உள்ளூர் செய்திகள்

நூறு வருடங்களுக்கு முன் செல்ஃபோன் சிந்தனை

வருடம்: 1901. :

”ஊரில் உள்ள அனைவரும் ஆளுக்கொரு கையடக்க கருவி வைத்திருப்பார்கள். கம்பியில்லா (Wireless - வயர்லெஸ்) முறையில் அந்தக் கருவிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும். ஊரெங்கும் அலைவாங்கிகள் (Receiver ரிசீவர்) இருக்கும். கருவிகள் அனுப்பும் செய்திகளை அலைவாங்கிகள் பெற்று, அதற்கு உரியவரின் கைக்கருவிக்கு அனுப்பும். இப்படி ஒரு தொழில்நுட்பத்தை மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி உருவாக்க வாய்ப்பு இருக்கிறது'. இப்படித்தான் 1901ஆம் ஆண்டில் நிகோலா டெஸ்லா (Nikola Tesla) என்ற நபர், தனது நண்பரான ஜே.பி. மார்கன் (J. P. Morgan) என்பவரிடம் விளக்கினார். இயற்பியல் பாடத்தில் நீங்கள் கேள்விப்பட்ட விஞ்ஞானி டெஸ்லாதான்! தற்காலத்தில் ஒரு பிரமிப்பும் இல்லாமல், அனைவரும் கையாளும் செல்ஃபோன் தொழில்நுட்பத்தைப் பற்றி, நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சிந்தித்திருக்கிறார். இன்று நாம் பயன்படுத்தும், கிட்டத்தட்ட அனைத்து மைய தொழில்நுட்பங்களின் அடிப்படைகளை நிறுவியவர். இவர் முன்வைத்த விஷயங்கள், பிற்காலத்தில் பல கண்டுபிடிப்புகள் வருவதற்குக் காரணமாக இருந்தன. மேலே குறிப்பிட்ட செல்ஃபோன் தொழிநுட்பம் உட்பட!• X கதிர்கள் பற்றி ரான்ஜன் (Roentgen) நிறுவுவதற்கு முன்னரே, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்திருந்தார். • மார்கோனி கண்டுபிடித்த ரேடியோ கருவியின் முன்னோடி வடிவம், டெஸ்லா கண்டுபிடித்தது. • லேசர் கருவி, ரேடார், கம்பியில்லா தொலைத்தொடர்பு என, பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியான கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். இன்று நாம் ஒரு சிறிய பல்பு முதல் ராட்சத இயந்திரங்கள் வரை இயக்கப் பயன்படுவது AC மின்சாரம். (Alternating current - ஆல்டர்நேட்டிங் கரண்ட்). மாறுதிசை மின்னோட்டம் எனப்படும் இந்த மின்சாரம் கடத்தும் முறையை, டெஸ்லாதான் கண்டறிந்தார். இது மனித சமுதாயத்தின் மிக முக்கிய கண்டுபிடிப்பு. டெஸ்லா இதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர், எடிசன் கண்டுபிடித்த DC மின்னோட்டம் எனப்படும் நேர்திசை மின்னோட்ட தொழில்நுட்பத்தை (Direct Current டைரக்ட் கரண்ட்) பயன்படுத்தித்தான், மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. இந்த DC வகை மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால், வீடுகளும், தொழிற்சாலைகளும் மின்னுற்பத்தி நிலையத்துக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டும். ஆனால் டெஸ்லா கண்டுபிடித்த AC மின்னோட்டத்தைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கி.மீ.க்கு அப்பால் இருக்கும் பயனாளிகளுக்கும் மின்வினியோகம் செய்ய முடியும். ஒளிவிளக்கைக் கண்டுபிடித்தவர் எடிசன். AC மின்சாரம் மூலம், குக்கிராமங்களுக்கும் மின்சார வினியோகம் கிடைக்கச் செய்து ஒளிரச் செய்தவர்? டெஸ்லா!-ஸ்ருதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !