உள்ளூர் செய்திகள்

கழிவறையாக மாறும் பேருந்துகள்

புனேயைச் சேர்ந்த உல்கா சதால்கர், ராஜீவ் கெர் ஆகிய இருவரின் நிறுவனமான சராபிளாஸ்ட், சுகாதாரத் துறையில் சாதனை படைத்து வருகிறது. புனே நகரில் பெண்களுக்கான சுத்தமான, நவீன கழிவறைகளை அமைப்பதற்கான புது வழியாக பழைய பேருந்துகளை இந்நிறுவனம் முன்வைக்கிறது. பழைய பேருந்துகளை மாற்றியமைத்து கழிவறை, கை கழுவும் தொட்டி, நாப்கின் விற்பதற்கான ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இதற்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறுகின்றனர். இத்திட்டத்திற்கு தீ (Ti - Toilet Integration) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மராத்தியில் தீ என்ற வார்த்தைக்கு அவள், அவளுடைய என்று பொருள். பொது இடங்களில் சுத்தமான கழிவறையைத் தேடி துயரப்படும் பெண்களுக்கான தீர்வு, 'தீ' திட்டம்.''கழிவறை என்ற வார்த்தையின் ஒவ்வாமையைப் போக்க, இந்தப் பேருந்துகளை சுகாதார மையங்கள் என்றுதான் குறிப்பிடுகிறோம். இதுவரை நகரெங்கும் 11 சுகாதார மையங்களை நிறுவியுள்ளோம். 2016இல் தொடங்கப்பட்ட, இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பொதுக் கழிவறைகள் இல்லாத நகரின் மையப் பகுதிகளில் அதனை நிறுவுவதில் நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம். ஏழை எளிய பெண்களுக்குத்தான் இவை அத்தியாவசியத் தேவை; அவர்கள் பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்” என்று உல்கா தெரிவிக்கிறார்.சராசரியாக, நாளொன்றுக்கு சுமார் 150 பெண்கள் இந்தக் கழிவறைகளை உபயோகிக்கிறார்கள் என்பது இதன் அவசியத்தை உணர்த்துகிறது. இலவசமாக தொடங்கப்பட்ட இச்சேவை, தற்போது பராமரிப்புக்காக ரூ. 5 கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழலில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !