உள்ளூர் செய்திகள்

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிமின்சாரம் இல்லாத சமயங்களில் குளிர்சாதனப் பெட்டியில் ஐஸ் கட்டிகள் தானாக உருகி வெளியாவது ஏன்?பா.ரக் ஷனி, 10ஆம் வகுப்பு, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, புதுப்பாளையம், கடலூர்.அழுத்தமான வாயு விரிவடையும்போது, அதன் வெப்பம் குறையும் எனும் இயற்பியல் தத்துவமே, குளிர்சாதனப் பெட்டியின் அடிப்படை. குளிர்சாதனப் பெட்டியின் பின்புறத்தில் கருப்பு நிறத்தில் அமுக்கி (Compressor) இருக்கும். இந்த கம்ப்ரசர் இயங்கும்போது, அதனுள் அடைக்கப்பட்டுள்ள வாயுவை மென்மேலும் அழுத்தி கம்ப்ரசரின் வாய் வழியாக வெளியேற்றும். அழுத்தமான இந்த வாயு கம்ப்ரசர் வழியே வெளிவந்து குளிர்சாதனப் பெட்டிக்குள் சிறு நுண்குழாய் மூலம் செல்லும். குழாயில் விரிவடையும் வாயு குளிரடையும். அங்கே உள்ள வெப்பத்தை உறிஞ்சி வெளியே வரும் சூடான வாயுவை நுண் குழாய் மூலம் செலுத்தும்போது, காற்றுப் பட்டு மறுபடியும் வெப்பத்தைக் காற்றில் கலந்துவிடும். அவ்வாறு தொடர்ச்சியாக நடைபெறும்போது, குளிர்சாதனப் பெட்டிக்குள் குளிராக இருக்கும். குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரசர் இயங்க மின்சாரம் தேவை. மின்சாரம் இல்லையென்றால், கம்ப்ரசர் இயங்காது; அதனால் இந்தச் சுழற்சியும் இருக்காது. ஆகவே, பெட்டிக்குள் மெல்ல மெல்ல வெப்பம் புகுந்து ஐஸ் கட்டி உருகத் தொடங்குகிறது.ஈ, எறும்புகளுக்கு இதயம் உண்டா?ஆர்.எஸ்.விஜய் ஆனந்த், 5ஆம் வகுப்பு, மு.வி. நடுநிலைப் பள்ளி, கம்பம்.மனிதர்கள், விலங்குகள் போல அல்லாமல், பூச்சிகளின் உடலுறுப்புக்கள் அதனுடைய குருதி நிண (hemolymph) நீரில் மிதக்கின்றன. எனவே ஈ, எறும்பு போன்ற பூச்சிகளுக்கு நான்கு அறைகள் கொண்ட இதய அமைப்பு கிடையாது. ரத்தத்தை நுரையீரலுக்கு அனுப்பிச் சுத்தம் செய்து உடலின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்பும் பணியை மனித இதயம் செய்கிறது. அதுபோல, பூச்சிகளின் முன்புறம் ரத்தத்தை அனுப்ப, அவற்றின் பின்புறமாகத் துளைகள் நிரம்பிய குழாய் ஒன்று உள்ளது. அதில் உள்ள துளைகள் வழி ரத்தத்தை உறிஞ்சி முன்புறமாகப் பீச்சி அடிக்கும். அதன் தொடர்ச்சியாக ரத்தம் பூச்சிகளின் முன்புறமும் செல்லும். இந்த உறுப்பை வேண்டுமென்றால் பூச்சிகளின் இதயம் எனக் கூறலாம். இதுபோன்ற அமைப்பு உருவில் பெரிய பூச்சிகளில் இறகுகளின் அருகிலும் இருக்கும். ஆயினும் ரத்த நாளங்கள் பூச்சிகளுக்குக் கிடையாது. நாய்க்கு வெறி பிடித்தாலும் தன் எஜமானனைக் கடிக்காது என்பது உண்மையா? எம். பரத் கல்யாண், 11ஆம் வகுப்பு, பி.கே.என். உயர்நிலைப் பள்ளி, திருமங்கலம், மதுரை.கோடைக்கால கடும் வெயிலில் திரிவதாலும், பிராய்லர் கோழிகளின் கழிவுகளை உண்பதாலும் நாய்களுக்கு வெறிபிடிப்பதாகச் சொல்கிறார்கள். பிராய்லர் கோழிகளின் கழிவுகளில் நச்சுத்தன்மை இருக்கிறது. அவற்றைத் தின்னும் நாய்களுக்கு ரேபிஸ் (Rabies) வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த வைரஸ் அதனுடைய உடலுக்குள் சென்று பல்கிப் பெருகி, உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது.ஒருவேளை, நல்ல கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட நாய்க்கு வெறிபிடித்தால், தன் எஜமானனை கடிக்கத் தயங்கலாம். ஆனால் கடிக்கவே கடிக்காது எனக் கூற முடியாது. வளர்ப்பு நாய்களுக்கு வெறி பிடித்தால் கடிக்காது என்று சொல்வது, தவறான கற்பிதம்.மரங்களை அழித்தால் உயிரினங்கள் ஏன் வாழ முடியாது? வேற்று கிரகத்தில் மரங்கள் இல்லைதானே?மா.புஷ்பலதா, 7ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, குருவாயல், திருவள்ளூர்.'யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்' எனக் கூறக்கூடாது என்பார்கள். மனிதர்களும் விலங்குகளும் சுவாசித்து வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை மறுபடி உள்வாங்கி, மரங்கள், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. எனவே, ஆக்சிஜன் - கார்பன் டை ஆக்சைடு -ஆக்சிஜன் என சுழற்சி நடைபெறத் தாவரங்கள் அவசியம். வேறு கோள்களில் உயிரிகள் இல்லை என்பதால் அங்கே இதுபோன்ற சுழற்சியும் இல்லை. வேறு கோள்களுக்குச் செல்லும்போது, ஆக்சிஜன் உருளைகளை எடுத்துச் சென்றே சுவாசிக்கிறார்கள். வருங்காலத்தில் ஏதாவது கோளில் நீண்டநாள் குடியிருக்க வேண்டும் என முடிவு செய்தால், அங்கே ஆக்சிஜன் - கார்பன் டை - ஆக்சைடு -ஆக்சிஜன் என சுழற்சி ஏற்பட ஏதாவது வழி செய்தால் மட்டுமே சாத்தியம். அப்போது அங்கும் மரம், செடி, கொடி வளர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !