உள்ளூர் செய்திகள்

நேர்த்தியும் மிடுக்கும்!

பிறப்பு: 27.04.1945மறைவு : 21.12.2018புதுவையில் பிறந்த பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் பிரபஞ்சன்.'வானம்பாடி' கவிஞர்களின் தாக்கத்தால், ஆரம்பத்தில் கவிதைகள் எழுதினார் பிரபஞ்சன். வைத்தியலிங்கம் என்ற தன் பெயரை, பிரபஞ்சக்கவி என்று மாற்றிக்கொண்டு எழுதத் தொடங்கினார். ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு, அவர் கவிதை எழுதுவதை விட்டுவிட்டார். ஆனாலும், அந்தப் புனைப்பெயரை விட்டுவிடாமல் 'பிரபஞ்சன்' என்று சுருக்கி, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் என எழுத்தின் எல்லைப் பரப்புகளை விரிவுபடுத்திக் கொண்டார்.கருத்து சுதந்திரம், மொழியுரிமை, சாதி எதிர்ப்பு, மத நல்லிணக்கம் இவற்றிற்காக இலக்கிய வெளியில் இடையறாமல் இயங்கினார்.அடிமட்ட மனிதர்களின் உணர்வை, அவர்களின் ஆற்றாமையை தன் எழுத்தில் கொண்டு வந்தார்.பெண்களின் நுட்பமான மனச்சிக்கல்களை, அவர்களின் உரிமைகளை, போராட்டங்களை எழுதினார். பெண் உரிமைக் கருத்துகளை தன் படைப்பில் அதிகம் வெளிப்படுத்தினார். குடும்ப அமைப்பு முறையில் எல்லா சுமைகளையும் பெண்களின் தலை மீது வைப்பதை நிறுத்த வேண்டும். சமைப்பது மட்டும்தான் அவர்களின் வாழ்நாள் கடமையா? என்று பெண்களே கேட்கத் தயங்கிய கேள்வியை எழுப்பினார். இதிகாச பாத்திரங்களை எடுத்துக்கொண்டு விமர்சனத்துக்கு உள்ளாக்கினார். நுட்பமான கேள்விகளை முன் வைத்தார். மகாபாரதப் பெண்கள் குறிப்பாக காந்தாரி, திரெளபதி, குந்தி ஆகியோரின் மனநிலையை அந்தப் பெண்களே அப்படி யோசித்திருப்பார்களா என்ற அளவிற்குப் புதியதோர் கோணத்தில் வெளிப்படுத்தினார்.அவர் பல பத்திரிகைகளில் பணியாற்றினார். வணிகத்தைக் காரணம் காட்டி, அவரது எழுத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட போதெல்லாம், அவர் அங்கிருந்து வெளியேறவும் செய்தார். அவர் ஓர் உணவுப் பிரியர். குறிப்பாக காபி பிரியர். தன்னை பாண்டிச்சேரிக்கு காணவரும் அன்பர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கடையில், காபி வாங்கித் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.'தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!' என்று கூறிய பிரபஞ்சன், பாண்டிச்சேரியின் வரலாற்றை மையமாக வைத்து, 'வானம் வசப்படும்' என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதினார்.அந்த நாவலுக்கு 1995-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.உடல்நலம் குன்றியிருந்தபோது, பல நண்பர்கள் பிரபஞ்சனை சந்தித்தனர். தாம் அடுத்து எழுதவிருக்கும் நூலைப் பற்றி அவர் பேசிக் கொண்டு இருந்தார். அதற்கு அவர் வைத்திருந்த தலைப்பு 'பயணம் போன தமிழ்' என்பதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !