உள்ளூர் செய்திகள்

அழகுக் கோட்டை கோல்கொண்டா

இன்றைய தெலங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாதிலிருந்து, சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது கோல்கொண்டா கோட்டை. சிறு மலைமேல் அமைந்திருக்கிறது. மலைமீது ஏறிச்செல்லப் பாதைகள், படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிறுவர்கள்கூட விறுவிறுவென்று, அரைமணி நேரத்தில் ஏறிவிடலாம்.ஆனால் அதற்காக, அவசரமாக ஏறாதீர்கள். அங்கே மலை உச்சியில் பார்ப்பதற்குப் பெரிதாக எதுவுமில்லை.அதற்குப்பதிலாக, படிகளில் மெதுவாக நடந்துசெல்லுங்கள், அக்கம்பக்கத்தில் படியில்லாத பகுதிகளில் கவனமாக ஏறிப்பாருங்கள். மலையின் வெவ்வேறு முனைகளிலிருந்து ஹைதராபாத் நகரத்தையும், அக்கம்பக்கத்து ஊர்களையும் ரசியுங்கள், உங்களைப்போலவே ஒருகாலத்தில் போர்வீரர்கள் இங்கே நின்றபடி எதிரிகள் வருகிறார்களா என்று நோட்டமிடுவதைக் கற்பனை செய்துபாருங்கள்.கோல்கொண்டாவுக்குள் நுழையும்போது, ஓரிடத்தில் கை தட்டினால், மலையுச்சியிலிருக்கும் இன்னோரிடத்தில் அந்த ஒலி கேட்கும் என்பார்கள். செல்ஃபோன்களெல்லாம் இல்லாத அன்றைய காலகட்டத்தில், திடீரென்று யாராவது எதிரி வந்துவிட்டால், அரசனுக்கும் அமைச்சர்களுக்கும் வேறு எப்படித் தகவல் சொல்வது? அதற்காகத்தான் கை தட்டல் அவ்வளவு தொலைவுக்குச் சென்று சேரும்படி கட்டடங்களை வடிவமைத்திருக்கிறார்கள்.கோட்டைக்குள் ஒரு மசூதி இருக்கிறது, அழகான கல்வளைவுகள், தோட்டங்கள் இருக்கின்றன, அரசரின் தர்பார், ராணி மஹால், ஒட்டகங்களைக் கட்டிவைக்கும் தொழுவங்கள், பத்ராசல ராமதாஸர் என்ற அரசர் அடைத்துவைக்கப்பட்டிருந்த 'ராமதாசு பந்திகானா' என்ற சிறை, இன்னும் இண்டு, இடுக்குகளிலெல்லாம், ஏதேதோ சரித்திர அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றன. நிதானமாகப் பார்த்து ரசிக்க, சில மணிநேரங்களாவது தேவைப்படும்.மலையேறி இறங்கியபிறகு, கீழே இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் அமைத்திருக்கும் வரைபடத்தைப் பாருங்கள். இன்று நாம் சிதைவுகளாகப் பார்க்கும் கோல்கொண்டா கோட்டை, ஒருகாலத்தில் எப்படிக் கம்பீரமாக இருந்தது என்பது புரியும். நம்முடைய சரித்திரச் சுவடுகளை, நாம் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டியதன் முக்கியத்துவமும் விளங்கும்.காகத்திய அரசர்கள் கட்டிய இந்தக் கோட்டையை, அதன்பிறகு வந்த பல வம்சத்து அரசர்கள் விரிவுபடுத்தினார்கள், குதுப் ஷாஹி வம்சத்தவரின் ஆட்சியின்போது (16ம் நூற்றாண்டு), கோல்கொண்டா மிகப்பெரிய அளவில் பலப்படுத்தப்பட்டது. கோட்டையின் வெளிப்புறச்சுவர்கள் ஏழு கிலோமீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தன. மலையின் இயற்கையான அமைப்பால், எதிரிகள் எளிதில் ஊடுருவ இயலாதபடி சுவர்களில், ரகசிய அமைப்புகளை உருவாக்க முடிந்தது.இதனால், இப்பகுதியை ஆண்ட அரசர்கள் கோல்கொண்டாவை, முக்கியமான பலமாகக் கருதினார்கள். எதிரிகள் எளிதில் புகமுடியாதபடி, கோல்கொண்டா அவர்களைப் பாதுகாத்தது.ஆனால், 1687ம் ஆண்டு, முகலாய மன்னர் ஔரங்கசீப், இக்கோட்டையை முற்றுகையிட்டு வென்றார். அதன்பிறகு, இந்தக் கோட்டையும் அதனுள்ளிருந்த நகரமும் கொஞ்சம்கொஞ்சமாக முக்கியத்துவம் இழந்தன. இப்போது மீதமிருப்பவை இடிபாடுகள்தான்.அதேசமயம், அந்த இடிபாடுகளின் மத்தியில் நடக்கும்போது, நமக்குள் அலாதியான ஒரு கம்பீர உணர்வு எழும். ஆங்காங்கே சிதைந்திருக்கிற பகுதிகளை நாமே மனத்துக்குள் நிரப்பிக்கொண்டு கற்பனை செய்யலாம். ஒருகாலத்தில், இந்த நகரம் எப்படிச் சகல வசதிகளுடனும், பாதுகாப்புடனும் வளமாக இருந்திருக்கும் என்று மனக்கண்ணால் காணலாம்.கோல்கொண்டாவுக்கு எப்படிச் செல்வது?ஹைதராபாத் அல்லது அதனருகே இருக்கும் இரட்டை நகரமான செகந்திராபாதுக்குச் செல்லவேண்டும். இதற்கு ரயில், பேருந்து, விமான வசதிகள் இருக்கின்றன. அங்கிருந்து கோல்கொண்டாவுக்கு, உள்ளூர் பேருந்தில் செல்லலாம். அல்லது, கார்/ஆட்டோ போன்ற தனிப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம்.கோல்கொண்டாவில், தங்கும் வசதிகள் அதிகமில்லை. ஆகவே ஹைதராபாத்/செகந்திராபாதில் தங்கிக்கொள்வது நல்லது. ஓரளவு நல்ல தங்கும்விடுதியென்றால், அறைக்கட்டணம் ஒருநாளைக்கு ரூ.3,000 என்ற அளவில் இருக்கும்.கோல்கொண்டாவுடன் வேறென்ன பார்க்கலாம்?ஹைதராபாதில் உள்ள சார்மினார், புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். 'சார்', அதாவது நான்கு மினார்கள்/கூம்புகளைக் கொண்ட இந்த அழகிய வழிபாட்டுத்தலத்தை மேலேறிப் பார்க்கவும் நம்மை அனுமதிக்கிறார்கள்.அதேபோல், அங்கிருக்கும் சாலர்ஜங் அருங்காட்சியகமும், மிகப் பிரமாண்டமானது. அதிலுள்ள கலைப்பொருட்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் பார்ப்பதற்கு, குறைந்தது ஐந்தாறு மணிநேரமாவது தேவைப்படும்.நகருக்குள்ளிருக்கும் ஹுஸைன் சாகர் ஏரி, நெக்லஸ் ரோட் ஆகியவை, இரவில் மிக அழகாகத் தோன்றுபவை. ஹைதராபாதுக்குச் சற்றுதள்ளியுள்ள 'ராமோஜி ஃபிலிம் சிட்டி' பிரமாண்டமான பொழுதுபோக்குப் பூங்கா. இங்கே சென்றுவருவதற்குத் தனிப் போக்குவரத்து வசதிகள் தேவைப்படும்.இவைதவிர, ஹைதராபாதில் ஒரு நல்ல உயிரியல் பூங்காவும் உள்ளது. 'பிர்லா மந்திர்' என்ற புகழ்பெற்ற ஆலயம், ஷில்பாராமம் என்ற கலைப்பொருள் அரங்கம் போன்றவையும் பார்க்கத்தகுந்தவை.- என். சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !