போரைத் தடுத்து நிறுத்திய ஔவையார்
தகடூரைத் (தருமபுரி) தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தவர் அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் சிற்றரசர். அதியமானிடம் அன்பு பாராட்டிய பெண்பாற்புலவர் ஔவையார். அவருக்கு சாகாநிலை தரும் அருநெல்லிக்கனி கொடுத்தவர் அதியமான். அதனால் கடையேழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.அதியமானுக்கும் அண்டை நாட்டவரான தொண்டைமானுக்கும் முற்பகை இருந்து வந்தது. எந்நேரமும் போர் மூளலாம் என்னும் சூழல். போர் மூண்டால் இருதரப்புக்கும் பெருத்த சேதம் விளையும். அதனைத் தடுப்பது எப்படி என்று ஔவையார் எண்ணினார். ஒரு தூதுவராகத் தொண்டைமானிடம் சென்றார். தொண்டைமானோ ஒளவையை தன் படைக்கருவிகள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் படைபலத்தைக் காட்டினான். ஆனால், ஔவையோ அதியமானின் படைக்கருவிகளின் நிலைபற்றிக் கூறி, நிகழவிருந்த போரைத் தடுத்து நிறுத்திவிட்டார். அப்படி ஔவை என்ன கூறினார். விடை, புறநானூற்றில் உள்ளது'இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்துகடியுடை வியனகர் அவ்வே; அவ்வேபகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்துகொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்உண்டாயிற் பதங்கொடுத்துஇல்லாயின் உடனுண்ணும்இல்லோர் ஒக்கல் றலைவன்அண்ணல் எம்கோமான் வைந்நுதி வேலே.''தொண்டை மன்னனே, உன் படைக்கருவிகள், இங்கே மயிற்தோகை அணிந்து பூமாலை சூட்டிக்கொண்டு, புதிது மாறாமல் திருத்தமாக, காவலையுடைய பெரிய நகரத்தில் பாதுகாப்பாக இருக்கின்றன.அங்கே, எளியோர்களின் உறவினனும் எங்கள் தலைவனுமாகிய அதியமானின் கூர்மையான நுனியுடைய வேல்கள், பகைவர்களைக் குத்தியதால் நுனிகள் சிதைந்து, எப்போதும் கொல்லனின் இருப்பிடமாகிய பட்டறைக்குள் கிடக்கின்றன.' என்றார்.அதியமானின் படைக்கருவிகள் தொடர்ந்து போரில் பயன்படுத்தப்பட்டுச் சாணை பிடிக்கப்படக் காத்திருக்கின்றன. உன் கருவிகளோ போரினை அறியாமல் புதியவையாய் இருக்கின்றன. தொடர்ந்து போரில் இருப்பவனிடம் போரிடச் சென்றால், தோற்றுப்போவாய் என்பதை ஔவையார் குறிப்பால் உணர்த்தினார்.உண்மையை உணர்ந்த தொண்டைமான், போரைத் தவிர்த்து அமைதியை நாடினான். -- மகுடேசுவரன்