உள்ளூர் செய்திகள்

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி01. 2ஜி, 3ஜி, 4ஜி என்பதில் வேகம் எவ்வாறு வேறுபடுகிறது?கே. சக்திவேல், டி.இ.சி.இ. பிரின்ஸ் கல்லூரி, பொன்மார்.நமது காதுகளில் ஒலியும் ஒலியற்ற இடைவெளியும் சேர்ந்து வருவதையே நம்மால் பேச்சு என உணர முடியும். தொலைபேசி இணைப்பில் இந்தப் பேச்சு கடத்தப்படும்போது, சப்தங்களும் நிசப்தங்களும் இணைந்துதான் கடத்தப்படுகின்றன. இதைச் செய்வதே 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி போன்ற அலைபேசி தொழில்நுட்பங்கள். இதில் 'ஜி' என்பது தலைமுறை (Generation).ஆண்டு 1980: 1ஜி கம்பி இல்லாமல் அனலாக் சிக்னல்கள் மூலம் பேசும் மொபைல் தொழில்நுட்பத்தின் முதல் படி. 2.4 முதல் 14.4 kbps சிக்னல் மட்டுமே செலுத்த முடிந்ததால், பேச்சை மட்டுமே அனுப்ப முடிந்தது. ஆண்டு 1991: 2ஜிதகவல்கள் இடையே உள்ள இடைவெளியைச் சுருக்கி அனுப்பக்கூடிய டிஜிட்டல் தொழில்நுட்பம். குறுஞ்செய்தி, MMS காணொளி போன்றவற்றை அனுப்ப முடிந்தது. ஆண்டு 2001: 3ஜிசுமார் 3 Mbps தகவல்களை அனுப்பும் திறன் இருந்ததால், வீடியோ தொடர்பு, ஜி.பி.எஸ்.,இணையதளப் பயன்பாடு போன்றவை சாத்தியமானது.ஆண்டு 2009: 4ஜி4-6 Mbps திறனுடன் இருந்ததால், அதிவேக இணையதளம், துல்லியமான வீடியோ தொலைத் தொடர்புகள், மொபைல் 'டிவி', இ - மெயில் என ஒரு கணினி செய்யும் எல்லா வேலைகளையும் செய்ய முடிந்தது. நெல்லிக்காய் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கிறதே எதனால்?மு.மணிமாறன், 10ஆம் வகுப்பு, வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி, வாணியம்பாடி.ஏன் இனிக்கிறது என்பதற்குச் சரியான அறிவியல் விடை இல்லையென்றாலும், நமக்குத் தெரிந்த வேதியியல், உணவு செரிக்கும் முறை முதலியவற்றைக் கொண்டு, சில அறிவியல் யூகங்கள் உள்ளன. வைட்டமின் சி போன்ற அமிலங்களில் இருந்தே நெல்லிக்காயின் புளிப்புச் சுவை ஏற்படுகிறது என்பதுதான் அந்த யூகம். 100 கிராம் நெல்லிக்காயில் சுமார் 625 மி.கி. வைட்டமின் சி உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் சி மற்றும் சர்க்கரை இவற்றின் வேதிப் பொருள் வடிவம் சற்றேறக்குறைய ஒன்றுபோல இருக்கும். நீரில் கரையும் வைட்டமின் சி இனிப்புச் சுவை உணர்விகளைத் தூண்டுவதால் இனிப்பாக இருக்கிறது எனவும், எச்சிலில் உள்ள நொதி, வைட்டமின் சி அமிலத்தை நொதித்துச் சிதைத்து குளூக்கோஸ் எனும் சர்க்கரைப் பொருளாக மாற்றுகிறது எனவும் கருத்து நிலவுகிறது. இதில் எது சரியானது என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை.எந்த வகைத் தாவரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்?தி.சமித்ரா, 6ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.உருளைக்கிழங்கு அல்லது எலுமிச்சம் பழத்தில் செம்பு, துத்தநாகத் தகட்டைக் குத்திவைத்து அந்த இரண்டு தகட்டையும் இணைத்து எல்.இ.டி. பல்பை எரியச் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு இருவேறு உலோகங்களைப் புகுத்தும்போது, எலுமிச்சை, உருளைக்கிழங்கு போன்ற தாவரப் பொருட்கள் மின்வேதி மின்கலமாக மாறி, வேதி ஆற்றல் மின்னாற்றலாக மாறுகிறது. உருளைக்கிழங்கில் உள்ள வேதிப் பொருட்களுடன் துத்தநாகம் வினைபுரிவதன் தொடர்ச்சியாகத் தன்னிடமிருந்து எலக்ட்ரானை விடுவித்து செம்பிடம் சேர்க்கிறது. இந்த எலக்ட்ரான் எலுமிச்சம்பழம் மற்றும் உருளைக்கிழங்கில் உள்ள மின் பகுளி பொருட்களின் ஊடே செல்ல முடியும். அதன் தொடர்ச்சியாக மின்னோட்டம் ஏற்படுகிறது. இது ஒருவகை வோல்ட்டா மின்கலம். பொதுவாக அமிலங்கள் செறிவாக உள்ள காய்கனிகளை இவ்வாறு பயன்படுத்த முடியும்.தொட்டி மீன்களை தண்ணீரில் இருந்து எடுத்து வெளியே விட்டால் ஏன் இறக்கின்றன?வீ.எஸ். யாக்னா, 4ஆம் வகுப்பு, நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி, பீளமேடு, கோயம்புத்தூர்.தொட்டி மீன் மட்டுமல்ல; எல்லா மீன்களாலும் நீருக்கு வெளியே உயிர் வாழ முடியாது. மீனும் ஒருவகை விலங்குதான். அது இயங்குவதற்கு ஆக்சிஜன் தேவை. நாம் மூக்கு வழியே காற்றை உறிஞ்சி நுரையீரலுக்குள் எடுத்துச் செல்கிறோம். மீன் போன்ற நீர் வாழ் விலங்குகளுக்கு நுரையீரல் அமைப்பு இல்லை. மீனுக்கு துடுப்பு அருகே செவுள்கள் (Gills) உள்ளன. வாயால் நீரை எடுக்கும் மீன்கள் செவுள்கள் வழியாக நீரை வெளியேற்றுகின்றன. செவுள்கள் வழியே நீர் பாயும்போது, அதில் கரைந்துள்ள ஆக்சிஜனை செவுள் உறிஞ்சிக் கொள்கிறது. சில மீன்கள் நீரில் கரைந்துள்ள சுமார் 85 சதவீத ஆக்சிஜனை உறிஞ்சும் திறன் படைத்தவை. எனினும் நீரில் கரைந்துள்ள காற்றின் அளவு வெளிக் காற்றில் உள்ள விகிதத்தை விடக் குறைவு. எனவே, மீன் செவுள்களின் மொத்தப் பரப்பளவு விகிதம் மனித நுரையீரலை விடக் கூடுதல். மிகவும் மெலிதாக உள்ள செவுள்கள் நீரில் மிதக்கும்; நீருக்கு வெளியே தலைசாய்ந்து விடும். எனவே, நீருக்கு வெளியே சிறிதுநேரம் மட்டுமே மீன்களால் வாழ முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !