உள்ளூர் செய்திகள்

ஒரு சின்ன வித்தியாசம்!

உலக டவுன் சிண்ட்ரோம் தினம் - மார்ச் 21இரட்டையர்களாகப் பிறந்தவர்களைப் பார்த்திருப்பீர்கள். சில நேரங்களில் ஒருவர் என்று நினைத்து மற்றவரிடம் பேசிக்கூட இருப்பீர்கள். அந்த அளவு ஒரே அச்சில் வார்த்தது போல நாம் இல்லாவிட்டாலும், அப்பா அம்மாவைப் போலவோ அல்லது பாட்டி தாத்தா போலவோதான் நம்மில் பெரும்பாலானோர் இருப்போம்.டி.என்.ஏ மேஜிக்: இதற்கெல்லாம் காரணம் உயிரியல் பாடத்தில் நீங்கள் படித்திருக்கும் செல் அமைப்பில் இருக்கும் டி.என்.ஏ (D.N.A) எனும் மரபணுதான். ஒரு செல்லில் இருக்கும் மரபணு என்பது மொத்தம் 46 குரோமோசோம்களால் (Chromosomes) ஆனது. இந்த குரோமோசோம்களில்தான் நம்முடைய மரபுத் தகவல்கள் எல்லாமே இருக்கும். ஒரு குழந்தை அப்பாவிடமிருந்து 23 குரோமோசோமையும், அம்மாவிடமிருந்து 23 குரோமோசோமையும் பெற்றுக் கொள்ளும்.சில குழந்தைகளுக்கு இப்படி வரவேண்டிய 46 குரோமோசோம்களுக்கு பதில் கூடுதலாக ஒன்று சேர்ந்து 47 குரோமோசோம்கள் அமைந்துவிடுகிறது. பெரும்பாலும் 21வது குரோமோசோம் ஜோடியில்தான் இந்த அதிகப்படியான குரோமோசோம் அமையும். இதை மருத்துவரீதியாக ட்ரைசோமி 21 (Trisomy 21) என்று அழைக்கிறார்கள். இதை முதலில் கண்டறிந்தவரான ஜான் லாங்டன் டவுண் (John Longdon Down) என்பவரது பெயரைக் கொண்டு இந்தக் குறைபாடு 'டவுண் சிண்ட்ரோம்' (Down syndrome) என அழைக்கப்படுகிறது. தோற்றம்: டவுண் சிண்ட்ரோமுக்கு ஆளான குழந்தைகளின் தோற்றமே அவர்களைத் தனியாகக் காட்டிக்கொடுத்துவிடும். கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான மூக்கும் முகமும், சரிவான நெற்றி என்பது போன்ற தோற்றத்தில் இருப்பார்கள். இயல்பான தசை உறுதி இல்லாமல் தளர்வாக இருப்பார்கள். தவழ்வது, உட்கார்வது போன்ற செயல்களுக்கு மற்ற குழந்தைகளை விடக் கொஞ்சம் கூடுதலாகக் காலம் எடுத்துக்கொள்வார்கள். வட்டமான முகம், மிகவும் குண்டாகவோ அல்லது மிகவும் குள்ளமாகவோ இருப்பது என அவர்கள், நம் பார்வைக்கு வித்தியாசமாகத் தெரிந்தாலும் அவர்களும் உங்களைப் போலவே சமர்த்துக் குழந்தைகள்தான். நாக்கு தடித்து இருப்பதால் பேச்சு சரியாக இருக்காது. அவர்களுக்கு அறிவுத் திறனும் (IQ) வயதுக்கேற்ப இருப்பதில்லை. அவர்களுக்கு பார்வைக் குறைபாடு, இதய நோய்கள், அடிக்கடி வரும் சளித் தொல்லைகள் என்று கூடுதலாக நிறைய உடல்நலப் பிரச்னைகளும் இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் கடந்து அவர்கள், சுற்றி உள்ளவர்கள் மீது கலப்படமற்ற, எவ்வித எதிர்பார்ப்புமில்லாத அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களும் சிறப்புக்குழந்தைகளின் பட்டியலில்தான் சேருவர்.புறம் தள்ளவேண்டாம்: எனவே, உங்கள் உறவினர் வீடுகளிலோ அல்லது நண்பர்களின் வீடுகளிலோ இந்த மாதிரியான சிறப்புக் குழந்தைகளைப் பார்த்தால் அவர்களை ஒதுக்காமல் அன்பு காட்டுங்கள், விளையாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். சமமாக மதித்து உங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளுங்கள். தவறியும் அவர்களது மனம் புண்படும்படி கேலி, கிண்டல் செய்யாமல் இருங்கள். அவர்களுக்குத் தேவைப்படும் சிறு சிறு உதவிகளைத் தயங்காமல் செய்யுங்கள்.நம் கடமை: அவர்களுக்கும் நமக்கும் அதிக வித்தியாசம் இல்லை. 46 க்கும் 47க்கும் இடையே உள்ள வித்தியாசம் மட்டுமே. அவர்கள் உங்கள் வயதிலோ அல்லது உங்களை விட பெரியவர்களாகவோ கூட இருந்தாலும், மனதளவில் அவர்கள் உங்கள் தம்பி, தங்கை போலத்தான். அதனால், அவர்களைப் பொறுப்போடு பார்த்துக் கொள்வது நமது கடமை.- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !