உள்ளூர் செய்திகள்

தனி நபர் உருவாக்கிய நூலகம்

தபால் தலைகள் சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல் போன்று, விதவிதமான பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஒருவர் எட்டு வயதில் புத்தகங்கள் சேகரிக்க ஆரம்பித்து, அது மெல்ல வளர்ந்து ஒரு லட்சம் புத்தகங்கள் கொண்ட நூலகமாக விரிந்து நின்ற இடம் தெரியுமா?புலவர் பல்லடம் மாணிக்கத்துக்கு, சிறு வயதிலேயே புத்தகங்கள் வாசிப்பதில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. நாளடைவில் பல புத்தகங்களைத் தேடி வாங்கிப் பாதுகாக்கத் தொடங்கினார். அவருடைய தீவிரத் தேடுதல், தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் போன்றவர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த நூல்கள் என்று அவருடைய சேகரிப்பு வளரத் தொடங்கியது. தன் வீட்டின் மாடி அறையில் புத்தகங்களைப் பாதுகாத்து வைத்துக்கொண்டிருந்தார். புத்தகங்களை முறையாகப் பராமரிப்பதற்காக, விருத்தாச்சலத்தில் 8,000 சதுர அடி அளவில், 'தமிழ் நூல் காப்பகம்' நூலகத்தைக் கட்டி, நடத்தி வருகிறார். இந்த நூலகம், புத்தகங்கள் எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. பல அரிய பண்டைய தமிழ் நூல்கள் வாசிப்பிற்குக் கிடைக்கும் இடமாக இருக்கிறது. இந்நூலகத்தின் குறிப்பிடத்தகுந்த புத்தகங்களுள் பாதிரியார் பெப்ரீசியஸு என்பவரால் தொகுக்கப்பட்ட 'பெப்ரீசியஸு அகராதி' மிக முக்கியமானது. புத்தகங்களைத் தவிர ஆய்வேடுகள், தமிழில் வெளிவந்த இதழ்கள் ஆகியவையும், முனைவர் பட்ட ஆய்வுகள் போன்றவையும் இந்த நூலகத்தில் உள்ளன. சங்க இலக்கியங்களின் முதல் அச்சுப் பதிப்புகள், பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம், வேதங்கள், உபநிடதங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்றனவும், காந்திய, மார்க்ஸிய, அம்பேத்கரிய நூல்கள் என எல்லா வகையான நூல்களும் இங்குண்டு.கர்நாடக இசை, மேற்கத்திய இசை, இந்துஸ்தானி இசை ஆகிய பல்வேறு இசைக் குறுந்தகடுகளும் இந்நூலகத்தில் உள்ளன. விருது பெற்ற திரைப்படங்கள், குறும்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தக ஆர்வலர்கள் நிச்சயம் கண்டுகளிக்க வேண்டிய நூலம் தமிழ் நூல் காப்பகம்.முகவரி:தமிழ் நூல் காப்பகம்,தமிழ் நகர்,சேலம் நெடுஞ்சாலை,விருத்தாசலம். தொடர்புக்கு: 4143 - 231611, 4143 - 230411, 9443042344.- ஹாலாஸ்யன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !