வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிவெயிலடிக்கும்போது சாலைகளில் தோன்றும் கானல் நீர் எவ்வாறு உருவாகிறது?மு. விக்னேஷ், 7ம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.மேஜையின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து, அதனுள்ளே 2 ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டு, நீங்கள் மெதுவாக பின்நோக்கி விலகிச் செல்லுங்கள். ஒரு கட்டத்தில், நாணயம் உங்கள் கண்களுக்குத் தெரியாது. பாத்திரத்தின் விளிம்பு அதை மறைத்திருக்கும். அதே இடத்தில் நின்றபடி, நண்பனை அழைத்து, அந்தப் பாத்திரத்தில் மெதுவாக நீரை ஊற்றச் சொல்லவும். பாத்திரத்தில் நீர்மட்டம் உயரும்போது, ஒரு கட்டத்தில் நாணயம் கண்களுக்குப் புலப்படும். அதுவரை தெரியாமல் இருந்த நாணயம், இப்போது எப்படித் தெரிகிறது? ஒளிவிலகல் பண்பு (Refraction) எனும், இயற்பியல் விந்தையே இதற்குக் காரணம். அடர்த்தி கூடுதலான ஓர் ஊடகத்திலிருந்து, அடர்த்தி குறைவான ஊடகத்துக்கு ஒளிக்கதிர் பாயும்போது, நேரான பாதை சற்றே திசை திரும்பி வளைந்து விலகும். எனவே, அடர்த்தி கூடுதலான நீரிலிருந்து காற்றை நோக்கி வெளிப்படும் ஒளிக்கற்றை, வளைந்து விலகி, காட்சியை ஏற்படுத்துகிறது. வெயில் காலத்தில், தரையின் அருகே வெப்பம் அதிகமாகி, காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும். அதே சமயம், மேலே உள்ள காற்று ஒப்பீட்டளவில் வெப்பம் குறைந்து அடர்த்தி கூடுதலாக இருக்கும். எனவே, இந்தக் காற்று அடுக்குகள் வழியே ஒளிக்கதிர்கள் வரும்போது, அவை வளைந்து, கானல் நீர் போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துகின்றன.புளூட்டோ கோள் அல்ல என்று ஏன் தகுதி இறக்கம் செய்யப்பட்டது? எஸ். அபிநயா, 8ம் வகுப்பு, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, விழுப்புரம்.பறக்கும் வௌவால் பறவையல்ல; பறக்க முடியாத பென்குயினை பறவை என்கிறோம். நீந்தும் திமிங்கலத்தை மீன் என்று சொல்லாமல் பாலூட்டி என்கிறோம். ஏன் இப்படி வகைப்படுத்துகிறோம்? உயிரி பரிணாம வளர்ச்சியில் ஏதோ ஒரு பாலூட்டியிடமிருந்து படிநிலை வளர்ச்சி பெற்றதுதான் திமிங்கலம். அவ்வாறே, கோள்களும் சூரியனைச் சுற்றிப் பரிணமித்து வளர்கின்றன. சூரியனுக்கு மட்டுமே கோள்கள் என்ற நிலை மாறி, பல்வேறு விண்மீன்களைச் சுற்றியும் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோள்கள் எப்படித் தோன்றி வளர்ந்து பரிணமிக்கின்றன எனப் பார்க்கும்போது, முதலில் கோள்கரு உருவாகிறது. இவ்வாறு உருவாகும் பல கோள்கருக்கள் சேர்ந்து பிணைந்து, கோள்கள் உருவாகின்றன. சில சமயம், இந்த வளர்ச்சி இடையிலேயே தடைபட்டு, முழு கோளாக வளராமல் குள்ளக்கோளாக மட்டுமே வளர்ச்சி பெறும். புளூட்டோவின் வளர்ச்சியைப் பார்க்கும்போது, அது குள்ளக்கோள் நிலையில் வளர்ச்சி தடைப்பட்ட வான் பொருள் என்பது விளங்குகிறது. அந்த நிலையில் சர்வேதேச வானியல் கழகம், அதனைக் கோள் என்ற வகைப்பாட்டிலிருந்து வேறுபடுத்தி, 'குறுங்கோள்' அல்லது 'குள்ளக்கோள்' (Dwarf Planet) என வகை செய்துள்ளது.தண்ணீருக்கு ஏன் நிறமில்லை? பல்வேறு நிறங்களில் தண்ணீரைப் பார்க்கிறோமே அது என்ன?ஜெ. லட்சுமி தேவிப்ரியா, 12ம் வகுப்பு, கே.சி.ஏ.டி. சிதம்பரம் ஞானகிரி பதின்ம மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.சோடியம் மின்விளக்கு, ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் ஒளிரும். அந்த மின்விளக்கு, அந்த நிற ஒளியைத்தான் வெளிப்படுத்துகிறது. அதைப்போன்று, தானே ஒளியை உமிழும் பொருட்களைத் தவிர, ஒளியைப் பிரதிபலிக்கும் பொருட்களின் நிறம், அதன் வேதியியல் தன்மையைப் பொறுத்தே அமையும். தாவர இலைகளில் உள்ள பச்சையம், பச்சை நிற ஒளியைத் தவிர, அதன் மீது விழும் எல்லா நிற ஒளியையும் உறிஞ்சும். எனவே, அதிலிருந்து பிரதிபலிக்கும் ஒளி, வெறும் பச்சை நிறம் மட்டுமே கொண்டிருப்பதால், இலை நமக்குப் பச்சை நிறத்தில் தெரிகிறது. நீர், எல்லா நிற ஒளியையும் பிரதிபலிக்கிறது. எனவே, நம் பார்வைக்கு அது நிறமற்றதாகத் தென்படுகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியும் நீர் போன்றதே. எந்த நிற ஒளி வந்து விழுந்தாலும், அதே நிற ஒளி பிரதிபலிக்கப்படும். நீரின் மீது சிவப்பு நிறத்தை பாய்ச்சினால், நீரும் சிவப்பாகவே இருக்கும்.புளூ மெட்டல்' என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது? அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன?வி.சந்தானகோபாலன், மதுரை.நீல நிறச் சாயல் கொண்ட கருங்கல் ஜல்லிக்கு, கட்டுமானத் தொழிலில் புளூ மெட்டல் என்று பெயர். இதை இரண்டு பொருளில் பயன்படுத்துகிறார்கள். * ஜல்லி* கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுத்தும் ஒருவகை உலோகக் கலவை. 'ஷேல்' எனப்படும் மென் களிமண் கல், படிவப்பாறை கலந்த பல்வேறு பாறைகள் நீல பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் பாறையை உடைத்து, ஜல்லி செய்து, சாலை அமைக்கப் பயன்படுத்துகிறார்கள். உலோகத்திலும் புளூ மெட்டல் உண்டு. பல்வேறு கைவினைப் பொருட்கள், இந்த உலோகத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. நிலத்திலிருந்து செம்பு பிரித்தெடுக்கப்படும்போது, அதில் இரும்பு போன்ற பல்வேறு உலோகங்கள் கலந்து இருக்கும். இந்தக் கலவையைச் சூடாக்கி, இளகச் செய்து, பல்வேறு செம்புக் கலவையை உருவாக்குவார்கள். இதில், 80- முதல் 87% செம்பு, 12- லிருந்து 14% இரும்பு, சுமார் 0.5% அளவில் சல்பர் இருப்பதே புளூ மெட்டல் என்று உலோகவியலில் அழைக்கப்படுகிறது.