உள்ளூர் செய்திகள்

தனிப்பயிற்சி வகுப்புகள் தவிர்க்க முடியாதவையா?

'மாலை முழுதும் விளையாட்டு' என்று பாடினான் பாரதி. ஆனால், இன்றைய மாணவர்கள் மாலையிலும் படிக்க ஓடிக்கொண்டிருக்கிற சூழல். “மாணவர்களுக்கு தனிப்பயிற்சி (டியூஷன்) வகுப்புகள் தவிர்க்க முடியாத ஒன்றா?” என்று கேட்டிருந்தோம். சென்னை, கீழ்ப்பாக்கம் 'பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம்' பள்ளி மாணவர்கள், தங்களின் கருத்துகளைச் சொல்கிறார்கள்.சுதீப்: ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் பயிலும் இன்றைய சூழலில், மாணவர்கள் தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது சிறந்தது. டியூஷனில் எல்லா பாடங்களையும் படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்கும் சந்தேகங்கள், நமக்கும் உதவியாக இருக்கும். பள்ளியைவிட, டியூஷனில் கொஞ்சம் சுதந்திரமாக உணர முடியும். அதனால் டியூஷன் தேவை.பூஜிதா: நிச்சயமாகத் தேவையில்லை. தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், சுயமாகச் சிந்திக்கும் திறனை இழக்கின்றனர். பள்ளியில் நடத்தியவற்றைக் கவனித்து, சுயமாக முடிவெடுக்க முடியாமல், டியூஷன் ஆசிரியரிடம் கேட்டுக்கேட்டு தெளிவு அடைகின்றனர். இன்னொருவரின் உதவியில்லாமல் பாடம்கூட படிக்க முடியாத நிலை ஏற்படும். ஏற்கெனவே, பள்ளி டென்ஷன், அடுத்து டியூஷன் டென்ஷனும் சேர்ந்தால், மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் என்றே நான் கருதுகிறேன்.ராஜமாணிக்கம்: கண்டிப்பாகத் தவிர்க்க முடியாதவையே! பள்ளியில் ஒரு வகுப்பை, மாணவன் கொஞ்சம் கவனிக்காமல் விட்டுவிட்டால், டியூஷனில் கேட்டுப் படித்துக்கொள்ள முடியும். மேலும், எல்லா மாணவர்களும் கற்றலில் சிறந்து விளங்குவர் என்று சொல்ல முடியாது. மெதுவாக கற்கும் திறனுடையோருக்கு, டியூஷன் மிகமிக அவசியம்.ரக் ஷிதா: தவிர்க்கலாம். இன்று பல டியூஷன் சென்டர்கள், வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கும் இடமாக மட்டுமே செயல்படுகின்றன. அங்கே போவதற்கு பதிலாக, பள்ளி முடிந்தவுடன் பள்ளியிலேயே ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். சக மாணவர்கள் செல்வதால், தானும் டியூஷன் போகவேண்டும் என்ற எண்ணம் இன்று பலருக்கும் வருகிறது. அதனால்தான் போகின்றனர். எனவே, அப்படியான எண்ணம் வரத் தேவையில்லை. பள்ளியில் நடத்துவதைக் கவனத்துடன் படித்தாலே போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !