விரைவில் வருகிறது விண்வெளியில் ஒரு ஸ்வச் ஆகாஷ்
நாம் வாழும் பூமியைக் குப்பை மலைகளால் நிரப்புவதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளையே, நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இந்நிலையில் விண்வெளியிலும் குப்பைகள் நிரம்பி வருகிறது. விண்ணில் உபயோகமற்ற ஆணிகள் (bolts) முதல் ஓய்ந்து போன செயற்கைக்கோள்கள் (dead satellites) வரை எண்ணற்ற குப்பைகள் விண்வெளியில் மிதந்து அலைகின்றன. இவற்றால் விரைவில் புவிக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் விஞ்ஞானிகள் விண்வெளியை தூய்மையாக்கும் உத்திகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அமெரிக்காவிலுள்ள ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் (The Aerospace Corporation) நிறுவனம் நாசா அமைப்பின் உதவியோடு விண்வெளிக் குப்பைகளை தனக்குள் உறிஞ்சி, எரித்து அழிக்கும் ஒரு மிகச் சிறிய விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இதற்கு ப்ரேன் விண்கலம் (Brane Crafts) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அளவிலும் மிகச்சிறியதாக இருக்கும். விரைவில் விண்வெளியில் ஏவப்படவுள்ள இக்கலங்கள் ஒரு வாக்குவம் கிளீனர் போல செயல்பட்டு, விண்வெளியைச் சுற்றி இருக்கும் குப்பையை சுத்தமாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.