நாட்டுப்புற கலைகளுக்கென தனிப்பிரிவு
தமிழை வளர்க்கத் தமிழ்ச் சங்கம் ஏற்படுத்திய சிறப்பு வாய்ந்த மதுரையில், தமிழ்ச் சங்கச் சாலையில் அறிவுக் கருவூலமாக அமைந்துள்ளது மதுரை மைய நூலகம். நூலகங்கள் வாசிப்பதற்காக மட்டுமே என்றில்லாமல், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துதல், பொது அறிவை வளர்ப்பதற்கான பயிற்சிகள், வேலைவாய்ப்பு மையத்துடன் ஒருங்கிணைப்பு என, பல சிறப்பு வசதிகளை வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அளிக்கிறது இந்நூலகம்.பழமை வாய்ந்த அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், குடிமைப்பணி பயிற்சிக்கான புத்தகங்கள் என, சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. சிறுவர்களுக்கான நூல்கள் மட்டுமே சுமார் 65 ஆயிரம் வரை உள்ளன. கடந்த 48 ஆண்டுகளாக சிறப்பான முறையில் இயங்கிவரும் நூலகம் இது. விசாலமான இடவசதியுடன் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு, தனித்தனியான பிரிவுகளுடன் அமைந்துள்ளது. இதுதவிர, பார்வையிழந்தோரும் படித்துப் பயன்பெறும் விதத்தில் 'பிரெய்லி' முறையில் வடிவமைக்கப்பட்ட புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. இணையச் சேவை வசதியும் இணைந்துள்ள இந்த நூலகத்தில், மிகக்குறைந்த கட்டணமாக ஒரு மணி நேரத்துக்குப் பத்து ரூபாய் செலுத்தி நமக்கு வேண்டிய தகவல்களைப் பெறும் வசதியும் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் புத்தகங்களைத் தேடி எடுக்க, சக்கர நாற்காலி வசதியும் வழங்கப்படுகிறது. சிறப்புச் சேவையாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கும் விதத்தில், நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, நாட்டுப்புறக் கலைகளுக்கெனத் தனிப்பிரிவும் தயாராகி வருகிறது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் உதவியோடு இந்த அரிய பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாசிப்பை மேம்படுத்துதல், பொதுஅறிவு என்பதோடு மட்டுமன்றி பல்வேறு தளங்களிலும் அறிவுப் பரவலாக்கத்தை மேற்கொண்டு வரும் இந்த அரிய நூலகத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.முகவரி:மதுரை மைய நூலகம்,சிம்மக்கல் - தமிழ்ச் சங்கம் சாலை,மதுரை.வேலை நேரம்: காலை 8- மணி முதல் மாலை 8 மணி வரைவிடுமுறை: வெள்ளி, 2வது சனி மற்றும் அரசு விடுமுறை நாட்கள்மதுரை சரவணன்