எம்மொழி செம்மொழி: கை கொடுத்தான், கைக்கொடுத்தான் - எது சரி?
கைகொடுத்தான், கைக்கொடுத்தான் - எது சரி என்று பலருக்கும் ஓர் ஐயம் இருக்கும். படிக்கும்போது இரண்டுமே சரி என்பதைப் போல் தோன்றும். அது உண்மையும்கூட.ஒரே எழுத்தாலான சொல் தனித்து நில்லாமல் அடுத்த சொல்லோடு ஒட்டிக்கொள்ளும். ஓரெழுத்து ஒருமொழி என்று அச்சொற்களைச் சொல்வார்கள். அவை தனித்து நின்றால் செய்யுட்களில் சீர் பிரிக்கும்போது இடர்ப்பாடு தோன்றும். அதனால் அடுத்துவரும் சொல்லோடு ஒட்டிக்கொள்ளும் இயல்பை வகுத்தார்கள்.அதனால் தான் ஓர் எழுத்தால் ஆன பெயர்ச்சொல் அடுத்தொரு வினைச்சொல்லைக் கண்டதும் ஒட்டிக்கொள்கிறது.கைக்கொடுத்தான்பூப்பறித்தான்பாப்புனைந்தான்தீப்பிடித்ததுஓரெழுத்து ஒருமொழியாக இவ்வாறு வலிமிகுந்து தோன்றுகின்றன. இச்சொற்களை இன்னொரு வடிவத்திலும் பார்க்கலாம்.கை கொடுத்தான் என்று பிரித்து எழுதினால் 'கையைக் கொடுத்தான்' என்ற பொருளைத் தரும். 'ஐ' என்ற வேற்றுமை உருபு மறைந்து வருமாறு கை கொடுத்தான் என்றும் எழுதுவார்கள். அதையும் பிழையென்று சொல்வதற்கில்லை. 'களை பறித்தான்' என்னும்போது, 'களையைப்பறித்தான்' என்றுதானே பொருள் கொள்கிறோம்? அவ்வாறு கை கொடுத்தான் என்னும்போது 'கையைக் கொடுத்தான்' என்று பொருள் கொள்வோம்.பூ பறித்தான் என்று பிரித்து எழுதினால் பூவைப் பறித்தான் என்று பொருள் கொள்வோம்.இந்நிலை பெயரும் வினையுமாக வரும் சொற்களில் தான் தோன்றும். பெயரும் பெயருமாக வரும் தொடர்களில் கேள்வியே இல்லை. எந்தத் தயக்கமும் இல்லாமல் வலிமிகுந்து விடும். அதாவது ஒற்று இடவேண்டும். உதாரணம்: பூப்பறிப்பு, கைக்குத்தல், தீப்பொறி, நாப்பிறழ்வு, ஈக்காடு.அதே நேரத்தில், கைகால் என்னும் சொற்றொடரில் வலிமிகவில்லை. கை, கால் ஆகிய இரண்டும் பெயர்ச்சொற்கள்தாம். ஏன் மிகவில்லை, தெரியுமா? கைகால் என்னும் சொற்றொடர் 'கையும் காலும்' என்னும் பொருளில் வருகிறது. அச்சொற்களோடு 'உம்' மறைந்து வருவதால், உம்மைத்தொகை ஆகிவிடும். உம்மைத்தொகைக்கு வலிமிகாது.- மகுடேசுவரன்