வெங்கியை கேளுங்கள்!
கோள்கள் எல்லாம் கோள வடிவில் இருப்பது ஏன்?கி.கேசவன். செங்கப்படை.பூமியை எடுத்துக்கொள்வோம், பூமியில் உள்ள எல்லா பொருட்கள் மீதும் இரண்டு எதிரும் புதிருமான விசைகள் செயல்படுகின்றன. ஒன்று பூமியின் மையத்தை நோக்கிக் கவர்ந்து இழுக்கும் ஈர்ப்பு விசை. இரண்டு பொருட்கள் ஏற்படுத்தும் விலக்குத் தன்மை கொண்ட எதிர்விசை. வெறும் ஈர்ப்பு விசை மட்டும் இருந்தால் பூமியில் கால் வைக்கும் நாம் ஏன் மையம் நோக்கிச் செல்வதில்லை? பொருட்கள் ஒன்றுடன் ஒன்று வேதிப் பிணைப்பில் உள்ளதால் அந்தப் பிணைப்பை உடைத்துத்தான் நாம் உள்ளே செல்ல முடியும். அதாவது வேதிப் பிணைப்பில் உள்ள பொருட்கள் வெளிப் பொருள் மீது விலக்குத் தன்மை கொண்ட எதிர் விசையைத் தூண்டும். இந்த இரண்டு விசைகளுக்கும் இடையே உள்ள இழுபறிதான் வான் பொருட்களின் விதியைத் தீர்மானிக்கும். கூடுதல் நிறை இருந்தால் அந்தப் பொருளின் ஈர்ப்புக் கவர்ச்சி விசை கூடுதலாகி, கோள்கள் கோள வடிவம் பெருகின்றன! நிறை அவ்வளவாக இல்லாமல் இருந்தால் ஓரளவு கோள வடிவம் பெரும். குறைவாக இருந்து பொருட்களின் விலக்குத் தன்மை உடைய வேதிப் பிணைப்பு விசை கூடினால் அந்த வான் பொருள், வெவ்வேறு வடிவங்களில் காணப்படும். பொதுவாக, ஐநூறு கி.மீ.க்கும் கூடுதல் விட்டம் கொண்ட வான் பொருட்கள் பொதுவாகக் கோள வடிவம் பெறும். கோள்கள் எல்லாம் பெரிதானவை. எனவே கோள வடிவில் உள்ளன. ஆனால், சிறு கோள்கள் எனப்படும் வான் பொருள்கள் பல்வேறு வடிவங்களில் காணப்படும். இறந்த பிறகு உயிரினங்களின் உடல் அழுகிச் சிதைகிறதே ஏன்?S.மதுபார்கவி, 4ஆம் வகுப்பு, அக்ஷயா அகாடமி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.அழுகுதல் என்றால் என்ன? உடல் மட்டுமல்ல, வெளியே வைக்கும் காய்கறி, பழத்தோல் முதலியவையும் அழுகும். காற்றுடன் வேதிவினை புரிந்து அழுகல் நடைபெறலாம். அல்லது நுண்ணுயிரிகள் சிதைவு செய்து அழுகல் ஏற்படலாம். எதுவாக இருந்தாலும் இறுதியில், அழுகுதல் என்பது, உயிரி கரிமப் பொருட்கள் சிதைவு அடைவதுதான். உயிர் உள்ளவரை சிதையும் செல்கள் புதிய செல்களைத் தயாரித்துத் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. ஆனால், உயிரற்ற உடலால் உயிரி வினைகளைச் செய்ய முடிவதில்லை. எனவேதான் உயிர் போனபின் எல்லா உடல்களும் மக்கிச் சிதைகின்றன. தொழிற்சாலைகளின் கூரைகள் உயரமாகவும் ரம்பம் போன்ற அமைப்பில் வளைந்தும் காணப்படுவது ஏன்?கா.ப.பத்மபிரியா, 10ஆம் வகுப்பு, காவியன் மெட்ரிக் பள்ளி, அம்மையநாயக்கனூர், திண்டுக்கல்.நவீன தொழிற்சாலைகள், 1820 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டு ஒரே இடத்தில் பல ஆயிரம் தொழிலாளிகள் ஒன்று கூடி, இயந்திரங்கள் கொண்டு பணி செய்யும் நிலை ஏற்பட்ட போதுதான் இந்தச் சிறப்பு வடிவமைப்புடன் கூடிய கூரை வடிவம் ஏற்படுத்தப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஃபேர்பைர்ன் (William Fairbairn) எனும் கட்டடக் கலை நிபுணர்தான் இந்த வடிவக் கூரையை 1827ல் வடிவமைத்தாராம். ரம்பம் போன்ற இந்தக் கூரையில் செங்குத்தான பகுதி கண்ணாடியால் வேயப்பட்டிருக்கும். சாய்வாக உள்ள பகுதி தகரம் அல்லது கான்கிரீட்டால் உருவாக்கப்பட்டிருக்கும். கூரை உயரமாக இருப்பதால் முதலில் தொழிற்சாலைகளில் ஏற்படும் வெப்பம், புகை முதலியவை மேல் நோக்கிப் போய்விடும். எனவே தொழிலாளர்கள் சற்றே சுத்தமான சூழலில் வேலை செய்ய முடியும். அதேபோல, ரம்பம் போன்ற கூரை தெற்கு நோக்கி சாய்ந்தும் செங்குத்தான பகுதி வடக்கு நோக்கியும்தான் பொதுவாகவே அமைப்பார்கள். பூமியின் வட கோளத்தில் சூரியன் தெற்கு நோக்கிதான் வானில் பயணம் செய்யும். அதனால் நேரடியாக சூரிய ஒளி வடக்கு நோக்கி உள்ள கண்ணாடி வழியாக நேரடியாக வெயில் விழாது. அதே சமயம், கண்ணாடியின் எதிரே உள்ள கூரையில் சூரிய ஒளி விழுந்து, பிரதிபலித்து ஒரே அளவில் கூரையின் கீழ், எல்லா இடங்களிலும் சமமாகப் பரவும். மேலும் முந்தைய கட்டடம் அருகே, கூடுதலாக மேலும் ஒன்றிரண்டு ரம்பம் போன்ற அமைப்பை வேய்ந்து, பழைய கட்டடத்தில் பெரும் மாற்றம் இல்லாமல் தொழிற்சாலையை எளிதில் விரிவுபடுத்தலாம். அதாவது, புகை நீக்குதல், வெளிச்சம் வரச் செய்தல், எளிதில் விரிவுபடுத்தும் அமைப்பு என்ற மூன்று மாங்காய்களை வெறும் 'கட்டட அமைப்பு' எனும் கல் கொண்டு எளிதில் அடைந்து விடலாம். புளுட்டோ என்பது கோள் அல்ல என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால் அதற்கும் சூரியக் குடும்பத்திற்கும் என்ன தொடர்பு?ச.சிவசங்கரி, 7ஆம் வகுப்பு, ஸ்ரீ முருகானந்த நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.முதலில் சூரியனைச் சுற்றுபவை எல்லாம் கோள் அல்ல என்பதை நினைவில் வைக்கவேண்டும். வரலாற்றில், வெறும் கண்களுக்குப் புலப்படக் கூடிய பூமி, வீனஸ் எனப்படும் வெள்ளி, சனி முதலிய ஆறு வான் பிண்டங்கள்தான் சூரியனைச் சுற்றுகின்றன என நாம் கருதி இருந்தோம். தொலைநோக்கி வந்த பின் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மேலும், நுணுக்கமான தொலைநோக்கி வந்த பின் வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றுகின்றன என விளங்கியது. மேலும், செவ்வாய்க்கும் ஜூபிடர் எனப்படும் வியாழன் கோளுக்கும் இடையில் 1800ஆம் ஆண்டுகளில் பற்பல சிறுசிறு கோள்கள் சுற்றிவருவதைக் கண்டுபிடித்தார்கள். இவற்றை அந்தக் காலத்தில் 'கோள்கள்' என வகை செய்தார்கள். எனவேதான் பாரதி தன் கவிதையில் நூறு நூறு கோள்கள் எனக் கூறினார். பிற்காலத்தில்தான் ஆயிரம் ஆயிரம் சிறு சிறு கோள்கள் அந்தப் பகுதியில் சூரியனைச் சுற்றுவதைக் கொண்டு அவற்றை எல்லாம் 'சிறு கோள்கள்' (Asteroids) என, புதிதாக வகைப்படுத்தினார்கள். அதே போல 1930ல் புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டபோது அதை, 'கோள்' என வகைப் படுத்தினாலும் காலப் போக்கில் புளுட்டோவின் பாதைக்கு அருகே பற்பல, சிறு சிறு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் இவற்றை எல்லாம் தனியாக வகைப்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்குப் புரிந்தது. நீரில் நீந்தும் என்றாலும் திமிங்கிலத்தை மீன் என்பதில்லை, பாலூட்டி என்றே கூறுகிறோம். பறக்கும் என்றாலும் வௌவால் பறவை இல்லை. பறக்கவே இயலாத பென்குயின் பறவைதான் இல்லையா? அதுபோலவே, இதுவரை நமக்குத் தெரிந்த பத்து லட்சத்திற்கும் அதிகமான, சூரியனைச் சுற்றும் வான் பொருட்களை எப்படி முறையாக வகைப்படுத்துவது என விஞ்ஞானிகள் கூடி ஆராய்ந்தபோது புது வகைப்பாடு தேவை எனப் புரிந்தது. அதன் தொடர்ச்சியாக, சூரியனைச் சுற்றும் பொருட்களை மூன்று பெரும் வகையாகப் பிரித்துள்ளார்கள். பூமி முதலிய எட்டுக் கோள்கள்; புளுட்டோ, செரிஸ் போன்ற 'குள்ளக் கோள்கள்'; வால் நட்சத்திரம், சிறு கோள்கள் முதலியவற்றை, 'சூரிய குடும்ப இதர பொருட்கள்' என மூன்று வகைகளாக வான் பொருட்களை வகைப்பாடு செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.