உள்ளூர் செய்திகள்

இருட்டில் ஒரு வெளிச்சம்!

பார்வையற்ற சிறுவர்களுக்கும் படிக்க ஆர்வம் இருக்குமில்லையா? அதற்கேற்ப புத்தகங்கள் உண்டா? நூலகம் உண்டா என்று தேடத் தொடங்கினோம். கிடைத்தது சேத்னா டிரஸ்ட். இதனை நமீதா தொடங்க, கூடவே பல நண்பர்கள் இணைந்துகொண்டனர். இவர்கள் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்காகவே டாக்டெல் புத்தகங்களை வெளியிட்டும் வருகிறார்கள். நமீதாவோடு இணைந்து பணி செய்து வரும் ஆரபியோடு பேசினோம்:“நூலகம் எல்லோருக்குமானதாக இருக்கணும். மாற்றுத்திறனாளிகள் குறிப்பா, கண் பார்வையற்றவர்களுக்கு ஏற்றமாதிரியான புத்தகங்கள் இங்கே கிடைக்கறதில்லை. அவங்களோட உலகமும் மற்ற சிறுவர்களோடு உலகம் மாதிரி இருக்கணுங்கிறதுதான் எங்க நோக்கம். அவங்களுக்கான புத்தகங்களை உருவாக்க முயற்சி செய்தோம். பிரெய்லி (Braille) புத்தகங்கள் நம்மூரில் நிறைய இருக்கு. ஆனால், சிறுவர்களுக்கு ஏத்தமாதிரியான புத்தகங்கள் குறைவு. அப்படின்னா என்ன? அந்தப் புத்தகங்கள் எப்படி இருக்க வேண்டும்?முதல்ல கதைகள் ரொம்ப எளிமையா இருக்கணும். பெரிய வார்த்தைகள் இருக்கக்கூடாது. படங்கள் மூலமா உணரவைக்கிறா மாதிரி இருக்கணும். அப்பதான், அவங்களால படங்களைத் தொட்டுப் பார்த்து உணர்ந்து, புரிஞ்சுக்க முடியும். இதை எப்படிச் செய்யறது? உதாரணமா, நீங்க கரடி பத்தின கதையைச் சொல்றீங்கன்னு வெச்சுக்கங்க. அந்தச் சிறுவனுக்குக் கரடியை எப்படி உணர்த்துவது? இடது பக்கத்துல பிரேயில் எழுத்துல 'கரடி'ன்னு எழுதி இருப்போம். வலதுபக்கத்துல கரடி பொம்மையை வரைஞ்சுடுவோம். அதுக்கு மேலே 'புசுபுசு'ன்னு பஞ்சை ஒட்டுவோம். அப்போ குழந்தைகளுக்கு நல்லா புரியும். கரடியோட உடம்பு இப்படித்தான் புசுபுசுன்னு இருக்கும்ன்னு அவங்களால உணர முடியும். எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு கிரியேட்டிவா செய்றோம். இன்னிக்கு சிறுவர்கள் மத்தியில எந்தப் புத்தகம் பிரபலமா இருக்கோ, அந்தப் புத்தகத்தைத்தான் முதல்ல எடுத்து வேலை செய்றோம். 'துளிகா பதிப்பகம்' எங்களுக்கு உறுதுணையா இருக்காங்க. அவங்களோட பல வெளியீடுகளை, நாங்க பார்வையற்ற மாணவர்களுக்கு ஏத்தமாதிரி மாத்தி வடிவமைக்கிறோம். சிலசமயம் நாங்களே குழந்தைகளுக்கு கதைகள் எழுதுவோம்; படங்கள் வரைவோம். ஆங்கிலப் புத்தகங்கள் நிறைய செய்திருக்கோம். தமிழிலும் சில மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள், பிரபலமான கதைகள், பாடல்களை பிரெய்லி வடிவத்துல கொண்டு வந்திருக்கோம். இன்னும் நிறைய வெளியிடணும்னு திட்டமிருக்கு.ஒரு டாக்டெல் புத்தகத்தை கொண்டுவர நிறைய பேரோட உழைப்பு தேவை. பிரெய்லி மொழியில டைப் செய்யணும், படங்கள் வரையணும், பக்க வடிவமைப்புன்னு ரொம்ப கவனத்தோட வடிவமைக்கணும். ஒரு மாசத்துல ஒரு புத்தகத்தை முடிக்கலாம். எங்களோட நூலகத்துல உறுப்பினரா இருக்கிற சிறுவர்களோட எண்ணிக்கை வளர்ந்துக்கிட்டு வருது. அதேமாதிரி வெவ்வேறு தலைப்புகள்ல சுமார் 300 புத்தகங்கள் வரை எங்ககிட்ட இருக்கு. பார்வையற்ற குழந்தைகளோட உலகம் எப்படி இருக்கும்னே தெரியாது. அவங்களுக்குள்ள கற்பனை விதையைத் தூவறதுக்குப் புத்தகங்கள்தான் சரியான வழி. பல மாணவர்கள் பேசவே மாட்டாங்கள். ஆனால், இங்க வந்து புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு, மற்றவர்களோடு பேசறதுக்கு அவங்களுக்கு நிறைய விஷயங்கள் கிடைச்சுருக்கு. அவங்களே படிச்ச கதையை வெச்சு விவாதம் செய்றாங்க. கதையைப் பத்தி அவங்களோட கருத்தை எழுதறாங்க. நாங்க இவங்களுக்கு படிக்கற பழக்கத்தைத் தூண்டியிருக்கோம். இன்னும் நிறைய புத்தகங்கள் வரும்காலத்துல கொண்டு வரத் திட்டமிருக்கு.”தொடர்புக்கு :Chetana Trustமொபைல் எண் : 9840509739www.chetana.org.inprojects@chetana.org.in புத்தகங்கள் பெறுவது எப்படி?மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கு எந்தமாதிரியான புத்தகங்கள் பிடிக்கும் என்பதை முதலிலே கேட்டு தெரிந்துகொள்கிறார்கள் அதற்கேற்ப புத்தகங்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். குழந்தைகள் மாதாமாதம் நான்கு புத்தகங்களை படிக்க எடுத்துக்கொள்ளலாம். புத்தகங்கள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். சென்ற மாதம் படித்த புத்தகங்களை அப்படியே திருப்பிக் கொடுத்துவிடலாம்.சேத்னா அலுவலகத்தில் இருக்கும் நூலகத்தில் வந்து படிக்க ஆசைப்பட்டால், முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும். அதற்கேற்ப நூலகம் திறந்துவைக்கப்படும். இவை எதற்கும் கட்டணம் இல்லை. மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்குச் செய்யப்படும் சேவை இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !