செயற்கை கருத்தரிப்பில் நண்டு!
ஒவ்வொரு உயிரினமும் பூமியில் வாழ்வதற்கு முட்டிமோதிக்கொண்டு இருக்கிறது. அப்படி ஓர் உயிரினம்தான் குதிரைலாட நண்டு. சுமார் 360 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது. மென்மையான, மணற்பாங்கான இடங்கள் அல்லது சேற்றுமண் கலந்திருக்கும் கடற்கரைப் பகுதிகளே, இந்த வகை நண்டுகளின் வாழிடம். இனப்பெருக்க காலத்தில் மட்டும் கடலுக்குள் செல்லும். இந்தியாவில் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களை ஒட்டியுள்ள கடற் பகுதிகளில் இந்த வகை நண்டுகளைப் பார்க்கமுடியும். அழிந்துவரும் உயிரினம்இதனுடைய வாழிடம் சுருங்கிக்கொண்டே வருகிறது. இவை, மீன்பிடிவலைகளில் சிக்கி அதிக அளவில் இறக்கின்றன. அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்களின் பட்டியலில் இது சேர்க்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டாலும், மீன் வலைகளில் சிக்குவதைத் தடுக்க முடியவில்லை. புதிய முயற்சிஇதைத் தொழில்நுட்ப முறையில் பாதுகாக்க முடியுமா என்ற ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. அதில், ஒடிசா மாநிலத்திலுள்ள ஃபகிர் மோகன் பல்கலைக்கழகத்தின் (Fakir Mohan University) உயிரி தொழில்நுட்பத்துறை ஆய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சியும் ஒன்று. செயற்கை கருத்தரிப்பு மூலம் குதிரைலாட நண்டுகளின் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். கடந்த 2017இல் குதிரைலாட நண்டுகளுக்கான சிறப்பு ஆராய்ச்சிப் பிரிவை உருவாக்கினார்கள். பரிசோதனை முயற்சியாக செயற்கை கருத்தரிப்பு (Artificial breeding) மூலம் குதிரைலாட நண்டுகளை இனப்பெருக்கம் செய்தனர். ஆராய்ச்சிக்கூடத்தில் லார்வாக்களை வளர்த்தார்கள். நண்டுகள் வளரத் தொடங்கியதும் இயற்கை வாழ்விடமான கடலில் கொண்டுபோய் விட்டார்கள். இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றிபெற்றது. இந்த ஆண்டு டிசம்பருக்குள் ஒரு லட்சம் குதிரைலாட நண்டுகளை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களது இலக்கு.எதனால் இந்த ஆராய்ச்சி?ஒடிசா கடல் பகுதியில், இருபது ஆண்டுகளுக்குமுன் குதிரைலாட நண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. மீன்பிடி தொழில் வணிகமயமானபின், நூற்றுக்கணக்கான நண்டுகள் மீன்வலைகளில் சிக்கி இறந்தன.இந்த வகை நண்டுகளில் இருந்து புற்றுநோய்க்கான மருந்து கிடைப்பதால், இவை சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. புதிய அணுகுமுறையின் மூலம், இந்த வகை நண்டுகள் காப்பாற்றப்படும் என்று நம்பலாம்.