மோதல் விலக்கு; சமாதானம் பயில்!
அமைதிஎங்கே எந்த சச்சரவு அல்லது சண்டை நடந்தாலும், ஓவியா நடுவே வந்து நின்றுவிடுவாள். எனக்கும் என் வகுப்பில் படிக்கும் ஹரிக்கும் ஒரு சின்ன தகராறு. இரண்டு மூன்று நாட்களாக பேசிக்கொள்ளவில்லை. வழக்கம்போல், ஓவியா வந்து நின்றுவிட்டாள். 'நீ பேசு, நீ பேசு' என்று ஒரே அறிவுரை வேறு. எனக்கு இரண்டு, மூன்று பிரச்னைகள்.ஹரி செய்தது தவறு என்று நான் நிரூபிக்க விரும்புகிறேன். என் தரப்பு நியாயத்தை வலியுறுத்தவே முயற்சி செய்கிறேன். ஹரி, முகம் கொடுத்துப் பேசவே மாட்டேன் என்கிறான். முறைத்துக்கொண்டு நிற்கிறான். அப்படிப்பட்ட நிலையில், ஓவியாவோ, இந்தப் பிரச்னையை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, முதலில் பேசு என்று அடம் பிடிக்கிறாள்.கொஞ்சம் கடித்துவிட்டேன். ஓவியாவுக்கு முகம் விழுந்துவிட்டது. உமா மிஸ்ஸிடம் சொல்லியிருப்பாள் போலிருக்கிறது.“ஓவியாவை ஏன் கோச்சுக்கிட்ட கதிர்? பாவம், அவ ஒரு மாதிரி ஆயிட்டாளே?”“எல்லாத்திலயும் வந்து மூக்கை நுழைக்கிறாளே, மிஸ்? ஏதோ, சமாதானப் புறான்னு நினைப்பு. நாங்க பேசவேண்டியது இன்னும் நிறைய இருக்கு.”“ஆமாம், பெண்கள் சமாதான தூதுவர்கள் தான், தெரியுமா? உங்க மட்டத்துல மட்டுமல்ல, உலக அளவில் பல இடங்கள்ல இரண்டு தரப்புலேயும் பேச வெக்கறதுல, பெண்கள் தான் சாதனையாளர்கள், தெரியுமா?”“இதென்ன கதை, மிஸ்?”“கதை இல்லப்பா, உண்மை. அமைதிப் பேச்சுவார்த்தைங்கற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கியா?”“இரண்டு நாடுகள் சண்டை போட்டுக்கிட்டா, அவங்கள் நடுவுல பேச்சுவார்த்தை நடக்குமே, அதைத்தானே சொல்றீங்க?”“கரெக்ட். அவங்க எப்படி பேச முடியும்? சண்டைதான் போட்டுக்கிட்டு இருக்காங்களே?”“தெரியலையே மிஸ்.”“நடுவுல அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தறதுல ஆர்வமுள்ள தலைவர்கள், அதிகாரிகள், தனிநபர்கள் எல்லோரும் தலையிடுவாங்க. ஐ.நா. அமைப்புலேருந்துகூட, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வாங்க. ஆனால், இதுல பெண்களோட பங்கு ரொம்ப குறைவு. பெரும்பாலும் ஆண்கள் தான் பேச்சுவார்த்தை நடத்துவாங்க. ஆனால், அவங்க நடத்துன பேச்சுவார்த்தை மூலமாக, கிடைக்கும் தீர்வுகள் பல காலம் நீடிச்சு இருக்கிறதில்ல. ஆனால், பெண்கள் நடத்துற பேச்சுவார்த்தைகள் மூலமா கிடைக்கிற தீர்வுகள் பல காலம் நீடிச்சு இருக்குன்னு கண்டுபிடிச்சு இருக்காங்க...”“ஓ! அப்படி என்னென்ன பிரச்னைகள்ல பெண்கள் தலையிட்டு இருக்காங்க மிஸ்?” ஓவியா கேட்டாள்.“வடக்கு அயர்லாந்து, பெட்டி வில்லியம்ஸும் மெய்ரீட் மேகுயிரும் 'கம்யூனிட்டி ஃபார் பீஸ் பீப்பிள்'ங்கற அமைப்பை உருவாக்கினாங்க. அதுல, பத்தாயிரம் கத்தோலிக்க, பிராடஸ்டன்ட் கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களை இணைச்சு அமைதிக்கான பெரும் நடைப்பயணம் மேற்கொண்டாங்க. அயர்லாந்து பிரச்னையில தீர்வு கொண்டுவந்ததற்காக, 1976இல் இவங்க ரெண்டு பேருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைச்சுது.ஆப்பிரிக்க கண்டத்துல இருக்கும் லைபீரியா நாட்டுல, லேமாஹ் போவீங்கறவர், கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்களை ஒருங்கிணைச்சு, ஒரு பெரிய அமைப்பை ஏற்படுத்தினாங்க. அந்த நாட்டின் தலைவராக இருந்த சார்லஸ் டெய்லர் என்பவரை வெளியேத்தி, அமைதியையே கொண்டுவந்தாங்க. மேலும் இந்தப் போராட்டங்களோட தொடர்ச்சியாகத்தான், லைபீரியாவுல முதல் பெண் அதிபர், எல்லென் ஜான்சன் சர்லீஃப் ஆட்சிக்கு வந்தாங்க. இவங்க ரெண்டு பேருடைய முயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக, 2011இல் இவங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.சமீபத்துலகூட இன்னொரு சிறப்பான உதாரணம் உண்டு. ஃபிலிப்பைன்ஸில் அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேஜைக்குக் கூட்டிக்கிட்டு வந்தது ஒரு பெண். மிரியம் கோரோனல்- பெரெர்னு அவங்க பேரு. இன்னும் சொல்லப் போனால், மிக முக்கியமான அமைதி ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்ட முதல் பெண் இவர்தான். ஃபிலிப்பைன்ஸ் அரசுக்கும் அங்கே இருந்த மோரோ இஸ்லாமிக் லிபரேஷன் முன்னணிக்கும் இடையே 40 ஆண்டுகளாக பெரிய மோதல். அவங்க ரெண்டு பேருக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டது மிரியம் தான். இந்த 2019இல் கூட ஒரு சின்ன பொண்ணைத்தான், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செஞ்சு இருக்காங்க, தெரியுமா?”“ஓ!, யாரு மிஸ், அது?”“கிரெட்டா தன்பெர்க்ங்கற 16 வயசுப் பொண்ணு. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்தப் பொண்ணுதான், சுற்றுச்சூழலுக்காகப் போராடி வரார். ஒரு பக்கம் தனிமனிதர்கள் அமைதி வேணும்னு தேடறாங்க. இன்னொரு பக்கம், நாடுகளுக்கு இடையே அமைதி முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு. ஏற்றத்தாழ்வுகள், அதன் மூலமா மோதல், வெறுப்பு, சண்டைன்னு உலகம் ரொம்ப தற்குறித்தனமா இருக்கு. இதுல, முதல்ல காணாமல் போறது, அமைதிதான். இந்த உலகத்துல பிறந்த அனைவருக்கும் இந்த உலகம் சொந்தம். அதன் அத்தனை வளங்களும் சொந்தம். இதுல எதுக்கு மோதல், சண்டை எல்லாம்? தேவையே இல்லையே. இதை ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் உணர்ந்துக்கிட்டு இருக்காங்க. அவங்க மனசுல இருக்கிற அற உணர்வு எல்லாத்தையும் கேள்வி கேட்குது. வலியையும் வேதனையையும் புரிஞ்சுக்கிட்டு இருக்கு. நாம சுதந்திரமா இருக்க, அமைதி அவசியம். அமைதிதான் நாடுகளோட வளர்ச்சிக்கும் அடிப்படை. உன் விஷயத்தையே எடுத்துக்கோயேன். நீயும் ஹரியும் சண்டை போட்டுக்கறதுல என்ன சாதிக்கப் போறீங்க? ஒண்ணுமே இல்ல. உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்கிற ஈகோதான் உங்க சண்டைக்குக் காரணம். அதைப் புரிஞ்சுக்கிட்டு வெளியே வரணும். உங்க ரெண்டு பேரையும் சேர்த்துவைக்கறதால, ஓவியாவுக்கு என்ன கிடைக்கப் போகுது? ஒண்ணுமே இல்ல. ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஓவியா பேசறான்னா, இயல்பாகவே அவ அமைதி விரும்பியா இருக்கான்னு அர்த்தம்.”ஓவியாவை நான் கடிந்துகொண்டது எவ்வளவு அபத்தம் என்பது எனக்கு உறைத்தது.