வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதொன்மையான எலும்புகளின் வயதை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?அருண் ஆனந்த், மின்னஞ்சல்.அடையாளம் தெரியாத, உருக்குலைந்து போன உடலின் வயதை அதன் எலும்புகளை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியும். வளரவளர நமது எலும்பின் தன்மை, வடிவம், எண்ணிக்கை முதலியன மாறும். இந்த மாற்றங்களை G-P அட்டவணை எனும் ஒரு பதிவில் வரையறை செய்துள்ளனர். இந்த அட்டவணையைப் பார்க்கும்போது, தோராயமாக எலும்புகளின் வயதை மதிப்பிட முடியும். கை விரல்களை எக்ஸ்ரே செய்தே கண்டுபிடிக்க முடியும். எலும்புகள் எவ்வளவு காலம் பழமையானது என்பதை ரேடியோ ஐசோடோப் ஆய்வுகள் மூலம் இனம்காண முடியும். இதில் 'கார்பன் கால அறிதல் முறை' பிரபலம். உயிருள்ள பொருட்கள் சுற்றுச்சூழலிலிருந்து கார்பனை எடுத்துக்கொள்ளும்போது, அதில் இயல்பு விகிதத்தில் 'கார்பன் -14' இருக்கும். ஆனால் அதே உயிரி மடிந்த பின்னர், அதில் புதிதாக கார்பன் வந்து சேராது, எனவே, அதில் 'கார்பன் -14' அளவு மெல்லமெல்ல சிதைந்து தேய்ந்து போகும். மடிந்த புதை தொல்லுயிரியில் எவ்வளவு 'கார்பன் -14' இப்போது இருக்கிறது, இயல்பு விகிதத்தில் எவ்வளவு இருக்க வேண்டும், இரண்டுக்கும் உள்ள இடைவெளியைக் கொண்டு, அந்த உயிரி மடிந்து எவ்வளவு காலம் ஆகியிருக்கலாம் என்பதைக் கணக்கிடலாம். 60,000 ஆண்டுகளில் சற்றேறக்குறைய எல்லா 'கார்பன் -14'ம் சிதைந்துவிடும் என்பதால், 60,000 ஆண்டுகள் தொன்மை வரை மட்டுமே நம்மால் கணக்கிட முடியும். இதேபோல 'பொட்டாசியம்- 40' எனும் ரேடியோ ஐசோடோப்பை வைத்தும், தொன்மையை அறியலாம். 'பொட்டாசியம்-40'ன் அரை வாழ்நாள் 1.25 பில்லியன் ஆண்டுகள். எனவே, மிகமிகத் தொன்மைக் காலத்தை அளவிட இந்த முறை உதவும். இதுபோன்று பல்வேறு ரேடியோ ஐசோடோப்புகளைப் பயன்படுத்தி, தொன்மைத் தன்மை கணக்கிடப்படுகிறது.சூரிய ஒளியைப் பெற்று சந்திரன் பிரகாசிப்பது போல் மற்ற கிரகங்கள் ஏன் பிரகாசிப்பதில்லை?கே.திருவேல், 6ம் வகுப்பு, புனித மேரி மெட்ரிக் பள்ளி, பரமக்குடி.எல்லா கிரகங்களும் அதன் தொலைவுக்கு ஏற்ப பிரகாசிக்கத்தான் செய்கின்றன. சூரியன் மட்டுமே தானே ஒளி தரும் வான்பொருள். எனவே, தொலைவாகச் செல்லச்செல்ல அதன் ஒளி மங்கும். கோள்களில் பட்டுத் தெறிக்கும் ஒளியின் அளவும் அதன் அடிப்படையில் குறைந்து போகும். சூரிய ஒளி பட்டுத் தெறிப்பதால்தான், மற்ற கிரகங்கள் இரவில் நமது கண்களுக்குப் புலப்படுகின்றன. வெறும் கண்களுக்கு ஒரு புள்ளிபோல காட்சி தந்தாலும், தொலைநோக்கியில் பார்க்கும்போது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள புதன், வெள்ளி கோள்களில் நிலவைப் போல பிறைகள் தோன்றி வளர்ந்து தேய்வதையும் காணலாம். மெய்யாக கோள்கள்தான் சூரியனைச் சுற்றுகின்றன என, கலிலியோ உறுதி செய்வதற்கு இந்தக் காட்சிகள்தான் உதவின. மாரடைப்பால் பெண்களைவிட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படக் காரணமென்ன?க.திலக், 8ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காந்திநகர், ராமநாதபுரம்.LDL (Low-density Lipoprotein) கொலஸ்ட்ரால் மிகுவதால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. இளம் பெண்களில் கூடுதலாகச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் லிப்போ புரோட்டீன் எனப்படும் ஒருவகை கொழுப்பு புரதத்தை கூடுதலாக உருவாக்குகிறது. இந்த ஹார்மோன் HDL கொலஸ்ட்ராலை கூடுதலாகச் சுரந்து, LDL கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. எனவேதான், ஆண்களைவிட பெண்களுக்கு மாரடைப்பு குறைவாக வருகிறது எனக் கருதப்படுகிறது. பெண்களுக்கு வயதாகும்போது, ஈஸ்ட்ரோஜென் சுரப்பின் அளவு குறையும். எனவே, மூப்படைந்த ஆண், பெண்களில் மாரடைப்பு வேறுபாடுகள் அவ்வளவாக இல்லை.காய்கனிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும், ஒருசில காய்கள் ஒவ்வாமையை ஏற்படுத்துவது ஏன்?கு.பாதம்பிரியாள், 8ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.விவசாயத்தில் பயன்படும் உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்றவை, சில சமயம் காய்கனிகளில் படிந்திருக்கும். அவற்றை நாம் உண்ணும்போது ஒவ்வாமை ஏற்படலாம். எனினும் பெரும்பாலான உணவுசார்ந்த ஒவ்வாமை அந்தந்தக் காய்கனிகளில் இருக்கும் சில புரதங்கள் ஏற்படுத்தும் பக்க விளைவுகளே. லேடெக்ஸ் அலர்ஜி (Latex Allergy) உள்ளவர்களுக்கு கிவி பழம், வாழைப்பழம் போன்றவை அலர்ஜியை ஏற்படுத்தும். மகரந்தங்களால் ஒவ்வாமை ஏற்படும் நபர்களுக்கு, சூரியகாந்தி விதைகள், பீச் பழம் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். சிலருக்குப் பால் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும். பல்வேறு விதமான விதைக் கொட்டைகளும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். உணவாக உட்கொள்ளும் புரதம், குடலில் உடைக்கப்பட்டுத்தான் செரிக்கப்படும். ஆனால், ஒவ்வாமை ஏற்படுத்தும் புரதங்கள் சிதைக்கப்படாமல் உடலில் புகுந்துவிடுகின்றன. நிழலைப் பார்த்து குறைக்கும் நாய் போல, இந்தப் புரதத்தை உடலை தாக்க வரும் நுண்ணுயிரி என எண்ணி, உடலின் நுண்ணுயிரி எதிர்ப்பு அமைப்பு எதிர்க்கும். ஒவ்வாமையால், அரிப்பு, நமைச்சல் போன்ற தொந்தரவுகள்தான் அதிகமாக ஏற்படும். எனவே, ஒவ்வாமை இருந்தால், மருத்துவர் உதவியுடன் அதை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களைக் கண்டுபிடித்து தவிர்ப்பது நலம்.