வெங்கியை கேளுங்கள்!
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிஇலைப்பூச்சி, குச்சிப்பூச்சி போன்ற பூச்சிகளுக்கு உள்ளுறுப்புகள் உள்ளனவா?எஸ்.மோகன், 9ஆம் வகுப்பு,நேரு வித்யாசாலை மேல்நிலைப் பள்ளி, மதுரை.இலைப்பூச்சி, குச்சிப்பூச்சி போன்றவற்றுக்கும் தலை, தொண்டை, வயிறு என்ற மூன்று பகுதிகள் உண்டு. எல்லாப் பூச்சிகளைப் போலவும் முட்டையில் இருந்தே இந்தப் பூச்சிகள் பிறக்கின்றன. பூச்சிகளுக்கு நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகள் இல்லை. இலைப்பூச்சி, குச்சிப்பூச்சிகளுக்கு பார்வைத்திறன் மங்கலாகவே இருக்கும். காதுகள் இல்லை என்றாலும், காற்றில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டு சிலவற்றை உணரும். இவற்றின் முக்கிய உணர்வு அமைப்பு, வேதி உணர்வு அமைப்பு. பல்வேறு வாசனைகளைப் பிரித்து அறியும் திறனை மூக்கு கொண்டிருப்பது போல, இந்த வகைப் பூச்சிகள் பொருட்கள் வெளியிடும் வேதிப்பொருளை முகர்ந்து அறிந்துகொள்ளும். போர்னியோ தீவுகளில் வாழும் போபேடிகஸ் சானி (Phobaeticus chani) எனப்படும் குச்சிப்பூச்சியின் உடல் மட்டும் 14 அங்குல நீளம் கொண்டது. அதன் கால்களோடு அளந்தால், அதன் நீளம் சுமார் 22 அங்குலம். இதுவே உலகிலேயே மிக நீளமான குச்சிப்பூச்சி.மில்லினியம் பரிசுக் கணக்குகள் என்றால் என்ன? அவற்றுக்குத் தீர்வுகள் கண்டறியப்பட்டனவா?செ.வினோத்குமார், 10ஆம் வகுப்பு, ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை.க்ளே கணிதவியல் நிறுவனம் (Clay Mathematics Institute) எனும் அமைப்பு, 2000ஆம் ஆண்டு மே மாதத்தில், சில நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் ஏழு கணிதப் புதிர்களைப் பட்டியலிட்டது.Yang-Mills and Mass GapRiemann HypothesisP vs NP ProblemNavier-Stokes EquationHodge ConjecturePoincaré ConjectureBirch and Swinnerton-Dyer Conjectureஇவற்றுக்குச் சரியான தீர்வு தந்தால், ஒவ்வொரு புதிருக்கும் $1,000,000 (சுமார் ஆறு கோடி ரூபாய்) பரிசு என அறிவித்தது. இதையே மில்லினியம் பரிசுக் கணக்குகள் என்கிறார்கள். இவற்றில், பாயின்கேர் யூகம் (Poincaré Conjecture) எனும் ஒரு கணிதப் புதிரை, கிரிகோரி பர்ல்மன் (Grigori Perelman) எனும் ரஷ்ய கணிதவியலாளர் விடுவித்தார். 2002இல் அவர் வெளியிட்ட நிரூபணத்தை ஆராய்ந்து, 2006இல் கணித உலகம் ஏற்றுக்கொண்டது. அதற்காக, கணித உலகின் தலைசிறந்த 'ஃபீல்ட்ஸ்' மெடலும், க்ளே நிறுவனத்தின் ஆறு கோடி ரூபாய் பரிசும் அவரைத் தேடி வந்தன. “என் மனத் திருப்திக்காகவே ஆய்வு செய்தேன், பரிசுப் பணம் எதுவும் வேண்டாம்' என மறுத்துவிட்டார் பர்ல்மன்! இன்னமும் ஆறு புதிர்கள் மீதம் உள்ளன. நீங்களும் முயற்சி செய்யலாம்.காய்ந்துபோன மரங்களை அரிக்கும் கரையான், பச்சை மரங்களை அரிப்பதில்லையே ஏன்?ஜே.சி.தீபக், 5ஆம் வகுப்பு, ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் பள்ளி,கொங்கல் நகரம், திருப்பூர்.சில சமயம் பச்சை மரங்களையும் கரையான் அரிக்கும். மரங்கள், தாம் வெளியிடும் சில நஞ்சுப் பொருட்கள் மூலம் கரையான் போன்ற புழு பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்கின்றன. செல்லுலோஸ் எனப்படும் மரநார்தான் கரையானின் விருப்ப உணவு. பச்சை மரம், மடிந்த மரம், மரக்கூழால் செய்யப்பட்ட பேப்பர் போன்ற எல்லாவற்றையும் கடித்துக் குதறி கரையான் உண்ணும். வயலில் இருக்கும் கரையான் நிலக்கடலை, சோளம் போன்ற தாவரங்களையும் உண்ணும். சில மரங்களில் சுரக்கும் லிக்னின் எனும் வேதிப்பொருள், கரையானுக்கு நஞ்சு. அந்த மரங்கள் மடிந்து லிக்னின் சுரப்பு நிற்கும் வரை, அவற்றைக் கரையான் அண்டாது. சில மரங்கள் அதன் மையப்பகுதியில் சிலவகைப் பிசின்களைச் சுரந்து செல்லுலோஸ் மீது பூச்சு செய்யும். இந்தப் பூச்சு பெற்ற செல்லுலோசை, கரையான் எளிதில் அரித்துச் சிதைக்க முடியாது. இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு கரையான் அரிப்பைத் தடுக்கும் இயற்கைப் பூச்சுகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.மாட்டுச் சாணத்தை தரையில் ஏன் மெழுகுகிறார்கள்? இதனால் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க முடியுமா?எஸ். சக்திவேல், திருப்பூர்.இன்று போல முந்தைய காலத்தில் சிமென்ட், டைல்ஸ், மார்பிள் போன்ற தரைகள் இருக்கவில்லை. எனவே, மண் தரையைப் பிணைத்துவைக்கும் எளிதான பிணைப்பானாக மாட்டுச் சாணம் செயற்பட்டது. அதனாலேயே, சாணம் மெழுகுவதற்கான தேவை ஏற்பட்டது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா போன்ற ஒட்டுண்ணிகள்தான் சில தோற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, 'விப்ரியோ' நோய்க் கிருமிகள் தொற்றிய நீர் அல்லது உணவுப்பண்டங்களை உட்கொள்வதால் காலரா ஏற்படுகிறது. காலரா நோயாளியின் மலத்தில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான 'விப்ரியோ' கிருமிகள், பிறருக்கு இந்த நோய் பரவக் காரணமாகின்றன. எனவே, இதுபோன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க, திறந்தவெளியில் மலம் கழித்தல் கூடாது. சுகாதாரமான நீரை அருந்தவேண்டும். பொதுவாக, மாட்டுச் சாணம் மெழுகுவதால் மட்டும், இப்படிப்பட்ட தொற்றுகளில் இருந்து தப்பிக்க முடியாது.