வெங்கியை கேளுங்கள்!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிநமது சூரியக் குடும்பத்தில் கோள்கள் எவ்வாறு தோன்றின? இப்போது புதிய கோள்கள் தோன்றுகின்றனவா?பி.சபரிநாதன், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்.சூரியன், சூரியக் குடும்பக் கோள்கள் எதுவும் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் விண்வெளியில் இருக்கவில்லை. அந்தப் பகுதி முழுக்க சோலார் நெபுலா எனப்படும் சூரிய மேகக் கூட்டம் ஒன்று இருந்தது. சூரிய நிறையைவிட சற்றே அதிக நிறை கொண்ட அந்தப் பகுதியை நோக்கி பொருட்கள் திரண்டதால் ஈர்ப்பு விசை கூடியது. சில கோடி ஆண்டுகளில் அந்தப் புள்ளியை வைத்து, அதன் மையத்தில் அடர்த்தி கூடியது. அதுவே காலப்போக்கில் சூரியனாக உருவானது. இளம் சூரியனைச் சுற்றி மீதமுள்ள பொருட்கள் திரள் வட்டுபோல சுழன்று கொண்டிருந்தன. இங்கே சுமார் ஆயிரம் மீட்டர் அளவில் 10 கோடி கோள் கருக்கள் உருவாயின. இந்தக் கோள் கருக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது பிணைந்தன. சில சமயம் உடைந்தன. காலப்போக்கில் பல கோள் கருக்கள் பிணைந்து கோள்கள் உருவாகின. தற்போது அவை எல்லாம் பிணைந்து அல்லது உடைந்து போய்விட்டதால், இன்று புதிதாகக் கோள்கள் உருவாவதில்லை. மிச்சம் இருப்பவை வால் விண்மீன்களாக சூரியனைச் சுற்றி வருகின்றன. வானில் உள்ள மேகக் கூட்டங்களில் பல்வேறு நிலைகளில் விண்மீன்களும் கோள்களும் உருவாவதை நம்மால் பார்க்க முடிகிறது. எடுத்துக்கட்டாக, சூரியனைப் போன்ற ஆக்மா (Ogma) HD-149026 எனும் விண்மீனில் கோள்கள் உருவாவதை தொலை நோக்கியால் பார்க்க முடியும். அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்று சொல்லப்படுகிறவர்களால் எப்படி ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கவனித்துப் பதில் சொல்ல முடிகிறது? மூளை எந்த வரிசையில் அவற்றை நினைவில் வைக்கிறது?வி.சந்தானகோபாலன், மதுரை.கணினி அல்லது ஸ்மார்ட்போனில் ஒரே சமயத்தில் பல்வேறு செயலிகள் செயற்படும். ஒவ்வொரு நொடியையும் சிறுசிறு நுண் காலமாகப் பிரித்து, ஒவ்வொரு கால இடைவெளியிலும் ஒரு செயலின் சிறு பகுதியை இயக்கி ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் ஸ்மார்ட்போனில் செயற்படுகின்றன.அதேபோல, மூளையும் பல்பணியாக்க (Multitasking) திறன் கொண்டது. மூளையானது சிறுசிறு காலப் பகுதியில் புற உந்துதல்களை உள்வாங்கிச் செயற்படும் திறன் கொண்டது. நம்மில் பலரும் ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று செயல்களைச் செய்வது இயல்பு. பாட்டுக் கேட்டுக்கொண்டே படிப்பது, நடப்பது. படங்கள் பார்த்தபடி சமையல் வேலைகளில் ஈடுபடுவது என பல்பணியாக்கத் திறன் எல்லோருக்கும் உண்டு. மேலும் இதனைக் கூடுதல் திறனோடு செய்ய பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர்.கல்மரங்கள் எப்படி உருவாகின்றன?ச.அபினேஷ்வரி, 6ஆம் வகுப்பு, கேந்திரிய வித்யாலயா, புதுச்சேரி.மரம் மடிந்த பின்னர் பல்வேறு நுண்ணுயிரிகள் அதனைச் செரித்து மக்கச் செய்யும். அப்படி இன்றி நிலச்சரிவு அல்லது எரிமலை கக்கிய சாம்பலில் மரங்கள் புதைந்து போகின்றன எனக்கொள்வோம். இப்போது மரம் புதைந்து இருப்பதால், காற்றைச் சுவாசித்து உயிர் வாழும் நுண்ணுயிரிகள் அங்கே வாழ இயலாமல் போகும். அந்தச் சூழலில், மரம் இயல்பாக மக்குவது போல மக்கிச் சிதையாது. காற்றுப் புகவில்லை என்றாலும், நிலத்தின் அடியில் மழை நீர் கசியும். மண்ணின் ஊடே புகுந்து கசியும் நீரில் தாதுப்பொருட்கள் கரைந்து செறிவாக இருக்கும். மரம் போன்ற உயிர்கள் அனைத்திலும் கரிமப் பொருட்கள் உள்ளன. மரத்தின் செல்களில் உள்ள கரிமப் பொருட்கள் காலம் செல்லச்செல்ல தானாகவே சிதையும். இதன் தொடர்ச்சியாக மரம் கல்லாக மாறும். இதற்குச் சில லட்சம் ஆண்டுகள் தேவை. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திருவக்கரை தேசிய கல் மர பூங்காவில் 3 முதல் 15 மீட்டர் உயரமுள்ள சுமார் 200 கல் மரங்கள் உள்ளன. சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைச் சாம்பலில் புதைந்த மரங்களே கல்லாக மாறி இருக்கின்றன என புவியியலாளர்கள் கூறுகின்றனர். கோவில் திருவிழாக்களில் சாமி வந்து ஆடுவதற்கான காரணம் என்ன?ர.முருகன், 11ஆம் வகுப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.இதுபோன்ற நிகழ்வுகள் மனநல மருத்துவர்களின் பார்வையில், பதற்றம் (nervousness), மனச்சோர்வு (depression), மிகைவிருப்பு (obsession) போன்ற மனச் சிக்கல்களாலேயே நடக்கிறது. இதுதான் நம்மை அறியாமலேயே வித்தியாசமாகச் செயற்படத் தூண்டுகிறது. 'ஆட்டோ ஹிப்னாசிஸ்' எனப்படும் ஒரு வித மனநிலை, சாமியாடுவது போன்ற நிகழ்விலும் வெளிப்படுகிறது. அதனால், அவர்களுக்கே அதிக பக்தி உள்ளது என்றும், கடவுள் தன்னிடம் மட்டுமே பேசுகிறார் என்றும் தங்களைத் தாங்களே நம்பவைத்துக் கொள்கிறார்கள். பல சமயம் சாமி ஆடுபவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புக் கவனம், பரிவு அவர்களது மனச்சிக்கலுக்கு மருந்தாகவும் அமைந்துவிடுகிறது. அறிவியல் ரீதியாகச் சொன்னால், மிகுந்த ஈடுபாட்டுடன் ஒரு குறிப்பிட்டவற்றின் மீது கவனம் செலுத்தும்போது ஏற்படுகிற ஒரு வகையான உன்மத்த நிலைதான் இது.