழைநீரைச் சேமித்து வைத்துள்ளனர். அந்த குளங்களைச் சூழ்ந்து பெரிய பெரிய பறவைகள் சிறகுலர்த்திக்கொண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி.சுந்தர்பன் ஒரு பகுதியில் வங்காள விரிகுடாவால் சூழப்பட்டுள்ளது. கங்கை, ஹூக்ளி, பத்மா, பிரம்மபுத்ரா,மேக்னா என ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இடமாகவும் உள்ளது. இந்த அலையாத்திக் காடுகளில் இரவிலும் ஒளிரும் 'சுந்தரி' என்ற ஒருவகை மரங்கள் நிறைய உள்ளன. அந்த மரங்களின் பெயராலேயே இந்தக் காடுகளுக்கு சுந்தர்பன் என்ற பெயர் வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !