புவியைப் பற்றி: ரீலா, ரியலா?
சூரியனின் ஹீலியோஸ்பியரைக் கடந்துசென்ற முதல் விண்கலம் வாயேஜர் 1.ரியல். 1977ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இயங்கி வரும் விண்கலம் நாசாவின் வாயேஜர் 1. 1979ஆம் ஆண்டு அது வியாழன் கோளைச் சுற்றியுள்ள மெல்லிய வளையத்தையும், தேபே (Thebe), மெடிஸ் (Metis) ஆகிய வியாழனின் இரண்டு நிலவுகளையும் கண்டறிந்தது. வியாழனைக் கடந்து சனிக் கோள் நோக்கிச் சென்று அறியப்படாத அதன் 5 நிலவுகளையும், க்ரிங் (G-ring) எனும் புதிய வளையத்தையும் உலகிற்குத் தெரியப்படுத்தியது. சனியின் துணைக்கோளான டைட்டனின் வளிமண்டலம் 90 சதவீதம் நைட்ரஜன் வாயுவால் ஆனது என்பதைக் கண்டுபிடித்தது.2012ஆம் ஆண்டு வாயேஜர் 1 நமது சூரியனின் ஹீலியோஸ்பியரைக் கடந்து வெளியே சென்றது. ஹீலியோஸ்பியர் என்பது நமது சூரியனிலிருந்து தோன்றி சூரியக் குடும்பக் கோள்களைக் கடந்து நீண்டிருக்கும் ஒரு மண்டலம். இந்த மண்டலத்தின் எல்லை வரை மட்டுமே சூரியப் புயலின் தாக்கம் இருக்கும்.