உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்கள்!

அருகில் இருப்பவர் கொட்டாவி விடும்போது, நமக்கும் கொட்டாவி வருகிறதே ஏன்?K.தினேஷ், கோவை.கொட்டாவி விடும்போது, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதுடன், ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன் -டை- ஆக்ஸைடு, உடலில் இருந்து வெளியேறும் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், அது அறிவியல் உண்மையல்ல! 'களைப்படைந்த மூளையை சற்றே குளிரவைக்க, வாயைத் திறந்து, காற்றை உள்ளே இழுத்து, மூளைக்குப் போகும் ரத்தத்தின் வெப்ப நிலையைக் குறைக்கும் அனிச்சை போக்குதான், கொட்டாவி' என, சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.எலி, பூனை, யானை போன்ற பல விலங்குகள் கொட்டாவி விடும் என்றாலும், சமூகக் குழுவாக வாழும் சிம்பன்சி போன்ற மனித இனத்தின் நெருக்கமான விலங்குகளில்தான், ஒருவர் கொட்டாவி விட்டால், மற்றவர் கொட்டாவி விடும் தொற்று இருக்கிறது. 'மற்றவருடைய தன்மையை ஒத்து, அருகில் இருப்பவர்களும் அதே தன்மையை வெளிப்படுத்தும் பழக்கம் பரிணாமத்தில் உருவானது' என, சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மனித இனம் உருவாகும் முன்னர் இருந்த, மனித சாயலைக் கொண்டிருந்த நமது மூதாதையர்களில், தலைமை இடத்தில் இருக்கும் விலங்கு செய்வதை, மற்றவர் திரும்ப செய்வதன் மூலம், தலைமை இடத்தில் இருப்பவர் சொல்வதைக் கேட்டு நடக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மனித இனத்தில் ஒருவர் கொட்டாவி விட்டால், அருகில் இருப்பவர்களும் கொட்டாவி விடுகிறார்கள் என, சில விஞ்ஞானிகள் கூறினாலும், இந்தக் கேள்விக்கு அறிவியலில் சரியான விளக்கம் இல்லை.பூமியிலிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயை பெட்ரோல், டீசல் எனத் தனித்தனியாக எப்படிப் பிரிக்கிறார்கள்?மு.யஷ்வந்த்குமார், 8ம் வகுப்பு, டாக்டர் ஆர்.கே.எஸ். மாஸ்டர்ஸ் மெட்ரிக் பள்ளி, கள்ளக்குறிச்சி.உப்புநீரைக் காய்ச்சினால் நீர் ஆவியாகும்; உப்பு தங்கிவிடும். ஆவியான நீரை பிடித்துக் குளிர்வித்தால் நீரை பெற்றுவிடலாம். இதேபோல, கச்சா எண்ணெயைக் காய்ச்சி வடிகட்டினால், பல எரிபொருள் எண்ணெய்களையும், பல்வேறு வேதிப் பொருட்களையும் பிரித்தெடுக்கலாம். போலந்து நாட்டை சேர்ந்த லெக்னாசி லுகாசிவிக் (Lgnacy -ukasiewicz) என்ற வேதியியல் வல்லுநர் 1846ம் ஆண்டு, கச்சா எண்ணெயிலிருந்து மண்ணெண்ணெயைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.1854ம் ஆண்டு, கச்சா எண்ணெயில் இருந்து, குறிப்பிட்ட வெப்ப நிலையில் பெட்ரோலை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை, பெஞ்சமின் சில்லிமன் (Benjamin Silliman) என்ற அமெரிக்கர் கண்டறிந்தார். இதே வடிகட்டி முறைகொண்டு, கச்சா எண்ணெயில் இருந்து, பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், மசகு எண்ணெய், தார் ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. முதலில், டீசல் எண்ணெய்க்கு 'ஆயில்' என்றே பெயரிடப்பட்டிருந்தது. ஆயினும், டீசலில் இயங்கும் ஒரு வகை இன்ஜினை 1893ம் ஆண்டு, ருடால்ஃப் டீசல் (Rudolf Diesel) கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, இதற்கு 'டீசல்' என்கிற அவரது பெயரே சூட்டப்பட்டது.சிறுவர்களைக் கவரும் கார்ட்டூன் படங்களை, காட்சிகளாக எப்படி எடுக்கிறார்கள்?என். லேனா, 7ம் வகுப்பு, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.ஒரு நொடிக்கு, 24 படங்கள் என்ற விகிதத்தில், சீராகவும் தொடர்ச்சியாகவும் படங்களை மாற்றிக் கொண்டிருந்தால், அது திரைப்படமாகும். முற்காலத்தில், ஒவ்வொரு நொடிக்கும், சுமார் 24 படங்களை வரைவார்கள். அந்தப் படங்களில், சிறுசிறு மாற்றங்களை செய்து, அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, அதிவேகத்தில் ஓட்டிப் பார்த்தால், அசைவது போன்ற தோற்றம் தரும். நவீன காலத்தில், கணினியில் படங்களை வரைந்து, கணினி கொண்டு அனிமேஷன் எனப்படும் கார்ட்டூன் படங்களை அசையச் செய்கிறார்கள். திரையில் உயிரோட்டமாகக் காட்டுவதற்காக, உருவங்களைப் படைக்கும் கலைக்கு, அனிமேஷன் என்று பெயர்.பூமியில் தினமும் இரவு, பகல் மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது?ரக்ஷனி பாபு, 9ம் வகுப்பு, தூய அன்னாள் மகளிர் பள்ளி, கடலூர்.பூமி, பந்து போன்ற வடிவம் கொண்டது. வட-தென் துருவங்களை இணைக்கும் அச்சில், பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அவ்வாறு சுற்றும்போது, பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதி, சூரியனுக்கு நேராகவும், மறு பகுதி எதிர் திசையிலும் செல்லும். இதுவே பகல், இரவு. சூரியனை நோக்கி அமைந்தால், அந்த பூமிப்பகுதி பகல்; சூரியனுக்கு எதிர் திசையில் உள்ள பூமிப்பகுதி இரவு. பூமி தன்னைத்தானே சுற்றும்போது, பூமியின் ஒவ்வொரு பகுதியும், பகல் இரவை இவ்வாறுதான் சந்திக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !