பலவாறு பயன்படும் நிறப்பெயர்கள்
நிறப்பெயர்கள் பல இருக்கின்றன. கண்களால் நாம் காணும் நிறவேற்றுமையை அப்பெயர்களால் குறிக்கிறோம். கறுப்பு, வெள்ளை, பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் என, அப்பெயர்கள் பல. நிறத்தைக் குறிப்பதற்கு மட்டுமே நாம் நிறப்பெயர்களைப் பயன்படுத்துவதில்லை. கூடுதலாக, எதையேனும் விரித்து விளக்குவதற்கும் பயன்படுத்துகிறோம். நிறத்தைக் குறியீடாகக் கொண்ட பண்புகளைக் கூறவும் நிறப்பெயர்களை எடுத்தாள்கிறோம். மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் நிறப்பெயரானது, வேறொரு பொருள் வடிவத்திலும் வெளிப்படுகிறது.''அவருக்கு வெள்ளை மனசுங்க”'' என்கிறோம். இங்கே 'வெள்ளை' என்பது நிறத்தைக் குறிக்கத் தோன்றியதா? இல்லை. தூய்மையின், களங்கமின்மையின் அடையாளம் வெள்ளை. அதனால், ஒருவரது தூய மனத்தினைக் குறிக்க 'வெள்ளை மனம்' என்கிறோம். ''அவன் பச்சை பச்சையாப் பேசுவானே''”இந்தத் தொடரைப் பாருங்கள். 'பச்சை' என்ற நிறப்பெயர் வருகிறது. அது பச்சை நிறத்தையா குறிக்கிறது? இல்லை.எந்தக் கூச்சமும் இல்லாமல், தீயசொற்கள் பேசுவதைக் குறிக்கிறது. உரிய நற்றன்மையோடு நயமாகப் பேசாமல் கெடுதல் பொருள்தரும் சொற்களைப் பேசுவது. வேக்காடு அடையாத எல்லா பொருட்களையும், பச்சைத் தன்மை யுடையது என்று கருதுகிறோம். அவிக்கப்படாத அரிசி, 'பச்சை அரிசி' (பச்சரிசி). சுட வைக்கப்படாத தண்ணீர், 'பச்சைத் தண்ணீர்'. இங்கே 'பச்சை' என்பது, நிறத்தைக் குறிக்கவில்லை. தன்மையைக் குறிக்கிறது.இறப்பு நேர்ந்தபின் நடக்கும் தொடர்வினைகள் பல இருக்கின்றன. ஊர்ப்புறத்தில் ''கறுப்பு கழிச்சாச்சா?''”” என்பார்கள். இங்கே 'கறுப்பு' என்பது, நிறம் சார்ந்து சொல்லப்படுவதில்லை. இறப்பு நேர்ந்தபின் தீர்க்கப்படும் வினைகளைக் குறிக்கிறது.'செந்தமிழ்' என்கிறோம். அங்கே தமிழுக்குச் சிவப்பு நிறமா குறிப்பிடப்படுகிறது? மலர்ந்து, வளர்ந்து, சிறந்து, மேம்பட்ட உயர்தன்மையைச் சொல்கிறோம். நிறப்பெயர்ச் சொற்கள் இவ்வாறு பலப்பல வடிவெடுத்து வேறு நுண்ணிய பொருள்களை உணர்த்திக் கொண்டிருக்கின்றன.- மகுடேசுவரன்