உள்ளூர் செய்திகள்

தேசப் பணியில் நாட்டு நாய்கள்

காவல் துறையில் மோப்ப நாய்கள் இருப்பது போலவே இந்திய ராணுவத்திலும் பயிற்றுவிக்கப்பட்ட நாய்களின் பிரிவு ஒன்று உண்டு. ரோந்துப் பணிகள், வெடிபொருட்களை கண்டுபிடிப்பது போன்ற பணிகளில் இந்நாய்கள் ராணுவத்தினருக்கு உதவும். இந்த நாய்களுக்கு பயிற்சியளிக்கும் படைப்பிரிவு (Remount Veterinary Corps - RVC) மீரட் நகரில் உள்ளது. இதுவரை இந்திய ராணுவத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார் போன்ற வெளிநாட்டு நாய்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் முதல் முறையாக இந்தியாவின் நாட்டு நாய்களையும் இப்பிரிவில் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதோல்(Mudhol) என்றழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நாய்களுக்கே தேசத்திற்குச் சேவையாற்றும் முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீரட்டில் உள்ள பள்ளியில் பயிற்சி பெற்ற 6 முதோல் நாய்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்நிலையில் மேலும் சில முதோல் நாய்கள் தேவையென்று இந்திய ராணுவம், கர்நாடக விலங்குகள் நலத்துறையிடம் கேட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !