வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஉடனடியாக நிறுத்த முடியாத அளவுக்கு ரயில் இன்ஜின் வேகம் எப்படி அதிகரிக்கப்படுகிறது?ஆர்.வி.சாய் அரவிந்த், 8ம் வகுப்பு, செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, ராமநாநபுரம்.நின்றுகொண்டு இருக்கும் ரயிலை ஓடவைக்க, அதன் உந்தத்தை (Momentum) அதிகரிக்க வேண்டும். பொருளின் வேகம், நிறை ஆகியவற்றின் பெருக்கல் தொகையே, உந்த சக்தி (P உந்தம் = mv). ரயில் நிற்கும்போது பூஜ்ஜியமாக இருக்கும் உந்தம், ஓடும்போது அதிகரிக்கிறது. எல்லா மாற்றமும் ஏதாவது கால இடைவெளியில்தான் நடைபெறும். எனவே, உந்த மாறுகை விகிதம் (rate of change) கூடுதலாக இருந்தால் விரைவில் வேகம் கொள்ளும்; மாறுகை வீதம் குறைவாக இருந்தால் மெல்லமெல்ல வேகம் எடுக்கும்.எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள இன்ஜின், ஆற்றல் மிகுந்தது. எனவே, விரைவில் வேகம் எடுக்கும்; ஆனால், பாசஞ்சர் ரயில் இன்ஜின்கள் திறன் (power) வாய்ந்தவையாக இருக்காது. எனவே கூடுதல் நேரம் எடுத்தே வேகம் எடுக்கும். ஆகவே, ரயிலை நிறுத்த வேண்டும் என்றால், அது செல்லும் திசைக்கு எதிரே அதற்குச் சமமான விசையைத் தரவேண்டும். அவ்வாறு எதிர் உந்தம் தந்து, அதன் உந்தத்தைப் பூஜ்ஜியம் ஆக்க வேண்டும். கால இடைவெளியில் உந்தம் மாறுவதை, அதாவது மாறுகை விகிதத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். மாறுகை விகிதமும் ஒரு விசையே. எனவே மாறுகை விகிதம் கூடுதல் என்றால், பிரேக் மீது அதிக விசையும், பிரேக் மீது கூடுதல் விசை என்றால் உராய்வு விசை கூடுதலாக இருக்கிறது என்றும் பொருள். கூடுதல் உராய்வு கொடுக்கும்போது, விரைவில் ரயிலை நிறுத்திவிட முடியும்தான். ஆனால் கூடுதல் உராய்வால் ஏற்படும் அதிர்வால், ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்படலாம். எனவேதான், ஓரளவுக்கு மேலே உந்த மாறுகை விகிதத்தை அதிகரிக்க முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகே ஓடும் ரயிலை நிறுத்த முடியும். ஒரு செல்போன் ஜாமர் (Jammer) எவ்வாறு வேலை செய்கிறது?ஆர். சஜீவ்கிருஷ்ணா, மகாத்மா சி.பி.எஸ்.இ. மதுரை.குறிப்பிட்ட நகரம் அல்லது பகுதியைத் தனித்தனி பிரிவாகப் பிரித்து இருப்பார்கள். ஒவ்வொரு செல்போன் கோபுரமும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள எல்லா செல்பேசிகளுடனும் தொடர்பில் இருக்கும். மைக்ரோவேவ் எனப்படும் ரேடியோ அலைகள் உதவியுடனே செல்பேசி இயங்கும். ஒவ்வொரு செல் கோபுரத்துக்கும் குறிப்பிட்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப் பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களின் அலைவரிசை என்னவாக இருக்கிறதோ அதே அலைவரிசையை செல்போன் ஜாமர் தொடர்ந்து ஒளிபரப்பும். இதன் காரணமாக, செல்போன் கோபுரத்துடன் சரியாகத் தொடர்பு ஏற்படுத்த முடியாததால் சிக்னல்களைப் பெற முடியாது. இதனால் செல்பேசிகளுக்கு அலைவரிசை கிடைக்காமல் இயங்காமல் இருக்கும்.வீட்டு ப்ளக்கில் (Plug) சார்ஜர் எதுவும் இல்லாமல், வெறுமனே சுவிட்சை மட்டும் ஆன் செய்து வைத்திருந்தால் மின்சார இழப்பு இருக்குமா?கே.ரம்யா, 7ம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, சென்னை.நல்ல கேள்வி. மின்சுற்றுதான் மின்சாரம். மின்சுற்று நடக்காமல் தடை இருந்தால் மின் இழப்பு ஏற்படாது. சுவிச் இயக்கத்தில் இருந்தாலும், ஏதாவது மின்சாதனம் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டால்தான் மின் பயன்பாடு இருக்கும். எடுத்துக்காட்டாக, பிளக்கின் இரண்டு துவாரத்தில் சாக்கெட் (Socket) செருகி மின் விளக்கை எரியச் செய்வோம். மின்ஆற்றலால் ஒளி உண்டாகும். இடையில் மின் விளக்கில் ஃப்யுஸ் (Fuse) இருந்தால் மின்சாரம் பாயாமல் தடை ஏற்படும். எனவே, சுவிட்ச் ஆன் (ON) செய்து இருந்தாலும், பிளக்கில் சார்ஜர் எதுவும் இல்லாமல் வெறுமனே இருந்தால் மின் இழப்பு ஏற்படாது. மேகத்திற்கு மேலே உயரமாகப் பறக்கும் பறவைகள் எங்கிருந்து ஆக்சிஜனைப் பெறுகின்றன?என். பவித்ரா, 9ம் வகுப்பு, மாருதி வித்யா மந்திர், லாஸ்பேட்டை, புதுச்சேரி.ஜெட் விமானத்தோடு போட்டி போடுமளவுக்கு, ரூபெல் பிணந்தின்னிக் கழுகு (Rüppell's Vulture) 11,300 மீட்டர் உயரத்திலும், பட்டைத்தலை வாத்து (Bar-headed Goose-Anser indicus) எனும் வரித்தலை வாத்து 8,800 மீட்டர் உயரத்திலும் பறக்கும். உயரே செல்லச் செல்ல காற்றழுத்தம் குறைந்தாலும், காற்றில் ஆக்சிஜன் விகிதம் அவ்வளவாக மாறாது. மொத்தக் காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கையே குறையும். எனவே, ஆக்சிஜன் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறையும். எவரெஸ்ட் சிகரத்தின் உயரமான 8,848 மீட்டர் உயரத்தில் காற்றழுத்தக் குறைவின் காரணமாக, ஆக்சிஜன் அளவு கடல் மட்டத்தைப் போல வெறும் 33% மடங்கே இருக்கும்.முதலாவதாக, பறவைகள் நொடிக்கு நொடி கூடுதல் மூச்சை இழுத்து விரைவாக சுவாசிக்கின்றன. பறவைகளைப் போல மனிதர்கள் விரைவாக சுவாசிக்கும்போது, ரத்த அமிலத் தன்மை கூடும். அதனால்தான், விரைவாக மூச்சு விட்டபடி கடினமான பாதையில் நடக்கும்போது மயக்கம் வருவதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், பறவைகள். கூடுதல் அமில நிலையையும் தாங்கும் சக்தி படைத்துள்ளன. இரண்டாவதாக, உயரே பறக்கும் பறவைகளின் நுரையீரல் வித்தியாசமாக அமைந்துள்ளது. அவற்றின் ரத்தத்தில் ஆக்சிஜனைக் கவரும் ஹீமோகுளோபின் கூடுதல் ஆக்சிஜனை விரைவாக உறிஞ்சி எடுக்கும் தன்மை வாய்ந்தது. பறவையின் உடல் அளவைக் கணக்கில் கொண்டால், பெரிய நுரையீரல் கொண்டுள்ளது.