உள்ளூர் செய்திகள்

நூலும் கணக்கும்

ஒரு நூலில் எத்தனை பாடல்கள் இருக்கலாம்?அப்படியெல்லாம் அன்றைய புலவர்கள் கணக்குவைத்துக் கொள்ளவில்லை. சொல்லவந்த விஷயத்தைச் சொல்வதற்கு எத்தனை பாடல்கள் தேவைப்படுகின்றனவோ, அத்தனை பாடல்களை எழுதினார்கள்.ஆகவே, ஒரே ஒரு நீண்ட பாடலைக்கொண்ட நூல்களும் உண்டு. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாடல்களைக்கொண்ட நூல்களும் உண்டு. சில இடங்களில் 'ஐங்குறுநூறு', 'புறநானூறு', 'அகநானூறு' என்று நூலின் பெயரிலேயே இந்த எண்ணிக்கை வருவதைப் பார்க்கலாம்.எடுத்துக்காட்டாக, 'குறிஞ்சிப்பாட்டு' என்பது. கபிலர் எழுதிய ஒரே ஒரு நீண்ட பாடலைக்கொண்ட நூல். 'கம்பராமாயணம்' என்பது, கம்பர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களைக் கொண்ட நூல்.அதேபோல், ஒரு பாடல் இத்தனை வரிதான் இருக்கவேண்டும் என்றும், புலவர்கள் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. 'அறம் செய விரும்பு', 'ஆறுவது சினம்' என்று சிறுவயதில் படித்தது நினைவிருக்கிறதா? அவை ஒவ்வொன்றும் ஒரு பாடல். ஒரே வரியைக்கொண்ட பாடல். இன்னொருபக்கம், குறிஞ்சிப்பாட்டில், 261 வரிகள் இருக்கின்றன. இதைவிட அதிக வரிகளைக்கொண்ட பாடல்களும் உண்டு.ஒரு விஷயம், நாம் 'வரி' என்று சொல்லும் விஷயத்தை இலக்கணத்தில் 'அடி' என்பார்கள். அதாவது, திருக்குறளில் ஒவ்வொரு பாடலும் இரண்டு அடிகளைக் கொண்டவை. நாலடியாரில் ஒவ்வொரு பாடலும், நான்கு அடிகளைக் கொண்டவை, அதனால்தான் அந்த நூலுக்கே 'நாலடியார்' என்று பெயர் சூட்டினார்கள்!இந்தப் பாடல்களின் ஒவ்வோர் அடியிலும், எத்தனை சொற்கள் இருக்கின்றன என்பதையும் கவனிப்பார்கள். அவற்றுக்குச் 'சீர்' என்று பெயர்.நூல்களும் இப்படித்தான். கம்பராமாயணத்தில், எல்லாப் பாடல்களும் நான்கே அடிகள், திருக்குறளில் எல்லாப் பாடல்களும் இரண்டே அடிகள். ஆனால் குறுந்தொகையில் சில பாடல்கள், நான்கு அடிகளாகவும், சில பாடல்கள் ஐந்து அடிகளாகவும் மாறிமாறி வருகின்றன.பாடல்களைப் படிப்பதை விட்டுவிட்டு, இப்படியெல்லாம் கணக்குப்பார்க்கலாமா என்று கேட்கிறீர்களா?அட, கணக்கு என்ற சொல்லிலேயும் 'நூல்' பெயர் இருக்கே! ஆம், பதினெண்மேற் 'கணக்கு', பதினெண்கீழ்க்'கணக்கு' .- நாகா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !