உள்ளூர் செய்திகள்

இருட்டு எனக்குப் படிக்கும்! (1)

கண்ணன், 'ஈ' என்று சிரித்தான். ரவி மொத்தப் பற்களையும் காட்டினான். ராகினி, வலக்கையின் ஆள்காட்டி விரலையும் சுண்டு விரலையும் மட்டும் உயர்த்தி 'ஸ்டைல்' காட்டியபடி சிரித்தாள். குமார், ரொம்ப அகலமாகச் சிரித்தான். ஷீலு, செல்ஃபீ ஸ்டிக்கில் பொருத்திய மொபைல் போன் திரைக்குள் எல்லாரையும் அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அந்த ஏரியாவே சுட்டிப் பிள்ளைகளின் சிரிப்பால் நிறைந்திருந்தது. 'யார் சிரிப்பது?' என்று பார்ப்பது போல், பக்கத்தில் இருந்த புங்கை மரம் குனிந்தது. காற்று. “சீக்கிரம் க்ளிக் பண்ணு ஷீலு, சிரிச்சுக்கிட்டே இருந்து வாய் வலிக்குது” என்று ராகினி சொல்ல, அதற்கும் ஒரு பெரிய சிரிப்பு அலை எழுந்தது. ஜோ மட்டும் சிரிக்கவில்லை.கேமராவை முறைப்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தான்.“ஏய்… இவன் என்னிக்கு சிரிச்சான்? இவன் சிரிக்கிறவரைக்கும் காத்துக்கிட்டிருந்தா, காட்டெருமைக் கூட்டத்தோடதான் செல்ஃபீ எடுக்கணும். சட்டுனு எடு…” கண்ணனின் குரல் அதட்டியது. “சொல்றான் இல்ல, சிரியேண்டா, வெளிச்சம் குறைஞ்சுட்டு இருக்கு…”ஜோ சிரிக்கவில்லை. “இவன் சிரிக்கலைன்னா என்ன, எப்பப் பாத்தாலும் திகிலடிச்ச மாதிரியே இருக்கான். இவனோட மூஞ்சியைப் பாத்தா நமக்கெல்லாம் சிரிப்பு வருதே, போதாதா?” என்றவன் ரவி.ராகினியிடம் இருந்து பதில் குரல் வந்தது, “இவனோட முழுப்பேரு ஜோக்கரா இருக்கும். செல்லமா, ஜோன்னு கூப்பிடுறாங்க போலிருக்கு.”எல்லாரும் சிரித்தார்கள். ஷீலுவின் முகம் சுருங்கியது. “இவ்வளவு கேலி பண்றோம். ஏதாவது கமென்ட் பண்றானா பாரேன்…” என்றான் ரவி.“கமென்ட் பண்றதா… ஒரு லைக் கூடப் போட மாட்டேங்கிறான்…” என்று சிரித்தாள் ராகினி.ஷீலு மொபைல் கேமராவில் 'க்ளிக்' செய்தபடியே இவ்வளவையும் கேட்டுக்கொண்டு இருந்தாள். மொபைலின் ஐந்தரை அங்குலத் திரை முழுக்க சுட்டிகளின் முகங்கள் சிரித்தன. ஜோவின் முகம் மட்டும் உம்மணாமூஞ்சியாக இருந்தது.போட்டோ எடுத்துக்கொண்டு இருந்த ஷீலு, முக வாட்டத்தோடு பேசினாள். “சும்மா இருங்கப்பா… மேகமலைக்கு நாம வரலாம்னு ஐடியா குடுத்ததே எங்க அண்ணன் ஜோதானே..?”“அதனாலதான் கிண்டல் பண்றோம்” என்றான் கண்ணன். “டூர் வர்றதுக்கு அருமையான இடம் சொன்னான். நாம எல்லாம் ஜாலியா இருக்கோம். அவன் மட்டும் உம்முன்னு இருக்கான் பாரேன்…” ஜோவின் பார்வை, இயற்கைக் காட்சிகளின் மீது இருந்தது. இடப்பக்கம், ரொம்ப உயரமான சுவர் போல மலை. வலப்பக்கம் கிடுகிடு பள்ளம். அந்த ஆழத்தில் புகைப் படலம் பரவியிருந்தது போல மேகக் கூட்டம். சுட்டிகளின் தலைகளுக்கு மேலேயும் மேகக் கூட்டம்தான் இருந்தது.அந்த மேகங்களின் நிறம், வெளிர் சாம்பல், சாம்பல், அடர் சாம்பல் என்று இருட்டின் வெவ்வேறு சாயல்களைக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் மின்னலும் இடியும் மழையும் பொதிந்திருந்தன. ஓய்வு எடுப்பதைப் போல அமைதியாக இருந்தன. விசில் சத்தம் கேட்டதும் ஓடத் தயாரான நிலையில் நிற்கும் ஓட்டப் பந்தயப் பிள்ளைகளைப் போலவும் இருந்தன. 'மேகம், காற்று எல்லாம் தங்களுக்குள் பேசிக்கொள்ளுமா?' ஜோவின் மனதில் யோசனை ஓடியது. அப்போது, காற்று தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொண்டது. “அலுப்பா இருக்கு” என்றது. மின்னல் நிமிர்ந்து காற்றைப் பார்த்தது.“நாம எல்லாம் சேர்ந்து கீழே இறங்கி நாளாச்சு. ஒரு சூறாவளி விளையாட்டு விளையாடுவோமா?” என்றது காற்று.“எனக்குக் களைப்பா இருக்கு” மின்னல் சொன்னது. “என்னப்பா இடி, நீயாவது என்கூட வரியா?” காற்றின் குரலில் கேலி தெரிந்தது. “முன்னால மின்னல் போகணும். பின்னால நான் வரணும். அது இல்லாம நான் இல்லையே…” என்றது இடி. “ஆனாலும்…” என்று சொல்லி நிறுத்தியது காற்று. “எனக்கு இப்போ ஏதாச்சும் செய்யணும். நான் ஊதப் போறேன்…” என்று சொல்லிக்கொண்டே உதடுகளைக் குவித்தது. “ஊஊஊஊஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்…..”மெல்ல ஒலித்த காற்றின் சத்தம், சில விநாடிகளிலேயே இரைச்சலாக மாறியது. மின்னல் துள்ளி எழுந்தது. தொடர்ந்து இடி அங்கும் இங்குமாக உருள ஆரம்பித்தது. 'கடகடா… முடமுடா…' என்று சத்தம். மேகத்தை விட்டு நழுவியது மழை. வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜோவின் காதில் 'சரசர' என்று ஒரு சத்தம் கேட்டது. பார்த்தான். ஒரு குரங்கு அண்ணாந்து பார்த்தபடியே ஒரு மரத்தின் மீது ஏறியது. அதன் கை வழுக்கியது. குரங்கு விழுந்துவிடுமோ என்று ஜோ பதறினான். ஆனால், அது லாகவமாக ஒரு மெலிந்த கிளையைப் பிடித்து ஊஞ்சல் ஆடுவது போல் தொங்கியது. பிறகு விறுவிறு என்று மரத்தின் மேல் ஏறியது. ஜோவைப் பார்த்து, 'தப்பிச்சுட்டேன் பாத்தியா?' என்பது போல் சிரித்தது. ஜோவுக்கும் சிரிப்பு வந்தது. 'ஹாஹாஹா' என்று சிரித்தான். கைகொட்டிச் சிரித்தான். குதித்துக் குதித்துச் சிரித்தான். எல்லாரும் ஜோவைப் பார்த்தார்கள். பக்கத்திலேயே நின்றிருந்த ஷீலு, அண்ணன் சிரிப்பதை, போட்டோ எடுத்தாள். இவர்கள் வந்த பெரிய காரின் ஹாரன் இருமுறை ஒலித்தது. “பசங்களா… விளையாடினது போதலையா? நைட் ஆகப்போகுது…” என்று டிரைவரின் குரல் சன்னமாகக் கேட்டது.“இங்கே சீக்கிரமே இருட்டிடும் இல்ல…?” அடித்தொண்டையில் சொன்னான் ஜோ. அவன் முகத்தில் புன்னகை. “எனக்கு இங்கேயே இருந்துடலாம் போல இருக்கு” என்று முணுமுணுத்தது யாருக்கும் கேட்கவில்லை.சுட்டிகள் கூட்டத்தில் கொஞ்சம் பெரியவனான கண்ணன், ஜோவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, காரின் அருகில் போனான். ஜோவை வண்டிக்குள் உட்கார வைத்தான். கதவை மூடினான். மற்றவர்களை அழைத்து வரப் போனான். அவன் போனதும், ஜோ, காரின் இன்னொரு கதவைத் திறந்தான். இறங்கினான். அடர்த்தியாக இருந்த மரங்களைப் பார்த்து நடந்தான். காரின் என்ஜினில் ஏதோ பார்த்துக்கொண்டு இருந்த டிரைவர், ஜோ இறங்கிப் போவதை கவனிக்கவில்லை.தனக்குள் சிரித்துக்கொண்டான் ஜோ. 'இப்போ, ஒரு ஓநாய் மனிதன் இங்கே வந்தா எப்பிடி இருக்கும்…' என்று நினைத்துக்கொண்டான். மரங்களுக்கு இடையில் நடந்து போனான். ஜோ போவதை இரண்டு கண்கள் உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தன.'கிர்ர்ர்ர்' என்று ஓர் உறுமல் சத்தம் சற்று தூரத்தில் கேட்டது. பொறுங்கள்... ஜோவின் உண்மையான ஆபத்து, அந்தக் கண்கள் அல்ல.(தொடரும்)ரமேஷ் வைத்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !