அறிவுடையோர்க்கு தேவையில்லை ஆற்றுணா?
வெளியூர் செல்கிறீர்கள்; என்னவெல்லாம் எடுத்து வைத்துக்கொள்வீர்கள்?செல்லும் இடத்தில் அணிவதற்கான உடைகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, வழியில் வாசிக்கப் புத்தகங்கள், செல்பேசி, அதற்கு மின்சாரம் ஏற்றும் கருவி...இவை போதுமா? வழியில் சாப்பிட உணவு வேண்டாமா? அதைக் கொண்டு செல்லமாட்டீர்களா?'அட, உணவையெல்லாமா கொண்டுபோகணும்?' என்பார்கள் இன்றைய மக்கள். காரணம், நாம் எந்த வெளியூருக்குச் சென்றாலும் வழியெங்கும் உணவகங்கள் உள்ளன. எப்போது பசித்தாலும் சட்டென்று ஓர் உணவகத்தினுள் நுழைந்து சாப்பிடலாம்.ஆனால் அன்றைக்கு, ஊரில் இத்தனை உணவகங்கள் இல்லை. ஆகவே, வெளியூர் செல்லும் மக்கள் நினைத்த நேரத்தில் சாப்பிடுவதற்கு வழியில்லை. ஆகவே, அவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவையும் பொட்டலம் கட்டிக்கொண்டு சென்றார்கள். அதன்பிறகு, வழியில் எப்போதாவது பசித்தால் சட்டென்று அதனை அவிழ்த்துச் சாப்பிட்டார்கள்.இவ்வாறு கட்டிக்கொண்டு செல்லும் சாப்பாடு என்பதால் அதனைக் 'கட்டுச்சோறு' என்று அழைத்தார்கள். இதன் இலக்கியப்பெயர், ஆற்றுணா.ஆறு + உணா => ஆற்று உணா => ஆற்றுணாஇங்கே 'ஆறு' என்ற சொல் வந்திருப்பதால், நதியில் குளித்துவிட்டுதான் இந்த உணவைச் சாப்பிடவேண்டும் என்று நினைத்துவிடவேண்டாம். 'ஆறு' என்ற சொல்லுக்கு 'வழி' என்ற பொருளும் உண்டு.எடுத்துக்காட்டாக, உங்களுக்கு 'வரலாறு' என்ற பாடம் உள்ளதல்லவா? அது வரல் + ஆறு என்று பிரியும். அதாவது, வந்த வழி, இதுவரை நடந்த நிகழ்வுகளைப் படிக்கிறோம். ஆகவே, அது வரலாறு.அதுபோல, இங்கே 'ஆறு' என்ற சொல் வெளியூர் செல்லும் வழியைக் குறிக்கிறது. அங்கே சாப்பிடும் உணவுதான் ஆற்றுணா.இதனை 'உணவு' என்று சொல்லாமல் 'உணா' என்று சொல்வது ஏன்?தமிழில் 'வு' என்ற விகுதியில் நிறைவடையும் பல சொற்களில் அந்த விகுதி கெட்டு, அதற்கு முந்தைய குறிலெழுத்து நீண்டு நெடிலாக மாறும். எடுத்துக்காட்டாக:நிலவு => நிலாகனவு => கனாஇரவு => இராவினவு => வினாஅதுபோல, உணவு => உணாஆக, அன்றைக்கு வெளியூர் சென்ற தமிழர்கள் பலர் 'ஆற்றுணா'வைக் கட்டிக்கொண்டுதான் கிளம்பியிருக்கிறார்கள். அதுவே அவர்களுடைய பசியைத் தீர்த்திருக்கிறது.ஆனால், சிலர்மட்டும் அப்படி 'ஆற்றுணா'வைக் கட்டிக்கொள்ளவில்லை. அப்படியே கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.ஏன் அப்படி? அவர்களுக்குப் பசிக்காதா?பசிக்கும். ஆனால், அப்படிப் பசிக்கும்போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்றுச் சாப்பாடு போடுவார்கள். ஆகவே, அவர்களுக்கு ஆற்றுணா தேவையில்லை.காரணம், அவர்கள் நன்கு படித்தவர்கள். அவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஆற்றுணா கட்டிக்கொண்டு கிளம்பவேண்டியதில்லை, எங்கும் உணவு கிடைக்கும்.இந்தச் சுவையான விஷயத்தைச் சொல்லும் பாடல், 'பழமொழி நானூறு' தொகுப்பில் உள்ளது. இதனை எழுதியவர் முன்றுறையரையனார்:ஆற்றவும் கற்றார், அறிவுடையார், அஃது உடையார்நால் திசையும் செல்லாத நாடு இல்லை, அந்நாடுவேற்று நாடு ஆகா, தமவேயாம், ஆயினால்ஆற்று உணா வேண்டுவது இல்நன்கு கற்றவர்கள், அறிவுடையவர்கள் நான்கு திசைகளிலும் எல்லா நாடுகளுக்கும் செல்வார்கள். அந்த நாடுகளெல்லாம் வேற்று நாடுகளே அல்ல. அவர்களுடைய நாடுகள்தான். ஆகவே, அவர்களுக்கு எங்கும் உணவு கிடைக்கும், ஆற்றுணா தேவையில்லை.அப்புறமென்ன? நன்றாகப் படியுங்கள். அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். எல்லாத் திசைகளிலும் உங்களுக்கு உணவும் புகழும் செல்வமும் குவியும்!- என். சொக்கன்