அந்தக் காலத்தில் தண்டவாளம்
தண்டவாளத்தில் தடம் புரளாமல் ரயில் ஓடும் காட்சி, பார்க்க பிரமிப்பாக இருக்கும். ரயில், தண்டவாளம் - இவற்றில் எது முதலில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும்? சொல்லுங்கள் பார்ப்போம். 'தண்டவாளம்' என்பதே விடை. ரயில்கள் அறிமுகமாவதற்கு ஏறத்தாழ 2,400 ஆண்டுகளுக்கு முன்னரே தண்டவாளம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கு முன்னால், பண்டைய கிரேக்கர்கள் கொரிந்த் (Corinth) எனும் நகரத்தின் அருகில் ஒரு வண்டித்தடத்தை அமைத்தார்கள். அதன் நீளம் சுமார் 8.5 கி.மீ.! தண்டவாளத்தை ஒத்த இந்தத் தடத்துக்கு டியல்காஸ் என்று (Dialkos) என்று பெயர். ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு மேல் இந்தத் தடம் பயன்பாட்டில் இருந்தது. அந்தக் காலத்தில், கரடு முரடாக இருந்த நிலத்தில் வண்டிகள் செல்வது கடினமான காரியமாக இருந்தது. போர்க் காலங்களில் பளு அதிகம் கொண்ட ராணுவத் தளவாடப் பொருட்களை, விரைவாகக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது. அதிக சிரமம் இல்லாமல் இதை எப்படிச் செய்யலாம் என்று யோசித்த கிரேக்கர்கள், ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் தண்டவாளம்.சாலையில் பாறைகளைப் பதித்து, அதில் வண்டிகளின் சக்கரங்கள் ஓடுவதற்கு நீளமான தடங்களை வெட்டினார்கள். குதிரை, எருது போன்ற விலங்குகள் வண்டியை இழுக்க, வண்டியின் சக்கரங்கள் அவற்றிற்கு உரிய தடங்களின் மேல் ஓடின. இதுதான் அந்தக் காலத்தில் விரைவுப் போக்குவரத்து!