உள்ளூர் செய்திகள்

அசத்தும் அவசர இனிப்பு!

வீட்டுக்கு யாராவது திடீர் விருந்தாளி வந்துவிட்டால், அவசர அவசரமாகச் செய்யப்படும் இனிப்பு எது தெரியுமா? கேசரி இன்று நம் வீடுகளில் இனிப்புப் பண்டங்கள் தயாராக இருக்கும் என்றாலும், பத்து ஆண்டுகளுக்கு முன்புகூட, கேசரி கிண்டும் கலாசாரம் நம் வீடுகளில் இருந்துள்ளது. ரவா கேசரி, அவல் கேசரி என, பல விதங்களில் சூடான இனிப்பைத் தயாரித்துப் பரிமாறுவார்கள். நம் வீடுகளில் என்று மட்டும் இல்லை. பழங்காலத்தில் திடீரென்று அரண்மனைக்கு யாரேனும் விருந்தாளிகள் வந்துவிட்டால், அவர்களுடைய வருகைக்கு மரியாதை செய்யும்விதமாக இனிப்பு கொடுக்கப்படும். அப்போது அரசவையில் எளிதில் செய்ய முடிந்தது, கோதுமை ரவை கேசரி தான். கோதுமை ரவையை நெய்யில் லேசாக வறுத்து, அத்துடன் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் கேசரியில் முந்திரி, குங்குமப்பூ சேர்க்கப்படும். இந்த உணவு வகை சில இடங்களில் 'சுஜி ஹல்வா' (ரவை ஹல்வா) என்றும் அழைக்கப்படும். கர்நாடகத்தில், இந்த உணவை 'ஷாலி அன்னா', 'கேசரி பாத்' என்றும் அழைப்பார்கள். கேசரி பாத் எளிதில் தயாரிக்கக்கூடிய உணவு வகை என்பதால், இந்தியா முழுக்கவே பிரபலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !