மரம் இல்லாத மலை
மரங்கள் இருக்கும் மலைப்பகுதிகளைத்தான் நாம் பார்த்திருப்போம். மரங்களே இல்லாமல் புல்வெளி மட்டும் பரவியிருக்கும் மலையைப் பார்த்திருக்கிறீர்களா? மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மரங்கள் நிறைந்த மலைப்பகுதிகள் அதிகளவில் உள்ளன.ஆனாலும் புல்வெளி மட்டுமே பரவியிருக்கும் மலையும் இருக்கிறது. தமிழகத்தின் வால்பாறையில்தான் புல்வெளியால் சூழ்ந்த மலை உள்ளது. இது ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் இருக்கிறது. புல்மலை (Grass hills - கிராஸ் ஹில்ஸ்) என அழைக்கப்படும் இம்மலை கேரளாவிலும் தமிழகத்திலும் பரவி இருக்கிறது. இது ஆங்கிலத்தில் 'சோலா கிராஸ் லாண்ட்' (shola grassland) என்று வழங்கப்படுகிறது. சோலை என்ற தமிழ்ச் சொல்தான் அவ்வாறு ஆங்கிலத்தில் மருவியுள்ளது. சிறுத்தை, கருங்குரங்கு, சிங்கவால் குரங்கு, காட்டு அணில், அரியவகை பறவை வகைகள் என, பலவகை உயிரினங்களை இங்கு காண முடியும். தமிழ்நாடு மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் இந்தப் பகுதியில் அதிக அளவில் காணப்படுகின்றன. மற்ற இடங்களில் அரிதாக காணப்படுகின்றன. இங்கு பல அரியவகையான புல்வெளிகள் இருக்கின்றன. அவை மழைக் காலத்தில் தண்ணீரை உறிஞ்சி, சேமித்து, கோடை வெப்பத்தைச் சமாளிக்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு உலகெங்கிலும் இருந்து தாவரவியலாளர்கள் வருகிறார்கள். இந்த மலைப்பகுதியைப் பார்க்க வனத்துறையின் அனுமதி தேவை.