கரிவிருந்தா பாகற்காய்!
பாகற்காயைப் பற்றிய குறிப்புகள், கிறிஸ்து பிறப்பதற்கு நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஜைன இலக்கியங்களில் இருக்கின்றன. தொடக்கத்தில் கரிவிருந்தா என்று அழைக்கப்பட்ட பாகற்காய், பின்பு கரவெல்லா என்று அழைக்கப்பட்டதாகப் பண்டைய ஜைன இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட இலக்கியங்கள் பாகற்காயைப் பக்குவமாகச் சமைக்கும் முறைபற்றி விளக்குகின்றன.பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, உப்புத் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் கழுவி சமைத்தால் அதிலிருக்கும் கசப்புத்தன்மை நீங்கிவிடும் என்பது போன்ற வழிமுறைகள் கன்னட இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் எந்தவொரு பண்டிகை, விழாக்காலம் என்றாலும், சுக்தோ என்கிற உணவு கட்டாயம் இடம்பெறும். கிட்டத்தட்ட நம்மூர் அவியல்போல காணப்படும் இந்த உணவில், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளோடு பாகற்காயும் உண்டு.பாகற்காயை வளையங்களாக நறுக்கி, உப்புத் தண்ணீரில் ஊறவைத்து, பின்பு நன்கு உலரவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதை எண்ணெயில் பொரித்தெடுத்தால், இதன் சுவை அற்புதமாக இருக்கும். பாகற்காயை விதை நீக்கி சுத்தம் செய்து, பின்னர் இதைக் காய்கறிகளுடன் சேர்த்து அல்லது அரைத்த மாமிசத்தில் ஸ்டஃப் செய்து எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம். - கொக்கோ