போகாதீங்க சார்!
காலங்காலமாக உயர்த்திச் சொல்லப்படும் ஆசிரியர் - மாணவர் உறவுக்கு உதாரணமாய் ஆகியிருக்கின்றனர் ஆசிரியர் பகவானும் அவர்தம் மாணவர்களும். போகாதீங்க...போகாதீங்க... என்று தம் ஆசிரியரை ஆரத்தழுவி அழும் அம்மாணவர்களின் இதயக்குரல், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. 'குரு - சிஷ்யர்கள்' என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்' என்று எல்லோருமே சிலாகித்துப் பேசுவதற்குக் காரணமாக அமைந்தது எது? திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் கிராம அரசுப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுபவர் கோ. பகவான். ஐந்து ஆண்டுகளாக அங்கு பணியாற்றிய அவருக்கு, வேறொரு பள்ளிக்குப் பணிமாற்றம் செய்யப்படுவதாக செய்தி கிடைத்தது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம் என்பது, வழக்கமாக வரும் செய்திதான். ஆனால், அந்தப் பள்ளி மாணவர்களுக்கோ அது அளவில்லாத அதிர்ச்சி. பணியிடமாற்றச் செய்தி அளித்த சோகச் சுமையைத் தாங்க முடியாமல் தவித்த அம்மாணவர்கள், வாய்விட்டு அழ ஆரம்பித்தனர். இதைப் பார்த்து ஆசிரியர் பகவானும் அழத் தொடங்கினார். மாணவர்கள் அணையாய் நின்று, ஆசிரியரை வெளியே விடாமல் நடத்திய பாசப்போராட்டத்தைக் காணொளியில் கண்ட அனைவருமே கலங்கித்தான் போனார்கள். செய்தி ஊடங்கள் வழியே வைரலாகப் பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்தச் சம்பவம். நாடெங்கும் ஆச்சரியத்தையும், ஆசிரியர் பணி குறித்த சுவாரஸ்யமான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் சொல்லும் செய்திதான் என்ன? ஆசிரியர் பகவான் பணிபுரியும் பள்ளி மாணவர்களிடம் பேசினோம்... “பகவான் சார், வேறு பள்ளிக்கூடத்துக்கு எங்களைப் பிரிந்து செல்லப்போகிறார் என்று கேள்விப்பட்டோம். அன்று என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. அவர் ஒரு சராசரி ஆசிரியராக எங்களோடு பழகவில்லை. எங்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவார். தோள் மேல் கைபோட்டுப் பேசுவார். அவரை எப்போதும் எளிமையாக அணுக முடியும். அதுதான் அவரிடம் பிடித்த விஷயமே. ஆங்கிலப் பாடத்தின் மீது எங்களைப் போன்ற கிராம மாணவர்களுக்கு எப்போதும் ஒரு பயம் உண்டு. அதை அகற்றியவர் அவர்தான். எங்கள் மீது அவர் காட்டிய அக்கறையைத்தான், அன்று கண்ணீராகவும், கதறலாகவும் வெளிப்படுத்தினோம். நன்றாகப் படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பார். அதேசமயம், பாடங்களைப் புரிந்துகொள்வதில் சிரமப்படும் மாணவர்களிடத்தில் கோபம் கொள்ளவே மாட்டார். பொறுமையோடும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையோடும் எங்களை அணுகுவார்” என்கின்றனர் மாணவர்கள். இதில், மாணவ, மாணவியர் பேதமின்றி எல்லோருமே ஆசிரியர் பகவான் மீது பாசப்பிணைப்புடன் இருக்கின்றனர்.“ஆசிரியர் என்றாலே மாணவர்களுக்கு பயம் வரவேண்டும். இருதரப்புக்கும் இடையே இடைவெளியைப் பேண வேண்டும்.. என்பது போன்ற கருத்துகளில் எனக்கு நம்பிக்கையில்லை. மாணவர்களை நண்பர்களைப் போல்தான் கருதினேன். அதுதான் அவர்கள் நன்றி செலுத்தக் காரணமாக அமைந்தது என்பதை இப்போது உணர்கிறேன்” என்கிறார் ஆசிரியர் பகவான். மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவச் செலவுகள் செய்திருக்கிறார். அவர்களது குடும்பப் பின்னணி பற்றி அறிந்து வைத்திருக்கிறார். அவர்கள் அன்புடன் அளிக்கும் உணவை ஏற்று உண்டிருக்கிறார். அடிக்கடி நீதிக்கதைகளைக் கூறுவதோடு, தவறு செய்யும்போது தனியே அழைத்து அன்பாக அதை திருத்த முயற்சி செய்திருக்கிறார். இவையெல்லாம் ஆசிரியர் பகவானிடம் தங்களுக்குப் பிடித்த விஷயமாக மாணவர்கள் கூறுகின்றனர். பிரிவில் அழுகை என்பது திடீரென வந்துவிடாது; அதற்கு ஆழமான அர்த்தபூர்வமான உறவு அவசியம் என்பதை ஆசிரியர் பகவான், மாணவர்கள் விஷயத்தில் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது.