இயற்கையிடம் இல்லாத விஷயங்களா?
“என் ஞாபகத்தில் இருந்து நான் 500 மருந்துகளைத் தயார் செய்வேன். இப்போது வரை அவற்றை நான் மறக்கவே இல்லை. பெரும்பாலும் என்னிடம் பாம்புக்கடி, பூச்சிக் கடிகளுக்காக வருவார்கள். அவர்களைக் குணப்படுத்துவதே என் நோக்கம்” என்று பேசத் தொடங்கினார் லக்ஷ்மி குட்டிப் பாட்டி. இந்த ஆண்டு, இவருக்கு 'பத்மஸ்ரீ ' விருது வழங்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் அருகில் பொன்முடி என்னும் காட்டுப்பகுதியில் வசித்து வருகிறார். பிறந்தது முதல் இப்போது வரை பாட்டிக்கு காட்டில் இருக்கும் எல்லாச் செடிகள், கொடிகள், மரங்கள் அத்துபடி. கேரள அரசு இவருக்கு 1995இல் “நாட்டுவைத்திய ரத்னா” என்ற விருதை வழங்கியது. மருத்துவச் சேவைக்காக நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறார். விருதுகளை எதிர்பார்த்து அவர் எந்த வேலையையும் செய்யவில்லை. பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதும், பலரும் அவருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். அதை எல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் அதே வேகத்துடனும், விவேகத்துடனும் மக்களுக்கான பணியைச் செய்து வருகிறார் லக்ஷ்மி பாட்டி. --காட்டின் நடுவில் சிறிய மேற்கூரை ஒன்றை அமைத்து வாழ்ந்து வருகிறார். அவருடைய அந்தச் சிறிய வீடுதான், அவரது குட்டி மருத்துவமனை. லக்ஷ்மி பாட்டி எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அவருக்கு நிறையப் படிக்க ஆசை, ஆனால், பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் இருந்தது. “இயற்கையிடம் இல்லாத விஷயங்கள் இல்லை” என்று பார்ப்பவர்கள் எல்லோரிடமும் சொல்லுவார் பாட்டி. அதனாலேயே அவர் பல விஷயங்களை அனுபவம் மூலமே கற்றுக்கொண்டார். பாட்டியைத் தேடி பல மருத்துவர்கள் காடு, மலை தேடி வருவார்கள். பல மருத்துவ மாணவர்களோடு சேர்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார். (படிப்பு வேறு, அறிவு வேறு!) லக்ஷ்மி பாட்டியின் அம்மாதான், இவருக்கு முன்மாதிரி. காட்டிலுள்ள வளங்களையும் மனிதர்களையும் எப்படிக் காப்பாற்றுவது என்பதை அம்மாவிடமிருந்து தெரிந்துகொண்டார். இயற்கை மீதான பிடிப்பு பாட்டிக்குத் தீவிரமடைந்தது. பாட்டியின் வாழ்க்கையில் எண்ணற்ற சோதனைகள் வந்தாலும், அடுத்தவருக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால், உடனே அவருக்கு மருத்துவ உதவி செய்ய ஓடுவாராம். அவரது கணவர் அளித்த ஊக்கமும், ஆதரவும் தான் பாட்டியை, டில்லி வரை அடையாளம் காண வைத்தது. பாட்டி நன்றாக கவிதை எழுதுவார், பாடுவார். நாட்டார் வழக்காற்றியல் துறையில் அதிகம் நாட்டம் கொண்டவர். அவரது கிராமமான காணி மக்களுடைய பழக்க வழக்கங்கள், கலாசாரம், நம்பிக்கைகள் போன்றவற்றை ஆவணப்படுத்துகிறார். திருவனந்தபுரத்திலுள்ள நாட்டார் அகாதெமியில் சிறப்பு ஆசிரியராகப் பணி செய்கிறார்.