உள்ளூர் செய்திகள்

வலிமிகுதல் -6: உவமை வருகையில் ஒற்றுப் போடணும்!

மாணாக்கனும் தமிழாசிரியரும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். “ஐயா… வணக்கம். இரண்டு பெயர்ச்சொற்கள் சேர்ந்து வந்தாலே பெரும்பாலும் வலிமிகும் என்று சொன்னீர்களே… எப்படியெல்லாம் சேர்ந்து வரும்? ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லுங்களேன்.”“நல்ல கேள்வி. முத்து என்பது ஒரு சொல். பல் இன்னொரு சொல். இல்லையா?”“ஆமாம் ஐயா. இரண்டும் தனித்தனிப் பெயர்ச்சொற்கள்”“முத்து இருக்குமிடத்திற்கும் பல் இருக்குமிடத்திற்கும் தொடர்பே இல்லை. ஆனால், முத்துப்பல் என்று சொல்கிறோம் இல்லையா ?”“ஆம் ஐயா. ஒருவருடைய பற்கள் முத்துகளைப்போல் இருந்தால், முத்துப்பல் என்று சொல்கிறோம்… ஐயா”“மிகச்சரி… முத்தைப்போல் பல் என்று விரிவாகச் சொல்லாமல், முத்துப்பல் என்று சுருக்கமாகச் சொல்கிறோம். உவமைப்படுத்திக் கூறுவதற்காக அவ்வாறு சேர்த்துச் சொன்னோம்.மற்றபடி, அவ்விரண்டு சொற்களுக்கும் வேறெந்தத் தொடர்பும் இல்லை. இது, இலக்கணத்தில் உவமைத் தொகை என அழைக்கப்படுகிறது”“உவமைக்காக இரண்டு பெயர்ச்சொற்களைச் சேர்த்துச் சொல்வது உவமைத்தொகை… சரிதானே ஐயா?”“ஆம். உவமைத் தொகைக்குக் கட்டாயம் வலிமிகும்…”“புரிந்தது ஐயா… மலைத்தோள் என்கிறோம். மலை எங்கோ இருக்கிறது. தோள்களையுடைய வீரன் எங்கோ இருக்கிறான். இவ்விரு பெயர்ச்சொற்களுக்குமிடையே உவமை கூறுவது மட்டுமே தொடர்பு. அதனால்தான் சேர்ந்து வந்தது. இரண்டாம் சொல்லாகிய தோளுக்கு முதற்சொல்லாகிய மலை, உவமையாக வந்தது.மலைத்தோள். மலை, தோள் ஆகிய இரண்டு சொற்களுக்கிடையே 'த்' என்ற வலிமிகுந்தது”“சிறப்பு கண்ணா…! தாமரைக்கண் என்பதில் தாமரைக்கும் கண்ணுக்கும் என்ன தொடர்பு? இரண்டாம் சொல் கண்ணுக்கு முதற்சொல் தாமரை உவமையாக வந்தது. தாமரை போன்ற கண். தாமரைக்கண். உவமைத் தொகை. வலிமிகுந்தது…”உவமைத் தொகைக்குக் கட்டாயம் வலிமிகும் என்பது உங்களுக்கும் இப்போது புரிந்திருக்கும். சில உவமைத் தொகைகளைச் சொல்லிப்பாருங்களேன்! - மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !