உள்ளூர் செய்திகள்

பெரிய குடை!

மழைக்குக் குடை பிடிக்கிறோம். வெயிலுக்கும் குடை! பல்வேறு வண்ணங்களில், அளவுகளில் குடைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரியவர், சிறியவர் என வயதிற்கு ஏற்ற வடிவங்களில் கூட குடைகள் உள்ளன. நிழலுக்காக பெண்கள் பயன்படுத்தும் குடைக்கு பேராசோல் (parasol) என்று பெயர். இந்த வகைக் குடைகள் எடை குறைந்து இருக்கும். புகைப்பட நிறுவனங்களிலும், திரைப்படங்கள் தயாரிப்பிலும் குடைகள் பயன்படுத்தப்படுகின்றன.தாத்தா, பாட்டி காலத்தில் நீளமான கைப்பிடி உடைய குடையைப் பயன்படுத்தினார்கள். தாத்தாக்கள் அதை 'வாக்கிங் ஸ்டிக்' போலவும் பயன்படுத்தினார்கள். தற்போது பட்டன் குடைகளும், மடக்கிச் சுருட்டிப் பைகளில் வைத்துக்கொள்வது போன்ற குடைகளும் வந்துவிட்டன. குடைகள் பொதுவாக பருத்தி, நைலான் , பிளாஸ்டிக் இழைகள் கொண்டு தயார் செய்யப்படுகின்றன. அரசர்கள் காலத்தில் பட்டு இழைகள் கொண்டு செய்யப்பட்டன. கோயில் தேர்களிலும் துணியாலான பெரிய குடைகள் பயன்படுத்தப்படுகின்றன.எகிப்து, இந்தியா, ரோம், கிரீஸ் ஆகிய நாடுகளில் பழங்காலத்திலேயே குடைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. நீர் புகாக் குடைகளை முதலில் சீனர்கள்தான் தயாரித்தார்கள். அம்ரா (umbra ) என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து அம்ப்ரல்லா (umbrella) என்ற வார்த்தை வந்தது. இதற்கு நிழல் என்று பொருள்.நாம் கையில் பிடித்துச் செல்லும் குடையைத் தவிர, பொது இடங்களிலும் நிழற்குடைகள் அமைக்கப்படுகின்றன. அப்படி அமைக்கப்பட்ட குடையில் உலகிலேயே மிகப் பெரியது சீனாவின் ஜியாங்க்ஸி (Jiangxi) பிரதேசத்தில் உள்ளது. அதன் சுற்றளவு 23 மீட்டர். உயரம் 14.4 மீட்டர் . இதன் எடை 5,700 கி.கிராம். பரப்பளவு 418 சதுர மீட்டர். இந்த ராட்சசக் குடை 2010ல் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் இந்தியாவில் புனே நகரத்தில் உள்ள இஷன்யா மால் (Ishanya Mall) நிறுவனம் அமைத்திருந்த குடைதான் பெரியது என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தது. இதன் சுற்றளவு 17.06 மீட்டர். உயரம் 10.97 மீட்டர். இதன் எடை 2,200 கிலோ.சாதாரணக் குடைதானே என்று நினைத்தால் இவ்வளவு பெரிய போட்டியே இருக்கு இல்ல!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !