ஆர்ட் - வண்ண வண்ணப் பூக்கள்
பூக்கள் செய்யக் கற்றுக்கொள்ளாமல், கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக்கொள்வது முழுமை அடையாது. இந்த வாரம் அதையும் ஒரு கை பார்த்துவிடலாம். விதவிதமான பொருட்களில் அலங்காரப் பூக்கள் செய்ய முடியும். நாம், ஸ்டாக்கிங் துணியில் (Stocking Cloth) செய்து பார்க்கப்போகிறோம்.தேவையான பொருட்கள்: கிராஃப்ட் கடைகளில் 'ஸ்டாக்கிங்' பூ செய்வதற்கான பொருட்கள் என்று கேட்டால் ஸ்டாக்கிங் துணி, மெல்லிய அலுமினிய கம்பிகள், மகரந்தக் காம்புகள் (Pollen strings - போலன் காம்புகள்), பச்சை நிற டேப் ஆகியவை கிடைக்கும். ஸ்டாக்கிங் துணி - 2 சுற்று வேண்டும். ஒன்று பச்சை நிறத்தில். மற்றொன்று உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு நிறத்தில் இருக்கட்டும். இவை தவிர நூல், பசை, கத்தரிக்கோல் தேவை.கம்பிகளை வட்டம் மற்றும் நீள் வட்ட வடிவில் வளைத்து முறுக்க வேண்டும்.ஸ்டாக்கிங் துணிக்குள் வளைத்த கம்பியை நுழைக்க வேண்டும். துணியை இழுத்துக் காம்புப்பகுதியுடன் இறுக்கி, நூலால் கட்ட வேண்டும். பச்சைத் துணியில் ஒரு இலையும், வேறு ஏதாவது ஒரு நிறத்தில் ஐந்து இதழ்களும் செய்துகொள்ள வேண்டும்.ஓர் இதழின் நடுவில் மகரந்தக் காம்புகளை வைத்து நூலால் கட்ட வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக இதழ்களை இணைத்துக் கட்டவும்.காம்புப் பகுதியைச் சுற்றிப் பச்சை நிற டேப்பை ஒட்ட வேண்டும்.இலையைப் பூவோடு இணைத்துக் கட்டவும்.பல வண்ணங்களில் செய்த பூக்களை இலைகளுடன் தொடுத்தால்... அசத்தும் அழகிய பூங்கொத்து தயார்!